எசேக்கியேல் 38:1-4
எசேக்கியேல் 38:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகுதேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும் குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.
எசேக்கியேல் 38:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, மேசேக், தூபால் என்போரின் பிரதம இளவரசனான கோகு, என்பவனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பு. மாகோக் நாட்டைச் சேர்ந்த அவனுக்கு விரோதமாக இறைவாக்கு உரை. நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மேசேக், தூபால் நாடுகளின் பிரதம இளவரசனான கோகே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். நான் உன்னைத் திருப்பி, உன் தாடைகளில் கொக்கியை மாட்டி, உன்னை உனது முழு இராணுவத்தோடும் உன் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவருவேன். அத்துடன் உன் குதிரைகளும், ஆயுதம் தாங்கிய உன் குதிரைவீரரும், பெரிதும் சிறிதுமான கேடயங்கைளப் பிடித்த பெருங்கூட்டமும் உன்னுடன் வருவார்கள். அவர்கள் அனைவரும் வாளைவீச ஆயத்தமாய் வருவார்கள்.
எசேக்கியேல் 38:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, மேசேக் தூபால் இனத்தாரின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், மேசேக் தூபால் இனத்தாரின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். நான் உன்னைத் திருப்பி, உன்னுடைய வாயில் கடிவாளங்களைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் படையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும், சிரியகேடகங்களும் பெரிய கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படச்செய்வேன்; அவர்கள் எல்லோரும் வாள்களைப் பிடித்திருப்பார்கள்.
எசேக்கியேல் 38:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருடைய செய்தி என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, மாகோகு நாட்டில், கோகைப் பார். அவன் மேசேக், தூபால் நாட்டினரின் முக்கியமான தலைவன். கோகுக்கு விரோதமாக எனக்காகப் பேசு. கர்த்தரும் ஆண்ட வருமானவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவன்! ஆனால் நான் உனக்கு விரோதமானவன். நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள்.