எசேக்கியேல் 17:19-24
எசேக்கியேல் 17:19-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் வாழ்வது நிச்சயம்போலவே, அவன் உதாசீனம் செய்த என் சத்தியத்தையும், அவன் மீறிய என் உடன்படிக்கையையும் நான் அவன் தலைமீது வரப்பண்ணுவேன் என்பதும் நிச்சயம். நான் என் வலையை அவனுக்கு விரிப்பேன். அவன் என் கண்ணியில் அகப்படுவான், நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுவந்து, அவன் எனக்கு உண்மையற்றவனாய் நடந்ததினிமித்தம் அவனுக்குத் தண்டனை கொடுப்பேன். பயந்து ஓடும் அவனுடைய படையினர் அனைவரும் வாளினால் மடிவார்கள். மீதியாய் இருப்பவர்கள் திசையெங்கும் சிதறடிக்கப்படுவார்கள். அப்பொழுது யெகோவாவாகிய நானே பேசினேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கேதுருமரத்தின் உச்சியிலிருந்து நானே ஒரு துளிரை எடுத்து அதை நாட்டுவேன். அதனுடைய நுனியிலிருக்கும் துளிர்களிலிருந்து இளங்கிளை ஒன்றை முறித்து அதை உயர்ந்ததும் கம்பீரமானதுமான மலையொன்றில் நாட்டுவேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அதை நான் நாட்டுவேன். அது கிளைகளைப் பரப்பி, பழங்களைக் கொடுத்து, சிறப்பான கேதுரு மரமாகும். எல்லாவித பறவைகளும் அதில் கூடுகட்டும். அதன் கிளைகளின் நிழலிலே அவை தஞ்சமடையும். அப்பொழுது உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயரமாய் வளரப்பண்ணுகிறவர் யெகோவாவாகிய நானே என்பதை வெளியின் மரங்களெல்லாம் அறிந்துகொள்ளும். பச்சை மரத்தைப் பட்டுப்போகப்பண்ணுகிறவரும், பட்டுப்போனதைத் தளைக்கப்பண்ணுகிறவரும் யெகோவாவாகிய நானே என்பதையும் அவை அறிந்துகொள்ளும். “ ‘யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்வேன்,’ ” என்றார்.
எசேக்கியேல் 17:19-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதற்காக யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என்னுடைய ஆணையை அசட்டைசெய்ததையும், என்னுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரச்செய்வேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாகச்செய்த துரோகத்திற்காக அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன். அவனுடன் ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வாளால் விழுவார்கள்; மீதியானவர்களோ எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாக இருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு மலையின்மேல் நாட்டுவேன். இஸ்ரவேலின் உயரமான மலையிலே அதை நாட்டுவேன்; அது கிளைகளைவிட்டு, பழம்தந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே எல்லாவித பறவைவகைகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தங்கும். அப்படியே யெகோவாகிய நான் உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான மரத்தை பட்டுப்போகச்செய்து, பட்டுப்போன மரத்தைத் தழைக்கச்செய்தேன் என்றும் விளைச்சலின் மரங்களுக்கு எல்லாம் தெரியவரும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று சொன்னார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 17:19-24 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது ஆண்டவரான கர்த்தர் இந்த வாக்குறுதியைச் செய்கிறார்: “எனது உயிரின்மேல், நான் யூதாவின் ராஜாவைத் தண்டிப்பதாக வாக்குரைத்தேன். ஏனென்றால் அவன் எனது எச்சரிக்கையை அசட்டை செய்தான். அவன் எங்கள் ஒப்பந்தத்தை உடைத்தான். நான் எனது வலையைப் போடுவேன். அவன் அதில் அகப்படுவான். நான் அவனை பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அவன் அங்கே தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் எனக்கு எதிராகத் திரும்பினான். நான் அவனது படையை அழிப்பேன். நான் அவனது சிறந்த போர் வீரர்களை அழிப்பேன், தப்பிப் பிழைப்பவர்களை நான் காற்றில் சிதறடிப்பேன். பிறகு நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். நான் இவற்றை உங்களுக்குச் சொன்னேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்: “நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன். நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன். நானே அதனை உயரமான மலையில் நடுவேன். நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன். அக்கிளை மரமாக வளரும். அது கிளைகளாக வளர்ந்து கனிதரும். அது அழகான கேதுரு மரமாகும். பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும். பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும். “பிறகு மற்ற மரங்கள், நான் உயரமான மரங்களைத் தரையில் வீழ்த்துவேன், குட்டையான மரங்களை உயரமாக வளர்ப்பேன் என்பதை அறியும். நான் பச்சைமரங்களை உலரச் செய்வேன். உலர்ந்த மரங்களைத் தளிர்க்கச் செய்வேன். நானே கர்த்தர். நான் சிலவற்றைச் செய்வதாகச் சொன்னால் செய்வேன்!”
எசேக்கியேல் 17:19-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆணையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப்பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன். அவனோடேகூட ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் பட்டயத்தால் விழுவார்கள்; மீதியானவர்களோ சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன். இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும். அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தார் என்று சொல் என்றார்.