எசேக்கியேல் 11:18-23
எசேக்கியேல் 11:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது ஜனங்கள் திரும்பி வரும்போது அவர்களுடைய வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளை அழிப்பார்கள். நான் அவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆள்போன்று செய்வேன். நான் அவர்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன். நான் அவர்களிடமுள்ள கல்போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உண்மையான இருதயத்தை வைப்பேன். பின்னர் அவர்கள் எனது சட்டங்களுக்குப் பணிவார்கள். நான் அவர்களிடம் சொல்வதைச் செய்வார்கள். அவர்கள் எனது உண்மையான ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.’” பிறகு தேவன் சொன்னார்: “ஆனால், இப்போது அவர்கள் இருதயம் அந்த வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளுக்குரியதாக இருக்கிறது. நான், அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக தண்டிப்பேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். பிறகு கேருபீன்கள் தம் சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பித்தன, சக்கரங்களும் அவற்றோடு இருந்தன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமை அதற்கு மேல் இருந்தது. கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது.
எசேக்கியேல் 11:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அவர்கள் அங்கு திரும்பிவந்து இழிவான எல்லா உருவச்சிலைகளையும், வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அங்கிருந்து அகற்றிவிடுவார்கள். நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட உள்ளத்தைக் கொடுத்து, புதிய ஆவியையும் கொடுப்பேன். நான் அவர்களுடைய கல்லான இருதயத்தை நீக்கி, சதையான இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் என் நீதிச்சட்டங்களைப் பின்பற்றி என் கட்டளைகளைக் கைக்கொள்ளக் கவனமாயிருப்பார்கள். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். ஆனால் இழிவான உருவச்சிலைகளையும் வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் பற்றியிருக்கிற இருதயம் உடையவர்களையோ, அவர்களுடைய நடத்தையின் பலனை, அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.” அப்பொழுது கேருபீன்கள் தங்கள் அருகிலிருந்த சக்கரங்களோடு இறகுகளை விரித்தன. இஸ்ரயேலின் இறைவனின் மகிமை அவற்றிற்கு மேலாக இருந்தது. யெகோவாவினுடைய மகிமை பட்டணத்திலிருந்து எழும்பி பட்டணத்தின் கிழக்கே இருந்த மலையில் போய் நின்றது.
எசேக்கியேல் 11:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் அங்கே வந்து, அதில் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாக இருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன். ஆனாலும் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்களுடைய இருதயத்தின் ஆசையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. யெகோவாவுடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
எசேக்கியேல் 11:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.