யாத்திராகமம் 7:1-25

யாத்திராகமம் 7:1-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும். நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன். பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன். நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார். மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப்போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார். மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான். காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேளாமற்போனீர். இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி, நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார். கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான். பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள். கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.

யாத்திராகமம் 7:1-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார், நான் உன்னைப் பார்வோனுக்கு இறைவனைப்போல் ஆக்கியிருக்கிறேன், உன் சகோதரன் ஆரோன் உன் இறைவாக்கினனாக இருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவற்றையும் நீ சொல்லவேண்டும், உன் சகோதரன் ஆரோன் பார்வோனிடம் இஸ்ரயேலரை அவனுடைய நாட்டிலிருந்து வெளியே போகவிடும்படிச் சொல்லவேண்டும். ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன், எகிப்தில் என் அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் அதிகமாக்கினாலும், பார்வோன் உனக்குச் செவிகொடுக்கமாட்டான். அப்பொழுது நான் எகிப்தின்மேல் என் கரத்தை வைத்து, தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களால், என் மக்களாகிய இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவேன்; அவர்களைக் கோத்திரப் பிரிவுகளாக கொண்டுவருவேன். நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்.” மோசேயும் ஆரோனும் யெகோவா தமக்குக் கட்டளையிட்டதையே செய்தார்கள். அவர்கள் பார்வோனிடம் பேசின நாட்களில், மோசே 80 வயதுடையவனாகவும், ஆரோன் 83 வயதுடையவனாகவும் இருந்தார்கள். யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது, “பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தைக் கேட்பான். அப்பொழுது நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகக் கீழே எறிந்துவிடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் யெகோவாவின் கட்டளைப்படி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது. அப்பொழுது பார்வோன், ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள்: அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் கோலைக் கீழே போட்டபோது அவை பாம்பாக மாறின. ஆனால் ஆரோனின் கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிவிட்டது. ஆனாலும், யெகோவா சொல்லியிருந்தபடியே, பார்வோனுடைய இருதயம் கடினமாகியது; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோனின் இருதயம் கடினமாகிவிட்டது; அவன் இஸ்ரயேலரை போகவிட மறுக்கிறான். காலையில் பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது நீ அவனிடம் போ. பாம்பாக மாறிய கோலை உன் கையில் எடுத்துக்கொண்டு நைல் நதிக்கரையிலே அவனைச் சந்திக்கக் காத்து நில். அவன் வந்ததும் நீ அவனிடம், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா என்னை உன்னிடம் அனுப்பி, பாலைவனத்திலே என்னை வழிபடும்படி என்னுடைய மக்களைப் போகவிடு’ என்று சொல்லியிருந்தார். ஆனாலும் இதுவரை நீர் அதைக் கேட்கவில்லை. அதனால் யெகோவா உனக்குச் சொல்வது இதுவே: ‘நானே யெகோவா என்பதை இதனால் நீ அறிந்துகொள்வாய்: என் கையிலுள்ள கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், உடனே அது இரத்தமாக மாறும். நைல் நதியிலுள்ள மீன்கள் செத்து, நதியோ நாற்றமெடுக்கும்; எகிப்தியரால் அதன் தண்ணீரைக் குடிக்கமுடியாமல் போகும்’ என்று சொல்” என்றார். பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘எகிப்திலே தண்ணீருள்ள இடங்களான ஆறுகள், அருவிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ள எல்லா இடங்களின் மேலும் உன் கோலை எடுத்து, உன் கையை நீட்டு’ என்று சொல். அவை இரத்தமாக மாறிவிடும். எகிப்து எங்கும் இரத்தம் இருக்கும், மரத்தினால் மற்றும் கல்லினாலான பாத்திரங்களிலும் உள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார். மோசேயும் ஆரோனும் யெகோவா கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக தன் கோலை நீட்டி, நைல் நதியிலிருந்த தண்ணீரின்மேல் அடித்தான்; தண்ணீர் முழுவதும் இரத்தமாக மாறிற்று. நைல் நதியிலுள்ள மீன்களெல்லாம் செத்துப்போயின; எகிப்தியர் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி நைல் நதி துர்நாற்றமெடுத்தது. எகிப்தில் எங்கும் இரத்தமாயிருந்தது. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள், அதனால் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக பார்வோன் திரும்பி, தன் அரண்மனைக்குள் போய்விட்டான், அவன் யெகோவா செய்ததைக்கூட பொருட்படுத்தவில்லை. ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் தோண்டினார்கள். யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் கடந்தன.

யாத்திராகமம் 7:1-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயை நோக்கி: “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும். நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன். பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்திற்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன். நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர்கள் அறிவார்கள்” என்றார். மோசேயும் ஆரோனும் யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது. யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும்” என்றார். மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது. அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது. யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான். காலையில் நீ பார்வோனிடம் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்தில் நின்று, பாம்பாக மாறின கோலை உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அவனை நோக்கி: வனாந்திரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேட்காமற்போனீர். இதோ, என்னுடைய கையில் இருக்கிற கோலால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாக மாறி, நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போகும்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர்கள் குடிக்கமுடியாமல் அருவருப்பார்கள்; இதினால் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார். மேலும், யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல்” என்றார். யெகோவா கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான். பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான். நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள். யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.

யாத்திராகமம் 7:1-25 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடம், “நான் உன்னோடு இருப்பேன். பார்வோனுக்கு நீ ஒரு பேரரசனைப் போல் தோன்றுவாய். ஆரோன் உனக்காகப் பேசுகிறவனாய் இருப்பான். நான் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் ஆரோனுக்குச் சொல். நான் சொல்லும் காரியங்களை அவன் ராஜாவுக்குச் சொல்வான். இஸ்ரவேல் ஜனங்கள் இத்தேசத்தை விட்டுச் செல்வதற்கு பார்வோன் அனுமதிப்பான். ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி நான் செய்வேன். நீங்கள் சொல்லுகிற காரியங்களுக்கு அவன் கீழ்ப்படியமாட்டான். நான் யாரென்பதை நிரூபிப்பதற்காக எகிப்தில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வேன். ஆனால் உங்களுக்கு செவிகொடுக்க மறுப்பான். பிறகு நான் எகிப்தை அதிகமாகத் தண்டிப்பேன். என் ஜனங்களையும் வெளியே கொண்டு வருவேன். அப்போது எகிப்து ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். அதன்பின் அவர்கள் தேசத்திலிருந்து என் ஜனங்களை வழி நடத்துவேன்” என்றார். கர்த்தரின் கட்டளைகளுக்கு மோசேயும் ஆரோனும் கீழ்ப்படிந்தனர். பார்வோனிடம் பேசும்போது, மோசே 80 வயதுள்ளவனாகவும் ஆரோன் 83 வயதுள்ளவனாகவும் இருந்தனர். கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், “பார்வோன் உங்கள் வல்லமையை நிரூபித்துக் காட்டச் சொல்வான். உங்களிடம் ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டுமென பார்வோன் கேட்பான். ஆரோனின் கைத்தடியை நிலத்தில் வீசும்படியாகச் சொல். பார்வோன் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, கைத்தடி ஒரு பாம்பாக மாறும்” என்றார். எனவே மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் போய், கர்த்தர் சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் அவனது கைத்தடியைக் கீழே எறிந்தான். பார்வோனும் அவனது அதிகாரிகளும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, கைத்தடி பாம்பாக மாறிற்று. எனவே, ராஜா தன் நாட்டு ஞானிகளுக்கும், மந்திரவாதிகளுக்கும் சொல்லியனுப்பினான். அம்மனிதர்களும் அவர்களது உபாயங்களைப் பயன்படுத்தி ஆரோன் செய்தவாறே செய்தனர். அவர்களும் தங்கள் கைத்தடிகளை நிலத்தின் மேல் எறிந்தபோது, அக்கைத்தடிகள் பாம்புகளாயின, ஆனால் ஆரோனின் கைத்தடியோ அவற்றைத் தின்றது. பார்வோனின் இருதயம் கடினமாகி, இப்போதும் ஜனங்களைப் போக விட மறுத்துவிட்டான். கர்த்தர் நடக்குமெனக் கூறியபடியே இது நிகழ்ந்தது. மோசேயும் ஆரோனும் கூறுவதைக் கேட்க ராஜா மறுத்தான். கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் பிடிவாதமாக இருக்கிறான். பார்வோன் ஜனங்களை அனுப்ப மறுக்கிறான். காலையில் பார்வோன் நதிக்குப் போவான். நைல் நதியினருகே பாம்பாக மாறின உனது கைத்தடியை எடுத்துக்கொண்டு அவனிடம் போ. அவனிடம் இதைக் கூறு: ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பினார். பாலைவனத்தில் அவரது ஜனங்கள் சென்று தொழுதுகொள்ள அனுப்பு என்று உன்னிடம் கூறுமாறு எனக்கு கர்த்தர் சொன்னார். இதுவரைக்கும் நீ கர்த்தர் கூறியவற்றிற்கு செவிசாய்க்கவில்லை. எனவே, அவரே கர்த்தர் என்பதை உனக்குக் காட்டுவதற்காக சில காரியங்களைச் செய்வதாக கர்த்தர் சொல்கிறார். எனது கையிலிருக்கும் இந்தக் கைத்தடியால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன். நதி இரத்தமாக மாறும். நதியின் மீன்கள் செத்துப்போகும், நதியிலிருந்து துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும். அப்போது நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருகமுடியாது’” என்று கூறினார். கர்த்தர் மோசேயை நோக்கி, “ஆரோனின் கையிலுள்ள கைத்தடியை நதிகள், கால்வாய்கள், ஏரிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் அனைத்தின் மேலாகவும் நீட்டும்படியாக ஆரோனுக்குக் கூறு, அவன் அவ்வாறு செய்தவுடன் தண்ணீரெல்லாம் இரத்தமாகும். மரத்தாலும் கல்லாலுமாகிய ஜாடிகளில் நிரப்பியிருக்கும் தண்ணீர் உட்பட, எல்லா இடங்களிலுள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார். ஆகையால் மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் கைத்தடியை உயர்த்தி நைல் நதியின் தண்ணீரை பார்வோன் முன்பாகவும் அவனது அதிகாரிகள் முன்பாகவும் அடித்தான். நதியின் தண்ணீர் முழுவதும் இரத்தமாயிற்று. நதியின் மீன்கள் இறந்தன. நதி நாற்றமெடுத்தது. நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமலாயிற்று. எகிப்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டது. எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி இதையே செய்தார்கள். எனினும், பார்வோன் மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க மறுத்தான். இது கர்த்தர் சொன்னபடியே நடந்தது. மோசேயும், ஆரோனும் செய்தவற்றை பார்வோன் பொருட்படுத்தவில்லை. பார்வோன் மறுபுறமாகத் திரும்பி வீட்டிற்குள் சென்றான். நதியிலிருந்து தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமற்போயிற்று. எனவே, அவர்கள் நதியைச் சுற்றிலும் குடிப்பதற்குரிய தண்ணீரைப் பெறுவதற்காக கிணறுகளைத் தோண்டினர். நைல் நதியை கர்த்தர் மாற்றிய பின்னர் ஏழு நாட்கள் கழிந்தன.