எசேக்கியேல் 36:16-38
எசேக்கியேல் 36:16-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது. ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி, அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன், அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்தநாமத்தினிமித்தமாகவே இரங்குகிறேன். ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தம் அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன். புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து, உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப்பண்ணி, நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள். நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும். பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும். பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன். பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 36:16-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மீண்டும் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்கள் தம் சொந்த நாட்டில் வாழும்போது, அவர்கள் அதைத் தங்கள் நடத்தைகளினாலும், செயல்களினாலும் அசுத்தப்படுத்தினார்கள். எனது பார்வையில் அவர்களின் நடத்தை பெண்ணின் மாத விலக்குபோல் இருந்தது. அவர்கள் தங்கள் நாட்டில் இரத்தம் சிந்தியதாலும், நாட்டைத் தங்கள் விக்கிரகங்களால் அசுத்தப்படுத்தியதாலும், நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றினேன். நான் அவர்களை நாடுகளுக்குள்ளும் சிதறப்பண்ணினேன். அவர்கள் தேசங்களுக்கிடையே கலைந்துபோனார்கள். அவர்கள் நடத்தைகளுக்கும், செயல்களுக்கும் தக்கதாக நான் அவர்களை நியாயந்தீர்த்தேன். நாடுகளின் மத்தியில் அவர்கள் எங்கெங்கு சென்றார்களோ, அங்கெல்லாம் என் பரிசுத்த பெயரை அசுத்தப்படுத்தினார்கள். ஏனெனில் ‘இவர்கள் யெகோவாவினுடைய மக்கள், என்றாலும் இவர்கள் அவருடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது’ என்பதாக அவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டது. இஸ்ரயேல் குடும்பத்தார் சென்றிருந்த நாடுகளின் மத்தியில் அவர்கள் அசுத்தப்படுத்திய எனது பரிசுத்த பெயரைக்குறித்து நான் அக்கறையாயிருந்தேன். “ஆதலால், இஸ்ரயேல் குடும்பத்திற்கு நீ கூறவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இக்காரியங்களை நான் செய்யப்போவது உங்கள் நிமித்தமல்ல, என் பரிசுத்த பெயரின் நிமித்தமே. என் பெயரையே நீங்கள் போன நாடுகளுக்குள் எல்லாம் அசுத்தப்படுத்தினீர்கள். நாடுகளின் மத்தியில் அசுத்தப்படுத்தப்பட்டதும், அவர்கள் மத்தியில் நீங்கள் அசுத்தப்படுத்தியதுமான என் மகத்துவமான பெயரின் பரிசுத்தத்தை நான் காண்பிப்பேன். அவர்கள் கண்களுக்கு முன்பாக, உங்கள் மூலமாக நான் என்னைப் பரிசுத்தராய்க் காண்பிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். “ ‘நான் உங்களை நாடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவேன். எல்லா நாடுகளிருந்தும் உங்களை நான் கூட்டிச்சேர்த்து, மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன். நான் உங்களுக்குப் புதியதோர் இருதயத்தைக் கொடுப்பேன். ஒரு புதிய ஆவியையும் கொடுப்பேன். கல்லான உங்கள் இருதயத்தை நீக்கிவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன். மேலும் நான் என் ஆவியானவரை உங்களுக்குள் இருக்கும்படி செய்து, நீங்கள் என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருக்கவும், என் விதிமுறைகளைப் பின்பற்றவும் செய்வேன். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டில் நீங்கள் வசிப்பீர்கள். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன். உங்களுடைய சகல அசுத்தங்களிலிருந்தும் உங்களை நான் விடுவிப்பேன். நான் தானியத்தை விளையச்செய்து, பெருகப்பண்ணி, உங்கள்மீது பஞ்சம் வராதிருக்கப்பண்ணுவேன். நீங்கள் நாடுகளின் மத்தியில் இனியொருபோதும் பஞ்சத்தினால் வாடும் அவமானத்திற்குள்ளாகாதபடி, மரங்களின் பழங்களையும், வயலின் விளைச்சல்களையும் பெருகப்பண்ணுவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பழைய தீயவழிகளையும், கொடிய செயல்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் பாவங்களுக்காகவும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் உங்களை வெறுப்பீர்கள். நான் இவ்வாறு செய்யப்போவது நீங்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதற்காக அல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! உங்கள் நடத்தையினிமித்தம் வெட்கித்து அவமானமடையுங்கள். “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்திகரிக்கும் நாளிலே, உங்கள் பட்டணங்களில் குடியேறச்செய்வேன். இடிபாடுகளெல்லாம் மீண்டும் கட்டப்படும். பாழாக்கப்பட்ட இடங்கள் அதைக் கடந்துசெல்வோர் அனைவரது பார்வையிலும், பாழாய்க்கிடப்பதற்குப் பதிலாகப் பயிரிடப்பட்டதாயிருக்கும். “பாழாக்கப்பட்டிருந்த இந்நாடு ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்று. பாழாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பாழிடங்களாய்க் கிடந்த பட்டணங்கள், இப்பொழுது காவலரண் செய்யப்பட்ட குடியிருப்புகளாகிவிட்டன என்று சொல்வார்கள்.” அப்பொழுது அழிக்கப்பட்டதைத் திரும்பவும் கட்டியதும், பாழாய்க் கிடந்ததை திரும்பவும் பயிரிட்டதும் யெகோவாவாகிய நானே என்பதை உன்னைச்சூழ இருக்கும் நாடுகள் அறிந்துகொள்ளும். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்; நானே இதைச் செய்வேன்.’ “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேலின் வேண்டுதலுக்கு இன்னொருமுறையும் நான் இடமளித்து அவர்களுக்காக இதைச் செய்வேன். அவர்களுடைய மக்களைச் செம்மறியாடுகள்போல எண்ணற்றவர்களாக்குவேன். பண்டிகைக் காலத்தில் எருசலேமுக்குக் கொண்டுவரப்படும் பலிக்கான மந்தைகளைப்போல், அவர்கள் எண்ணற்றவர்களாயிருப்பார்கள். பாழாக்கப்பட்ட பட்டணங்கள் இவ்விதமாய் மக்கள் திரளால் நிரப்பப்படும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
எசேக்கியேல் 36:16-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த தேசத்திலே குடியிருக்கும்போது அதைத் தங்களுடைய நடக்கையினாலும் தங்களுடைய செயல்களினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என்னுடைய முகத்திற்கு முன்பாக மாதவிடாயுள்ள பெண்ணின் தீட்டைப்போல் இருந்தது. ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்திற்காக, அதை அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளால் தீட்டுப்படுத்தினதிற்காக நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, அவர்களை அந்நியதேசங்களுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய செயல்களின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன். அவர்கள் அந்நியதேசங்களிடத்தில் போனபோது அந்த மக்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் யெகோவாவுடைய மக்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என்னுடைய பரிசுத்தபெயரைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் தாங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே இரங்குகிறேன். ஆதலால், நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களை, உங்களுக்காக அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே நான் இப்படிச் செய்கிறேன். அந்நியமக்களின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தம்செய்யும்பொழுது; அப்பொழுது அந்நியமக்கள் தங்களுடைய கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் செய்யப்படும்போது, நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களை அந்நிய மக்களிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்களுடைய சொந்த தேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களுடைய உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் உடலிலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்களுடைய உள்ளத்திலே என்னுடைய ஆவியை வைத்து, உங்களை என்னுடைய கட்டளைகளில் நடக்கவும் என்னுடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்செய்வேன். உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து, உங்களுடைய அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களைக் காப்பாற்றி, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகச்செய்து, நீங்கள் இனிமேல் தேசங்களுக்குள்ளே பஞ்சத்தினால் உண்டாகும் நிந்தையை அடையாதபடி, மரத்தின் பழங்களையும் வயலின் பலன்களையும் பெருகச்செய்வேன். அப்பொழுது நீங்கள் உங்களுடைய பொல்லாத மார்க்கங்களையும் உங்களுடைய தகாத செயல்களையும் நினைத்து, உங்களுடைய அக்கிரமங்களுக்காக உங்களுடைய அருவருப்புகளுக்காக உங்களையே வெறுப்பீர்கள். நான் இப்படிச் செய்வது உங்களுக்காக அல்லவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு தெரிந்திருப்பதாக; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய வழிகளுக்காக வெட்கப்படுங்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேறச்செய்வேன்; பாலைவனமான இடங்களும் கட்டப்படும். பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும். பாழாய்க்கிடந்த இந்த தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலானது என்றும், பாலைவனமும் பாழும் அழிக்கப்பட்டும் இருந்த பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். யெகோவாகிய நான் அழிக்கப்பட்டவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான தேசங்கள் அறிந்துகொள்வார்கள்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களுக்காக நான் இதை நன்மைச்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்செய்யவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதர்களைப் பெருகச்செய்வேன். பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்செய்யப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாக இருக்கிறதோ, அப்படியே பாலைவனமாக இருந்த பட்டணங்கள் மனிதர்களின் மந்தையால் நிரம்பி இருக்கும்; அதினால் நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 36:16-38 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தம் சொந்த நாட்டில் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அந்த நாட்டை தமது கெட்டச் செயல்களால் தீட்டுப்படுத்தினார்கள். எனக்கு அவர்கள் மாதவிலக்கால் தீட்டான பெண்ணைப்போன்று இருந்தார்கள். அவர்கள் அந்த நாட்டில் ஜனங்களைக் கொன்றபோது இரத்தத்தை தரையில் சிந்தினார்கள். அவர்கள் அந்த நாட்டைத் தங்கள் அசுத்த விக்கிரகங்களால் தீட்டாக்கினார்கள். எனவே நான் எவ்வளவு கோபமாய் இருக்கிறேன் என்பதைக் காட்டினேன். நான் பிற நாடுகளுக்குள்ளே அவர்களைக் சிதறடித்தேன். பல தேசங்களில் அவர்கள் தூற்றிப் போடப்பட்டார்கள். அவர்கள் செய்த கெட்ட செயல்களுக்காக நான் தண்டித்தேன். அவர்கள் பிற நாடுகளுக்குச் சென்றனர். அவர்கள் அந்த நாடுகளிலும் என் நாமத்தைக் கெடுத்தார்கள். எப்படி? அந்நாடுகளில் உள்ளவர்கள் இவர்களைப்பற்றிப் பேசினார்கள். அவர்கள், ‘இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள். ஆனால் அவர்கள் அவரது நாட்டைவிட்டு வந்தார்கள். அதனால் கர்த்தரிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும்!’ என்று பேசினார்கள். “இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள் சிதறடிக்கப்பட்டிருந்த நாடுகளில் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கினார்கள். நான் என் நாமத்திற்காக வருத்தப்பட்டேன். எனவே, இஸ்ரவேல் வம்சத்தாரிடம், கர்த்தரும் ஆண்டவருமானவர் இவற்றைக் கூறுகிறார், என்று சொல்: ‘இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் எங்கெல்லாம் போனீர்களோ அங்கெல்லாம் என் பரிசுத்தமான நாமத்தைக் கெடுத்தீர்கள். இதனை நிறுத்த நான் சிலவற்றைச் செய்யப்போகிறேன். இஸ்ரவேலே நான் இதனை உனக்காகச் செய்யவில்லை. நான் இதனை எனது பரிசுத்தமான நாமத்திற்காகவே செய்வேன். எனது பெரும் நாமம் உண்மையில் பரிசுத்தமானது என்பதை அந்த நாடுகளுக்குக் காட்டப்போகிறேன். நீங்கள் அந்நாடுகளில் என் நாமத்தைப் பாழாக்கீனீர்கள். ஆனால் நான் பரிசுத்தமானவர் என்பதை காட்டுவேன். நீங்கள் என் நாமத்தை மதிக்கும்படி செய்வேன். பிறகு அந்த நாட்டவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். தேவன் சொன்னார்: “நான் அந்நாடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து, ஒன்று சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். பின்னர் நான் உங்கள் மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். நான் உங்களை சுத்தமாக்குவேன். நான் உங்களது எல்லா அசுத்தங்களையும் கழுவுவேன். நான் உங்களது பாவங்களாலும், அருவருப்பான விக்கிரகங்களாலும் வந்த அசுத்த்தையும் கழுவுவேன். நான் உங்களில் புதிய ஆவியை வைத்து, உங்கள் சிந்தனை முறையையும் மாற்றுவேன். நான் உங்கள் உடலில் உள்ள கல் போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு மென்மையான மனித இருதயத்தைக் கொடுப்பேன். நான் உங்களுக்குள் எனது ஆவியை வைப்பேன். நான் உங்களை மாற்றுவேன். எனவே நீங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிவீர்கள். நீங்கள் கவனமாக என் கட்டளைகளுக்கு அடிபணிவீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வீர்கள். நீங்கள் என் ஜனங்களாயிருப்பீர்கள். நான் உங்களது தேவனாயிருப்பேன். நான் உங்களைப் பாதுகாப்பேன், அசுத்தமாகாமல் இரட்சிப்பேன். நான் தானியத்தை முளைக்கும்படி கட்டளையிடுவேன். உங்களுக்கு விரோதமாகப் பஞ்சம் ஏற்படும்படிச் செய்யமாட்டேன். நான் உங்கள் மரங்களிலிருந்து நிறைய பழங்கள் கிடைக்கும்படியும் உங்கள் வயல்களிலிருந்து நல்ல விளைச்சல் கிடைக்கும்படியும் செய்வேன். எனவே நீங்கள் பிற நாடுகளில் பசியால் அவமானப்பட்டதைப்போன்று இனிமேல் மீண்டும் படமாட்டீர்கள். நீங்கள் செய்த கெட்டவற்றை நினைப்பீர்கள். நீங்கள் அவை நல்லவை அல்ல என நினைப்பீர்கள். பிறகு நீங்களே உங்களை வெறுப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த பாவங்களும் பயங்கரமான செயல்களும் மிகுதி.” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீங்கள் இவற்றை நினைவுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இவற்றை உங்கள் நன்மைக்காக செய்யவில்லை! எனது நல்ல நாமத்திற்காகவே நான் இதனைச் செய்தேன்! எனவே இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வாழ்ந்த முறையை எண்ணி வெட்கப்படுங்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார், “நான் உங்கள் பாவங்களைக் கழுவும் நாளில் நான் உங்களை உங்களது நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வருவேன். அந்த அழிந்துபோன நகரங்கள் மீண்டும் கட்டப்படும். காலியான நிலங்கள் பயிரிடப்படும். அந்த வழியாகப் போகிறவர்களின் பார்வையில் இனி பாழாக இராது. அவர்கள் சொல்வார்கள், ‘முன்பு இந்நிலம் பாழாகக் கிடந்தது, ஆனால் இப்பொழுது ஏதேன் தோட்டம் போல் ஆகியிருக்கிறது. நகரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவை பாழாகி வெறுமையாயிற்று. ஆனால் இப்பொழுது அவை பாதுகாக்கப்பட்டன. அவற்றில் ஜனங்கள் வாழ்கின்றனர்.’” தேவன் சொன்னார்: “பின்னர் உன்னைச் சுற்றியுள்ள அந்நாடுகள் நானே கர்த்தர் என்பதையும் நான் பாழான இடங்களை மீண்டும் கட்டினேன் என்பதையும் அறிவார்கள். காலியாக இருந்த இந்த நிலத்தில் நான் நட்டுவைத்தேன். நானே கர்த்தர் நான் இவற்றைக் கூறினேன் இவை நடக்கும்படிச் செய்வேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் ஜனங்களையும் கூட என்னிடம் வந்து தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க அனுமதிப்பேன். அவர்கள் மேலும், மேலும் பெருகும்படிச் செய்வேன். அவர்கள் ஆட்டு மந்தைகளைப் போன்றிருப்பார்கள். எருசலேமில் அதன் சிறப்பான திருவிழாக்களில் வருகிற மந்தைக் கூட்டம்போன்று ஜனங்கள் மிகுதியாக இருப்பார்கள். அதைப்போலவே நகரங்களும் பாழான இடங்களும் ஜனங்கள் கூட்டத்தால் நிரம்பும். பின்னர் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”