யாத்திராகமம் 4:10-17

யாத்திராகமம் 4:10-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, கடந்த காலத்திலோ அல்லது நீர் உமது அடியானுடன் பேசியதிலிருந்தோ, நான் ஒருபோதும் பேச்சுத்திறன் உடையவனாய் இருக்கவில்லை; என் வாய் திக்கும், என் நாவு குழறும்.” அப்பொழுது யெகோவா அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை ஊமையாகவோ செவிடாகவோ ஆக்குகிறவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, அவனைக் குருடனாக்குவதோ யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? இப்பொழுதே நீ போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவிசெய்து, நீ சொல்ல வேண்டியதையும் உனக்குப் போதிப்பேன்” என்றார். அதற்கு மோசேயோ, “யெகோவாவே, தயவுசெய்து இதைச் செய்வதற்கு வேறொருவனை அனுப்பும்” என்றான். அதனால் மோசேக்கு எதிராக யெகோவாவின் கடுங்கோபம் மூண்டது; அவர், “அப்படியானால் லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் இருக்கிறான் அல்லவா? அவன் நன்றாகப் பேசுவான் என்பதை நான் அறிவேன். அவன் உன்னைச் சந்திப்பதற்கு வந்துகொண்டிருக்கிறான், உன்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைவான். நீ அவனுடன் பேசி, அவன் சொல்லவேண்டிய வார்த்தைகளை அவனுக்குச் சொல்வாய்; அப்பொழுது நான் உங்கள் இருவருக்கும் பேசுவதற்கு உதவிசெய்து, நீங்கள் செய்யவேண்டியதையும் உங்களுக்குப் போதிப்பேன். அவன் உனக்காக மக்களிடம் பேசுவான், அவன் உனக்கு வாய் போலிருப்பான்; நீ அவனுக்கு இறைவன்போல் இருப்பாய். ஆனாலும் நீ இந்தக் கோலை கையில் கொண்டுபோ; இதைக்கொண்டு அற்புத அடையாளங்களை உன்னால் செய்யமுடியும்” என்றார்.

யாத்திராகமம் 4:10-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றான். அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், பார்வையற்றவனையும் உண்டாக்கினவர் யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன்னுடைய வாயோடு இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார். அதற்கு அவன்: “ஆண்டவரே. நீர் அனுப்ப விரும்புகிற யாரையாவது அனுப்பும்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயின்மேல் கோபப்பட்டு: “லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும். நீ அவனுடன் பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன். அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். இந்தக் கோலையும் உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய்” என்றார்.

யாத்திராகமம் 4:10-17 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் மோசே கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் சிறப்பாக எப்போதும் பேசியதில்லை. இப்போது உம்மிடம் பேசிய பிறகும்கூட, நான் சிறந்த பேச்சாளனாக மாறவில்லை. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத திக்குவாய் உடையவன் என்பதும் உமக்கு தெரியும்” என்று கூறினான். அப்போது கர்த்தர் அவனை நோக்கி, “யார் மனிதனின் வாயை உண்டாக்கினார்? யாரால் மனிதனைச் செவிடனாகவும், ஊமையாகவும் செய்யமுடியும்? யார் ஒருவனைக் குருடனாக்கக் கூடும்? யார் ஒருவனுக்குப் பார்வை தரமுடியும்? இக்காரியங்களைச் செய்ய வல்லவர் நானே. நான் யேகோவா. எனவே நீ போ! நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்லவேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்” என்றார். ஆனால் மோசே, “எனது கர்த்தாவே, வேறு யாரையாவது அனுப்புமாறு உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னை அனுப்பவேண்டாம்” என்றான். அப்போது மோசேயின்மேல் கர்த்தர் கோபம் கொண்டு, “நல்லது! உனக்கு உதவியாக நான் ஒருவனைத் தருவேன். லேவியனாகிய உனது சகோதரன் ஆரோனை நான் பயன்படுத்துவேன். அவன் தேர்ந்த பேச்சாளன். அவன் உன்னைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறான். அவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவான். அவன் உன்னோடுகூட பார்வோனிடம் வருவான். நீ கூற வேண்டியதை உனக்குச் சொல்வேன். நீ அதை ஆரோனுக்குச் சொல். பார்வோனிடம் பேச வேண்டிய தகுந்த வார்த்தைகளை ஆரோன் தெரிந்துகொள்வான். உனக்காக ஆரோன் ஜனங்களிடமும் பேசுவான். நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய், உனக்குரிய பேச்சாளனாக அவன் இருப்பான். எனவே போ. உனது கைத்தடியையும் எடுத்துச்செல். நான் உன்னோடிருக்கிறேன் என்பதை ஜனங்களுக்குக் காட்டுவதற்கு உனது கைத்தடியையும், பிற அற்புதங்களையும் பயன்படுத்து” என்றார்.

யாத்திராகமம் 4:10-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபம் மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும். நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன். அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.