யாத்திராகமம் 9:1-35
யாத்திராகமம் 9:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போய் எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு போகவிடு. நீ அவர்களைப் போகவிட மறுத்து, அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், வயல்வெளிகளிலுள்ள உங்கள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், மந்தைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகிய எல்லா வளர்ப்பு மிருகங்கள்மேலும் கொடிய வாதையை யெகோவாவினுடைய கரம் கொண்டுவரும். இஸ்ரயேலருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும், எகிப்தியருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும் இடையில் யெகோவா வித்தியாசம் காட்டுவார். அதனால் இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகாது’ என்று அவனுக்குச் சொல்” என்றார். “யெகோவா நாளைக்கே இதை இந்த நாட்டில் செய்வார்” என்று சொல்லி யெகோவா ஒரு காலத்தைக் குறிப்பிட்டார். மறுநாள் அப்படியே யெகோவா செய்தார்: எகிப்தியரின் வளர்ப்பு மிருகங்கள் எல்லாம் செத்துப்போனது; ஆனால் இஸ்ரயேலருக்குச் சொந்தமான மிருகம் ஒன்றாயினும் சாகவில்லை. பார்வோன் அதுபற்றி விசாரிக்க ஆட்களை அனுப்பி, இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்பதை அறிந்தான். ஆனாலும் அவனுடைய இருதயம் தொடர்ந்தும் கடினமாகவே இருந்தது, அவன் மக்களைப் போகவிடவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது: “நீங்கள் சூளையில் இருந்து கைநிறையப் புகையின் கரித்தூளை அள்ளிக்கொள்ளுங்கள். மோசே அதைப் பார்வோனுக்கு முன்பாக ஆகாயத்தில் வீசட்டும். அது எகிப்து நாடு முழுவதிலும் தூசியாகி, நாடெங்குமுள்ள மனிதர்கள்மேலும், மிருகங்கள்மேலும் எரிச்சலூட்டும் கொப்புளங்களை உண்டாக்கும்” என்றார். அப்படியே அவர்கள் சூளையிலிருந்து புகையின் கரித்தூளை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்குமுன் போய் நின்றார்கள். மோசே அதை ஆகாயத்தை நோக்கி வீசினான். உடனே மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் எரிச்சலூட்டும் கொப்புளங்கள் உண்டாயின. அவை மந்திரவாதிகள், எகிப்தியர் எல்லோர்மேலும் உண்டானதால், மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்க முடியவில்லை. யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயத்தை மேலும் கடினப்படுத்தினார். அவன் மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை. அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ அதிகாலையில் எழுந்து பார்வோனின் எதிரில் போய் அவனிடம், எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு அவர்களைப் போகவிடு. இல்லையென்றால் இம்முறை உனக்கும், உன் அதிகாரிகளுக்கும், உன் நாட்டு மக்களுக்கும் எதிராக எனது வாதைகளின் முழு தாக்கத்தையும் அனுப்புவேன். இதனால் பூமியெங்கும் எனக்கு நிகரானவர் யாருமே இல்லை என்பதை நீ அறிந்துகொள்வாய். ஏனெனில், நான் நினைத்திருந்தால் என் கரத்தை நீட்டி, பூமியிலிருந்து உங்களை முற்றிலும் அழித்துப்போடும் வாதை ஒன்றினால் உன்னையும் உன் மக்களையும் அப்பொழுதே அடித்திருப்பேன். ஆனாலும் நான் என் வல்லமையை உனக்குக் காட்டி, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன். நீயோ இன்னும் என்னுடைய மக்களுக்கு விரோதமாய் இருந்து, அவர்களைப் போகவிடாமல் இருக்கிறாய். ஆதலால் நாளை இதே நேரத்தில், எகிப்து நாடு உண்டானதுமுதல் இன்றுவரை அங்கே ஒருபோதும் விழுந்திராத மிகக் கடுமையான ஆலங்கட்டி மழையை அனுப்புவேன். ஆகையால், இப்பொழுதே உன் வளர்ப்பு மிருகங்களையும், வயல்வெளியிலிருக்கும் உனக்குச் சொந்தமான மற்ற யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவரும்படி உத்தரவு கொடு. ஏனெனில் உள்ளே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் எல்லா மனிதர்மேலும், மிருகங்கள்மேலும் பனிக்கட்டிகள் விழும். அவர்கள் இறந்துவிடுவார்கள்’ என்று சொல்” என்றார். யெகோவாவின் வார்த்தைக்குப் பயந்த பார்வோனின் அதிகாரிகள் தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் உள்ளே கொண்டுவருவதற்கு விரைந்து சென்றனர். யெகோவாவினுடைய வார்த்தையை அலட்சியப் படுத்தியவர்களோ, தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் வெளியிலே விட்டுவிட்டார்கள். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்து நாடெங்கும் ஆலங்கட்டி மழை விழும்படி உன் கையை ஆகாயத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது மனிதர்மேலும், மிருகங்கள்மேலும், எகிப்தின் வயல்வெளியில் வளர்கின்ற எல்லாவற்றின்மேலும் பனிக்கட்டி விழும்” என்றார். மோசே அவ்விதமே ஆகாயத்தை நோக்கித் தன் கோலை நீட்டியபோது, யெகோவா இடிமுழக்கத்தையும், ஆலங்கட்டி மழையையும் அனுப்பினார். மின்னல் தரைமட்டும் மின்னிப் பாய்ந்தது. இவ்வாறு யெகோவா பனிக்கட்டிகளை எகிப்து நாட்டின்மேல் பொழிந்தார். பனிக்கட்டிகள் விழுந்தன. மின்னல் முன்னும் பின்னுமாக மின்னியது. எகிப்து ஒரு நாடான காலமுதல் ஒருபோதும் ஏற்படாத, கடுமையான புயலாய் அது இருந்தது. ஆலங்கட்டி மழை எகிப்து நாடெங்கும் பெய்து, வயல்வெளியிலுள்ள மனிதர்களும் மிருகங்களுமான எல்லாவற்றின்மேலும் விழுந்தது; வயல்வெளிகளில் முளைத்த பயிர்களையும் அடித்தது, மரங்களின் இலைகளும் உதிர்க்கப்பட்டன. இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசம் மாத்திரமே ஆலங்கட்டி மழை விழாத இடமாயிருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். யெகோவா நியாயமானவர். நானும் என் மக்களுமே தவறு செய்திருக்கிறோம். யெகோவாவிடம் மன்றாடுங்கள். இந்த இடிமுழக்கமும், ஆலங்கட்டி மழையுமே எங்களுக்குப் போதும். நான் உங்களைப் போகவிடுவேன். இனியும் நீங்கள் இங்கிருக்க வேண்டியதில்லை” என்றான். அதற்கு மோசே, “நான் பட்டணத்தைவிட்டுப் போனவுடன் என் கைகளை உயர்த்தி, யெகோவாவிடம் மன்றாடுவேன். அப்பொழுது இடிமுழக்கம் ஓய்ந்து பனிக்கட்டியும் நின்றுபோகும். பூமி யெகோவாவினுடையது என்று நீர் அறிந்துகொள்வீர். ஆனால் நீரும், உமது அதிகாரிகளும் இறைவனாகிய யெகோவாவுக்கு இன்னும் பயப்படவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான். சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டன. அவ்வேளையில் வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது, சணல் பூத்திருந்தது. கோதுமையும், கம்பும் முற்றாதிருந்தபடியால் அவை அழிக்கப்படவில்லை. பின்பு மோசே பார்வோனை விட்டு பட்டணத்துக்கு வெளியே வந்தான். அவன் யெகோவாவை நோக்கித் தன் கைகளை உயர்த்தினான்; உடனே இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிட்டன. மழையும் தொடர்ந்து தரையில் பெய்யாமல் ஓய்ந்தது. மழையும், பனிக்கட்டியும், இடிமுழக்கமும் நின்றதைப் பார்வோன் கண்டபோது, அவன் திரும்பவும் பாவம் செய்தான். அவனும் அவனுடைய அதிகாரிகளும் தங்களுடைய இருதயங்களை இன்னும் கடினப்படுத்தினார்கள். யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
யாத்திராகமம் 9:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால், யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும். யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார். மேலும், நாளைக்குக் யெகோவா இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, யெகோவா ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார். மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும். அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும்” என்றார். அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது. அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது. ஆனாலும், யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தபடியே, யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ அதிகாலையில் எழுந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு. விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன். நீ பூமியில் இல்லாமல் நாசமாகப்போகும்படி நான் என்னுடைய கையை நீட்டி, உன்னையும் உன்னுடைய மக்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன். நீ என்னுடைய மக்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாக உன்னை உயர்த்துகிறாயா? எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன். இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்” என்றார். பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான். எவன் யெகோவாவுடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். அப்படியே மோசே தன்னுடைய கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது யெகோவா இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடியது; எகிப்து தேசத்தின்மேல் யெகோவா கல்மழையைப் பெய்யச்செய்தார்; கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நான் இந்தமுறை பாவம் செய்தேன்; யெகோவா நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள். இது போதும்; இந்தப் பெரிய இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை” என்றான். மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர். இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன்” என்றான். அப்பொழுது வாற்கோதுமை கதிர்விட்டும் கொள்ளுப்பயிரானது பூ பூத்திருந்தது; அதினால் கொள்ளும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போனது. கோதுமையும் கம்பும் கதிர்விடாமல் இருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது. மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை.
யாத்திராகமம் 9:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய் அவனைப் பார்த்து, ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர்: என்னைத் தொழுதுக்கொள்ளும்படி என் ஜனங்களைப் போக அனுமதி! நீ விடாப்பிடியாக அவர்களை அனுப்ப மறுத்தால், உனது பண்ணை மிருகங்களுக்கு எதிராக கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார். ஒரு கொடிய நோயால் உனது குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், பசுக்கள், ஆடுகள், ஆகியவை பாதிக்கப்படும்படியாக கர்த்தர் செய்வார். எகிப்தியரின் மிருகங்களுக்கும், இஸ்ரவேலரின் மிருகங்களுக்கும் கர்த்தர் வித்தியாசம் காட்டுவார். இஸ்ரவேல் ஜனங்களின் மிருகங்கள் எதுவும் சாகாது. இது நடப்பதற்குரிய காலத்தை கர்த்தர் குறித்துவிட்டார். நாளை இதனை இத்தேசத்தில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார். மறுநாள் காலையில் எகிப்தின் பண்ணை மிருகங்கள் அனைத்தும் மடிந்தன. ஆனால் இஸ்ரவேலருக்குரிய மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஏதேனும் மரித்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு பார்வோன் ஆட்களை அனுப்பினான். இஸ்ரவேலரின் மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை என்று பார்வோன் அறிந்தும் பிடிவாதமாகவே இருந்தான். அவன் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “உலையிலுள்ள சாம்பலை உங்கள் கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள். மோசே, நீ பார்வோனுக்கு முன்பாக உன் கைகளிலுள்ள சாம்பலைக் காற்றில் வீசு. எகிப்து தேசம் முழுவதும் இச்சாம்பல் பரவி தூளாக இது மாறும். அந்தத் தூள் ஒரு மனிதன் மீதோ, ஒரு மிருகத்தின்மீதோ பட்டவுடன் தோலின் மீது கொப்புளங்கள் ஏற்படும்” என்றார். எனவே மோசேயும், ஆரோனும் ஒரு உலையிலிருந்து சாம்பலை அள்ளிக்கொண்டனர். பின் அவர்கள் போய் பார்வோனுக்கு முன்னே நின்று, மோசே சாம்பலைக் காற்றில் தூவினான். ஜனங்களின் மீதும், மிருகங்களின் மீதும் கொப்புளங்கள் தோன்றின. மோசே இவ்வாறு செய்வதை மந்திரவாதிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் மந்திரவாதிகளின் மீதும் கொப்பளங்கள் தோன்றியிருந்தன. எகிப்து தேசமெங்கும் இவ்வாறு நிகழ்ந்தது. ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி கர்த்தர் செய்தார். எனவே மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க, பார்வோன் விரும்பவில்லை. கர்த்தர் கூறியவாறே இது நடந்தது. பின்பு கர்த்தர் மோசேயிடம், “காலையில் எழுந்து பார்வோனிடம் போ. எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுக்கொள்வதற்குப் போக அனுமதி கொடு! நீ அவ்வாறு செய்யாவிட்டால் எனது முழு சக்தியையும் உனக்கும், உனது அதிகாரிகளுக்கும், உனது ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். அப்போது என்னைப் போன்ற தேவன் இவ்வுலகில் எவரும் இல்லை என்பதை நீ அறிவாய். என் வல்லமையைப் பயன்படுத்தி ஒரு நோயை ஏற்படுத்தி அதனால் உன்னையும், உனது ஜனங்களனைவரையும் பூமியிலேயே இராதபடி அழிக்கமுடியும். ஆனால் என் வல்லமையை உங்களுக்குக் காட்டுவதற்காகவே உங்களை இங்கு வைத்திருக்கிறேன். அப்போது உலகமெங்குமுள்ள ஜனங்கள் என்னைக் குறித்து அறிந்துக்கொள்வார்கள்! எனது ஜனங்களுக்கு எதிராகவே நீ இன்னும் இருக்கிறாய். அவர்களை விடுதலை செய்வதற்கு நீ அனுமதிக்கவில்லை. எனவே நாளைக்கு இதே நேரத்தில், ஒரு கொடிய கல்மழை காற்றை வீசச் செய்வேன். எகிப்து தேசத்தில் இன்றுவரை அதைப் போன்ற புயல்காற்று வீசியதே இல்லை. இப்போதே உனது மிருகங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. வயல்களில் காணப்படும் உனக்குரிய பொருள் எதுவாயினும் அதைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. ஏனெனில் வயலில் இருக்கும் எந்த மனிதனாயினும் சரி, மிருகமாயினும் சரி, அது கொல்லப்படும். அனைத்து பொருட்களின் மீதும் கல்மழை காற்று வீசும் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார். கர்த்தரின் செய்திக்குப் பார்வோனின் அதிகாரிகளில் சிலர் செவிசாய்த்தனர். அவர்கள் தங்கள் மிருகங்களையும், அடிமைகளையும், வீடுகளுக்குள் விரைவாகச் சேர்த்தனர். ஆனால் மற்றவர்கள் கர்த்தரின் செய்தியை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர்கள் வயல்களிலிருந்த எல்லா அடிமைகளையும் மிருகங்களையும் விட்டுவிட்டனர். கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளை மேலே உயர்த்து. எகிப்து முழுவதும் கல்மழை பொழியத் துவங்கும். எகிப்தின் வயல்களிலுள்ள எல்லா ஜனங்கள், விலங்குகள் மற்றும் செடிகளின் மீதும் கல்மழை விழ ஆரம்பிக்கும்” என்றார். மோசே தனது கைத்தடியை உயர்த்தினான். இடி, மின்னல், புயல் ஆகியவை எகிப்தைப் பாதிக்குமாறு கர்த்தர் செய்தார். எகிப்தில் புயல் வீசியபோது மின்னல் அதனூடே தோன்றியது. எகிப்து ஒரு தேசமான பின்னர், அங்கு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் இதுவேயாகும். புயல், எகிப்தின் வயல்களிலிருந்த எல்லாவற்றையும், ஜனங்கள், மிருகங்கள், தாவரங்கள் அனைத்தையும் அழித்தது. வயல்களின் மரங்களைப் புயல் வீழ்த்தியது. எபிரெய ஜனங்கள் வாழ்ந்த கோசேன் தேசத்தில் மட்டும் புயலின் பாதிப்பு ஏற்படவில்லை. பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து அவர்களிடம், “இம்முறை நான் பாவம் செய்தேன். கர்த்தர் நீதியானவர். நானும் எனது ஜனங்களும் குற்றம் செய்தோம். தேவன் அனுப்பிய புயலும், இடியும், கல்மழையும் கொடியவை. புயலை நிறுத்தும்படியாக தேவனிடம் விண்ணப்பியுங்கள். நான் நீங்கள் போவதற்கு அனுமதிப்பேன். நீங்கள் இங்குத் தங்க வேண்டியதில்லை” என்றான். மோசே பார்வோனிடம், “நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டதும் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடியே என் கைகளை உயர்த்துவேன். இடியும் கல்மழையும் நின்றுபோகும், இந்த பூமியில் கர்த்தர் இருக்கிறார் என்பதை அப்போது நீ அறிவாய். ஆனால் நீயும் உனது அதிகாரிகளும் உண்மையாகவே கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான். சணல் பயிர்களில் ஏற்கெனவே கதிர்களும், வாற்கோதுமைப் பயிரில் பூக்களும் தோன்றியிருந்தன. இச்செடிகள் அனைத்தும் அழிந்தன. ஆனால் கோதுமையும், கம்பும், பிற தானியங்களைக் காட்டிலும் தாமதமாக அறுவடை ஆகும். எனவே இவை அழிக்கப்படவில்லை. மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வெளியேபோய் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ய கரங்களை உயர்த்தினான். உடனே கல்மழையும், புயலும், இடியும்கூட நின்றுபோனது. மழை, புயல், இடி ஆகியவை நின்றுபோயின என்பதைக் கண்ட பார்வோன் மீண்டும் தவறு செய்தான். அவனும், அவனது அதிகாரிகளும் மீண்டும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்ய பார்வோன் மறுத்தான். மோசேயின் மூலமாக கர்த்தர் கூறியபடியே இது நிகழ்ந்தது.
யாத்திராகமம் 9:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில், கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளை நோய் உண்டாகும். கர்த்தர் இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார். மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார். மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை. அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன். அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார். அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று. அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது. ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு. விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன். நீ பூமியில் இராமல் நாசமாய்ப்போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன். நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா? எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன். இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார். பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான். எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்; கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலே மாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர். இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான். மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர். ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான். அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று. கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது. மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.