எசேக்கியேல் 36:35-38
எசேக்கியேல் 36:35-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பாழாக்கப்பட்டிருந்த இந்நாடு ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்று. பாழாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பாழிடங்களாய்க் கிடந்த பட்டணங்கள், இப்பொழுது காவலரண் செய்யப்பட்ட குடியிருப்புகளாகிவிட்டன என்று சொல்வார்கள்.” அப்பொழுது அழிக்கப்பட்டதைத் திரும்பவும் கட்டியதும், பாழாய்க் கிடந்ததை திரும்பவும் பயிரிட்டதும் யெகோவாவாகிய நானே என்பதை உன்னைச்சூழ இருக்கும் நாடுகள் அறிந்துகொள்ளும். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்; நானே இதைச் செய்வேன்.’ “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேலின் வேண்டுதலுக்கு இன்னொருமுறையும் நான் இடமளித்து அவர்களுக்காக இதைச் செய்வேன். அவர்களுடைய மக்களைச் செம்மறியாடுகள்போல எண்ணற்றவர்களாக்குவேன். பண்டிகைக் காலத்தில் எருசலேமுக்குக் கொண்டுவரப்படும் பலிக்கான மந்தைகளைப்போல், அவர்கள் எண்ணற்றவர்களாயிருப்பார்கள். பாழாக்கப்பட்ட பட்டணங்கள் இவ்விதமாய் மக்கள் திரளால் நிரப்பப்படும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
எசேக்கியேல் 36:35-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாழாய்க்கிடந்த இந்த தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலானது என்றும், பாலைவனமும் பாழும் அழிக்கப்பட்டும் இருந்த பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். யெகோவாகிய நான் அழிக்கப்பட்டவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான தேசங்கள் அறிந்துகொள்வார்கள்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களுக்காக நான் இதை நன்மைச்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்செய்யவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதர்களைப் பெருகச்செய்வேன். பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்செய்யப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாக இருக்கிறதோ, அப்படியே பாலைவனமாக இருந்த பட்டணங்கள் மனிதர்களின் மந்தையால் நிரம்பி இருக்கும்; அதினால் நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 36:35-38 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்கள் சொல்வார்கள், ‘முன்பு இந்நிலம் பாழாகக் கிடந்தது, ஆனால் இப்பொழுது ஏதேன் தோட்டம் போல் ஆகியிருக்கிறது. நகரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவை பாழாகி வெறுமையாயிற்று. ஆனால் இப்பொழுது அவை பாதுகாக்கப்பட்டன. அவற்றில் ஜனங்கள் வாழ்கின்றனர்.’” தேவன் சொன்னார்: “பின்னர் உன்னைச் சுற்றியுள்ள அந்நாடுகள் நானே கர்த்தர் என்பதையும் நான் பாழான இடங்களை மீண்டும் கட்டினேன் என்பதையும் அறிவார்கள். காலியாக இருந்த இந்த நிலத்தில் நான் நட்டுவைத்தேன். நானே கர்த்தர் நான் இவற்றைக் கூறினேன் இவை நடக்கும்படிச் செய்வேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் ஜனங்களையும் கூட என்னிடம் வந்து தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க அனுமதிப்பேன். அவர்கள் மேலும், மேலும் பெருகும்படிச் செய்வேன். அவர்கள் ஆட்டு மந்தைகளைப் போன்றிருப்பார்கள். எருசலேமில் அதன் சிறப்பான திருவிழாக்களில் வருகிற மந்தைக் கூட்டம்போன்று ஜனங்கள் மிகுதியாக இருப்பார்கள். அதைப்போலவே நகரங்களும் பாழான இடங்களும் ஜனங்கள் கூட்டத்தால் நிரம்பும். பின்னர் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
எசேக்கியேல் 36:35-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன். பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.