எசேக்கியேல் 1:5-28

எசேக்கியேல் 1:5-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த நெருப்பில் உயிரினங்கள் போன்ற நான்கு உருவங்கள் இருந்தன. தோற்றத்தில் அவை மனித உருவத்தைக் கொண்டிருந்தன. ஆனாலும் அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு சிறகுகளும் இருந்தன. அவைகளின் கால்கள் நேராகவும், பாதங்கள் கன்றுக்குட்டிகளின் உள்ளங்கால்களைப் போலவும் இருந்தன. அவை மினுக்கப்பட்ட வெண்கலம்போல் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளின் சிறகுகளின்கீழ் நான்கு புறங்களிலும் மனிதக் கைகள் இருந்தன. அவை நான்குமே முகங்களையும் இறகுகளையும் கொண்டிருந்தன. அவைகளின் செட்டைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருந்தன. அவை போகும்போது ஒவ்வொன்றும் திரும்பாமல் நேர்முகமாகவே சென்றன. அவைகளின் முகங்கள் அமைந்திருந்த விதமாவது: அவை நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மனித முகமும், வலதுபுறத்தில் சிங்கமுகமும், இடது புறத்தில் எருது முகமும், அதோடு ஒவ்வொன்றுக்கும் கழுகு முகமும் இருந்தன. இவ்வாறாக அவைகளின் முகங்கள் இருந்தன. அவைகளின் சிறகுகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் இரண்டு ஜோடி சிறகுகள் இருந்தன. இச்சிறகுகள் இரு பக்கங்களிலுமிருந்த உயிரினங்களின் இறகுகளைத் தொட்டுக்கொண்டிருந்தன. மற்ற இரு சிறகுகள் அவைகளின் உடல்களை மூடிக்கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் நேர்முகமாகவே சென்றன. ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவை திரும்பிப்பாராமலே சென்றன. அவ்வுயிரினங்களின் தோற்றம் எரிகிற நெருப்புத்தழலைப்போல் அல்லது தீப்பந்தம்போல் இருந்தன. உயிரினங்களுக்குள்ளே முன்னும் பின்னுமாக நெருப்பு அசைவாடிக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு பிரகாசமாயிருந்தது. அந்த நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது. அந்த உயிரினங்கள் முன்னும் பின்னுமாக மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன. நான்கு முகங்களையுடைய அவ்வுயிரினங்களை நான் பார்த்தபோது, அவை ஒவ்வொன்றுக்கும் அருகே தரையில் ஒவ்வொரு சக்கரங்களைக் கண்டேன். அச்சக்கரங்களின் தோற்றமும், அமைப்பும் எப்படியிருந்ததென்றால், மரகதக் கற்களைப்போல் மினுங்கிக் கொண்டிருந்தன. அவை நான்கும் ஒரேவிதமாகக் காணப்பட்டன. அச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன. சக்கரங்கள் நகர்ந்தபோது, அவ்வுயிரினங்கள் நோக்கும் நான்கு திசைகளில் ஏதாவது ஒரு திசையில் போயின. அவ்வுயிரினங்கள் ஓடும்போது சக்கரங்கள் திரும்புவதேயில்லை. அவைகளின் வளையங்கள் உயரமாயும், பிரமிக்கத்தக்கதாயும் இருந்தன. அந்த நான்கு வளையங்களும் சுற்றிலும் கண்கள் நிறைந்தனவாய் இருந்தன. உயிரினங்கள் புறப்படும்போது, அவைகளின் அருகே இருந்த சக்கரங்களும் புறப்பட்டன. உயிரினங்கள் தரையைவிட்டு மேலெழும்பும்போது, சக்கரங்களும் மேலெழும்பின. உயிரினங்களின் ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவ்வுயிரினங்களும் செல்லும். சக்கரங்களும் அவைகளோடு எழும்பிச் செல்லும். ஏனெனில், உயிரினங்களின் ஆவி அச்சக்கரங்களிலேயே இருந்தது. உயிரினங்கள் நகர்ந்தபோது, சக்கரங்களும் நகர்ந்தன. உயிரினங்கள் அசைவற்று நின்றபோது, அவைகளும் அசைவற்று நின்றன. உயிரினங்கள் தரையிலிருந்து எழும்பியபோது, அந்த சக்கரங்களும் அவைகளுடன் சேர்ந்து மேலெழுந்தன. ஏனெனில் உயிரினங்களின் ஆவி அந்த சக்கரங்களிலே தான் இருந்தது. அவ்வுயிரினங்களின் தலைகளுக்கு மேலாக ஆகாயவிரிவு போன்ற அமைப்பு பரந்திருக்கக் காணப்பட்டது. அது பனிக்கட்டிபோல் பளபளப்பாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்தது. அந்த ஆகாயவிரிவின்கீழ் உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று நோக்கியபடி விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் தங்கள் உடலை மூடிக்கொள்ள சிறகுகள் இருந்தன. அந்த உயிரினங்கள் நகர்ந்தபோது, அவைகளுடைய செட்டைகளின் சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், எல்லாம் வல்ல இறைவனுடைய குரலைப் போலவும், இராணுவத்தின் இரைச்சலைப்போலவும் இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறகுகளைக் கீழே இறக்கிவிட்டன. அவை இறகுகளைத் இறக்கிவிட்டு நின்றபோது, அவைகளின் தலைகளுக்கு மேலாய் காணப்பட்ட ஆகாயவிரிவின் மேலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவைகளின் தலைகளுக்கு மேலிருந்த ஆகாயவிரிவின் மேலே காணப்பட்ட, இரத்தினக்கற்களினாலான அரியணைபோன்ற ஒன்று காணப்பட்டது. மேலே, மிக உயரத்தில் அரியணையில் ஒரு மனிதனைப் போன்ற உருவம் இருந்தது. அந்த உருவத்தின் இடுப்பைப்போல் தோன்றிய மேல்பாகத்தில், அவர் நெருப்புக்கனல் ஒளிவீசும் உலோகத்தைப்போல் காணப்பட்டார். கீழேயுள்ள பாகமோ நெருப்பைப்போல் காணப்பட்டது. பிரகாசமான வெளிச்சம் அவரைச் சுற்றி இருந்தது. மழைபெய்யும் நாளில் மேகங்களில் உள்ள வானவில்லின் தோற்றத்தைப்போல, அவரைச் சுற்றியுள்ள பிரகாசமும் இருந்தது. இது யெகோவாவின் மகிமையின் சாயலின் தோற்றம், நான் அதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; பேசுகிற ஒருவரின் குரலையும் கேட்டேன்.

எசேக்கியேல் 1:5-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதின் நடுவிலிருந்து நான்கு உயிரினங்கள் தோன்றின; அவைகளின் தோற்றம் மனிதனைப்போல் இருந்தது. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன. அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன. அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன. அவைகளுடைய முகங்களின் தோற்றமாவது, வலதுபக்கத்தில் நான்கும் மனிதனுடைய முகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நான்கும் எருதுமுகமும் கழுகு முகமுமாக இருந்தன. அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; போகும்போது அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை. உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது. அந்த உயிரினங்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன. நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன். சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது. அவைகள் ஓடும்போது தங்களின் நான்கு பக்கங்களிலும் ஓடும், ஓடும்போது அவைகள் திரும்புகிறதில்லை. அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. உயிரினங்களின் ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; அவ்விடத்திற்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது. மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன. அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன. அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

எசேக்கியேல் 1:5-28 பரிசுத்த பைபிள் (TAERV)

அதற்குள்ளே நான்கு ஜீவன்கள் இருந்தன. அவை மனிதர்களைப்போன்று காணப்பட்டன. ஆனால், ஒவ்வொரு ஜீவன்களுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. அவற்றின் கால்கள் நேராக இருந்தன. அவற்றின் பாதங்கள் பசுக்களின் பாதங்களைப்போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தன. அவற்றின் சிறகுகளுக்கடியில் மனித கைகள் இருந்தன. அங்கே நான்கு ஜீவன்கள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. ஒவ்வொரு ஜீவனின் இறக்கைகளும் மற்ற ஜீவனின் இறக்கைகளை ஒவ்வொரு பக்கமும் தொட்டன. ஜீவன்கள் அசையும்போது அவை திரும்பவில்லை. அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அத்திசையிலேயே சென்றன. ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முன்பக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் மனித முகம் இருந்தது. வலது பக்கத்தில் உள்ளவை சிங்கங்களின் முகங்களாக இருந்தன. இடது பக்கத்தில் உள்ளவை காளைகளின் முகங்களாக இருந்தன. பின்பக்கத்தில் அவற்றிற்கு கழுகின் முகங்களாக இருந்தன. ஜீவன்கள் தம்மை சிறகுகளால் மூடிக்கொண்டன. அவை இரண்டு சிறகுகளால் தம் அருகிலிருக்கும் ஜீவனைத் தொட நீட்டின. இரண்டு சிறகுகளால் தம் உடலை மறைத்துக்கொண்டன. அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அந்தச் திசையிலேயே சென்றன. காற்று அவற்றை எத்திசையில் செலுத்துகின்றதோ அத்திசையிலேயே சென்றன. அந்த ஜீவன்கள் நகரும்போது திரும்புவதில்லை. அந்த ஜீவன்கள் அப்படித்தான் காணப்பட்டன. ஜீவன்களுக்குள் இருந்த இடைவெளியில் ஏதோ எரிகின்ற நெருப்பு கரிதுண்டுகளைப் போலிருந்தது. இந்த நெருப்பானது சிறு தீபங்களைப்போல ஜீவன்களைச் சுற்றி அசைந்துகொண்டிருந்தது. அது பிரகாசமாக மின்னலைப்போன்று ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது! அந்த ஜீவன்கள் மின்னலைப்போன்று ஓடித்திரிந்தன! நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அச்சக்கரங்கள் மஞ்சள் நகையால் செய்யப்பட்டதுப்போன்று தோன்றின. சக்கரத்திற்குள் சக்கரம் இருப்பதுப்போன்று அவை தோன்றின. சக்கரங்கள் எத்திசையிலும் (திரும்ப) அசைய முடிந்தது, ஆனால் ஜீவன்களோ அவை அசைந்தபோது திரும்பவில்லை. இப்பொழுது நான் அவற்றின் பின்பாகத்தைப்பற்றி சொல்லுவேன்! சக்கரங்களின் ஓரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் இருந்தன. நான்கு சக்கரங்களின் ஓரங்கள் முழுவதிலும் கண்கள் இருந்தன. அச்சக்கரங்கள் எப்பொழுதும் ஜீவன்களோடேயே நகர்ந்தன. ஜீவன்கள் காற்றில் மேலேறிப் பறந்தால் அச்சக்கரங்களும் அவற்றோடு சென்றன. காற்றானது அவற்றை எங்கெங்கு செலுத்த விரும்புகிறதோ அங்கே அவற்றோடு சக்கரங்களும் சென்றன. ஏனென்றால், ஜீவன்களின் வல்லமையானது அவற்றின் சக்கரத்தில் உள்ளன. எனவே, ஜீவன்கள் நகர்ந்தால் சக்கரங்களும் நகர்ந்தன. ஜீவன்கள் நின்றால் சக்கரங்களும் நின்றன. சக்கரங்கள் காற்றில் பறந்து போனால் ஜீவன்களும் அவற்றோடு போயின. ஏனென்றால், சக்கரங்களுக்குள் காற்று இருந்தது. ஜீவன்களின் தலைகளின்மேல் வியப்படையச்செய்யும் ஒன்று இருந்தது. அது தலை கீழாகத் திருப்பப்பட்ட ஒரு கிண்ணம்போல் இருந்தது. அப்பாத்திரம் படிகக்கட்டியைப்போன்று தெளிவாக இருந்தது. இது ஜீவன்களின் தலைக்குமேல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது! பாத்திரத்திற்குக் கீழே, ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு நேரான சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகள் விரிக்கபட்டு அருகிலிருக்கும் ஜீவனின் சிறகுகளை நோக்கி நீட்டப்பட்டிருந்தன. இரண்டு சிறகுகள் மற்ற திசையில் விரிக்கப்பட்டு ஜீவனின் உடலை மூடியிருந்தன. பிறகு, நான் சிறகுகளின் சத்தம் கேட்டேன். ஜீவன்கள் ஒவ்வொருமுறை நகரும்போதும் அதன் சிறகுகள் பெருஞ்சத்தத்தை எழுப்பின. அச்சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போன்றிருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய குரல் போல் இருந்தது. அது ஒரு படை அல்லது ஜனங்கள் கூட்டத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. ஜீவன்கள் நகர்வதை நிறுத்தும்போது தம் சிறகுகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளும். ஜீவன்கள் நகர்வதை நிறுத்தின. தமது சிறகுகளைத் தாழ்த்தின. இன்னொரு பெருஞ்சத்தம் கேட்டது, அது அவற்றின் தலைக்கு மேலிருந்த கிண்ணத்திலிருந்து கேட்டது. பாத்திரத்திற்கு மேலே ஏதோ இருந்தது. அது சிங்காசனத்தைப்போல் இருந்தது. அது நீல வண்ணத்தில் ரத்தினம்போல் இருந்தது. அந்தச் சிங்காசனத்தில் யாரோ ஒரு மனிதர் உட்கார்ந்திருப்பதுபோன்று தோன்றியது. நான் அவரை இடுப்பிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தேன். அவர் சூடான உலோகத்தைப்போன்று இருந்தார். அவரைச் சுற்றிலும் நெருப்பு இருப்பதைப் போன்றிருந்தது. நான் அவரை இடுப்பிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தேன். அது நெருப்பைப் போன்றிருந்தது. அவரைச் சுற்றிலும் அது மின்னியது. அவரைச் சுற்றிலும் மின்னிக்கொண்டிருந்த வெளிச்சமானது வானவில்லைப் போன்றிருந்தது. அது கர்த்தருடைய மகிமை. அதைப் பார்த்த உடனே நான் தரையிலே விழுந்தேன். என் முகம் தரையிலே படும்படிக் குனிந்தேன். பின்னர் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன்.

எசேக்கியேல் 1:5-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன. அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷகைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன. அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன. அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நாலும் எருதுமுகமும் கழுகுமுகமுமாயிருந்தன. அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை. ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது. அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன. நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன். சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது. அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது. மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன. அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம் போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன. அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.