யாத்திராகமம் 6:1-13

யாத்திராகமம் 6:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ காண்பாய்: என் பலத்த கரத்தின் நிமித்தம் அவன் அவர்களைப் போகவிடுவான்; அவன் என் கரத்தின் வல்லமையின் நிமித்தம் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தியே விடுவான்” என்றார். பின்னும் இறைவன் மோசேயிடம், “நானே யெகோவா. ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் எல்லாம் வல்ல இறைவனாக நானே காட்சியளித்தேன். ஆனாலும் யெகோவா என்ற என் பெயரால் நான் என்னை அவர்களுக்கு அறியச்செய்யவில்லை. அத்துடன், ‘இஸ்ரயேல் மக்கள் பிறநாட்டினராய் வாழ்ந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பேன்’ என்று அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் ஏற்படுத்தினேன். மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்துகிற இஸ்ரயேலரின் அழுகுரலைக் கேட்டிருக்கிறேன்; என்னுடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தேன். “ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘நானே யெகோவா, நான் எகிப்தியரின் நுகத்தின் கீழிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன். உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று அறிந்துகொள்வீர்கள். ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் கொடுப்பேன் என்று, உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாட்டிற்கு உங்களைக் கொண்டுவருவேன். அதை உங்களுக்கு உடைமையாகக் கொடுப்பேன். நானே யெகோவா’ ” என்றார். மோசே இஸ்ரயேலருக்கு இவற்றை அறிவித்தான், ஆனால் அவர்களோ மனச்சோர்வினாலும் கொடூரமான அடிமைத்தனத்தினாலும் துன்பப்பட்டதனால் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்திய அரசனாகிய பார்வோனிடம் நீ போ, அவனுடைய நாட்டிலிருந்து இஸ்ரயேலரைப் போகவிடும்படிச் சொல்” என்றார். ஆனால் மோசே யெகோவாவிடம், “இஸ்ரயேலரே எனக்குச் செவிகொடுக்கவில்லை என்றால், பார்வோன் ஏன் செவிகொடுக்கவேண்டும்? நானோ பண்படாத உதடுகளுள்ளவன்” என்றான். யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேலரைப் பற்றியும், எகிப்திய அரசன் பார்வோனைப் பற்றியும் பேசி, எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

யாத்திராகமம் 6:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: “நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன். ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார். இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள். பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனுடன் பேசு” என்றார். மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில் நின்று, “இஸ்ரவேலர்களே நான் சொல்வதைக் கேட்கவில்லை; பார்வோன் எப்படி நான் சொல்வதைக் கேட்பான்? நான் திக்கு வாயுள்ளவன்” என்றான். யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.

யாத்திராகமம் 6:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய். அவனுக்கு எதிராக என் மகா வல்லமையைப் பயன்படுத்துவேன். அவன் என் ஜனங்களைப் போகவிடுவான். அவர்களை அனுப்ப மிக்க ஆயத்தத்தோடு இருப்பான். அவர்கள் போகும்படியாக அவன் கட்டாயப்படுத்துவான்” என்றார். பின், தேவன் மோசேயை நோக்கி, “நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல. இஸ்ரவேல் ஜனங்கள் படும் தொல்லைகளை நான் இப்போது அறிகிறேன். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் நான் அறிகிறேன், எனது உடன்படிக்கையை நினைவுகூருகிறேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, ‘நானே கர்த்தர். நான் உங்களை மீட்பேன். நான் உங்களை விடுவிப்பேன். எகிப்தியர்களுக்கு நீங்கள் அடிமைகளாக இருக்கமாட்டீர்கள். எனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தி, எகிப்தியருக்குப் பயங்கரமான தண்டனை அளிப்பேன். பின், உங்களை மீட்பேன். நீங்கள் எனது ஜனங்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாக இருப்பேன். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டேன் என்பதை அறிவீர்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஒரு பெரிய வாக்குத்தத்தம் பண்ணினேன். அவர்களுக்கு ஒரு விசேஷமான தேசத்தை அளிப்பதாக வாக்களித்தேன். எனவே உங்களை அத்தேசத்திற்கு வழிநடத்துவேன். உங்களுக்கு அத்தேசத்தைத் தருவேன், அது உங்களுடையதாக இருக்கும். நானே கர்த்தர்!’ என்று கூறியதாகச் சொல்லுங்கள்” என்றார். மோசே இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறினான். ஆனால் ஜனங்கள் அதற்குச் செவிசாய்க்கவிலை. அவர்கள் மிகக் கடினமாக உழைத்ததால் மோசேயிடம் பொறுமையிழந்து காணப்பட்டார்கள். அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய் இஸ்ரவேல் ஜனங்களை தனது தேசத்திலிருந்து போகவிடும்படியாகக் கூறு” என்றார். ஆனால் மோசே, “இஸ்ரவேல் ஜனங்களே எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்கள்! எனவே பார்வோனும் நான் சொல்வதைக் கேட்கமாட்டான். நான் பேச திறமையில்லாதவன்” என்று பதில் கூறினான். ஆனால் கர்த்தர் மோசேயோடும், ஆரோனோடும் பேசினார். இஸ்ரவேல் ஜனங்களிடமும், பார்வோனிடமும் சென்று பேசுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துமாறும் அவர்களுக்கு தேவன் கட்டளையிட்டார்.

யாத்திராகமம் 6:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன். ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார். இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள். பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார். மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்