யாத்திராகமம் 4:1-9

யாத்திராகமம் 4:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்ற சதையைப்போலாயிற்று. அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.

யாத்திராகமம் 4:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே மறுமொழியாக, “அவர்கள் என்னை நம்பாமலும், நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும், ‘யெகோவா உனக்கு காட்சி அளிக்கவில்லை’ என்று சொல்வார்களானால் நான் என்ன செய்வேன்?” என்றான். அதற்கு யெகோவா அவனிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். “ஒரு கோல்” என்றான். “அதைத் தரையில் எறிந்துவிடு” என்று யெகோவா சொன்னார். மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாக மாறியது, மோசே விலகி ஓடினான். அப்பொழுது யெகோவா, “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தான்; அது அவன் கையில் கோலாக மாறியது. “ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான அவர்களின் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உனக்கு காட்சியளித்திருக்கிறார் என்பதை அவர்கள் நம்பும்படி இதுவே அடையாளம்” என்று யெகோவா சொன்னார். மேலும் யெகோவா மோசேயிடம், “உன் கையை உன் மேலங்கியினுள் வை” என்றார். எனவே மோசே தன் கையை மேலங்கிக்குள் வைத்தான்; அவன் அதை வெளியே எடுத்தபோது, அவனுடைய கை உறைபனியைப்போல் குஷ்டமாகியிருந்தது. “இப்பொழுது திரும்ப உனது கையை மேலங்கிக்குள் வை” என்றார். அப்படியே மோசே, மறுபடியும் அங்கிக்குள் கையை வைத்தான். திரும்பவும் கையை வெளியே எடுத்தபோது, அது சுகமடைந்து உடலின் மற்ற பகுதிகளைப்போல் மாறினது. பின்பு யெகோவா, “அவர்கள் உன்னை நம்பாமல் அல்லது முதல் அற்புத அடையாளத்தைக் கவனிக்காமல் விட்டிருந்தாலும், இரண்டாவதை நம்பக்கூடும். இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமல் அல்லது உனக்குச் செவிகொடுக்காமல் போனால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதைக் காய்ந்த தரையில் ஊற்று; நீ நதியிலிருந்து எடுக்கிற தண்ணீர் தரையில் இரத்தமாய் மாறிவிடும்” என்றார்.

யாத்திராகமம் 4:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது மோசே: “அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; யெகோவா உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான். யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான். “அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். மேலும், யெகோவா அவனை நோக்கி: “உன் கையை உன்னுடைய மடியிலே போடு” என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: “உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய உன் மடியிலே போடு” என்றார். அவன் தன்னுடைய கையைத் திரும்பத் தன்னுடைய மடியிலே போட்டு, மீண்டும் வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலானது. அப்பொழுது அவர்: “முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும்” என்றார்.

யாத்திராகமம் 4:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது மோசே தேவனை நோக்கி, “நீர் என்னை அனுப்பினீர் என்று கூறும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். அவர்கள், ‘தேவன் (யேகோவா) உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்பார்கள்” என்றான். தேவன் மோசேயை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். மோசே, “இது எனது கைத்தடி” என்றான். அப்போது தேவன், “உனது கைத்தடியை தரையில் போடு” என்றார். மோசே, தனது கைத்தடியை நிலத்தின் மேல் போட்டான். அது பாம்பாக மாறிற்று. மோசே அதற்குப் பயந்து அங்கிருந்து ஓடினான். கர்த்தர் மோசேயை நோக்கி, “கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி” என்றார். எனவே மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தான். மோசே அவ்வாறு செய்தபோது, பாம்பு மீண்டும் கைத்தடியாயிற்று. அப்போது, தேவன், “உனது கைத் தடியை இவ்வாறு பயன்படுத்து. அப்போது நீ உனது முற்பிதாக்களின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரைக் கண்டாய் என்பதை ஜனங்கள் நம்புவார்கள்” என்றார். பின் கர்த்தர், “உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன். உனது கையை அங்கிக்குள் நுழை” என்றார். எனவே மோசே தன் அங்கிக்குள் கையை நுழைத்தான். மோசே அங்கியிலிருந்து கையை எடுத்தபோது, அது மாறிப்போயிருந்தது. கை முழுவதும் உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் நிரம்பியிருந்தது. அப்போது தேவன், “உனது கையை அங்கிக்குள் மீண்டும் நுழை” என்றார். மோசே அவ்வாறே அங்கிக்குள் கையை நுழைத்தான். பின் மோசே கையை வெளியே எடுத்தபோது அவனது கை முன்பிருந்ததைப்போலவே நன்றாக இருந்தது. அப்போது தேவன், “நீ உனது கைத்தடியைப் பயன்படுத்தும்போது ஒருவேளை ஜனங்கள் உன்னை நம்பாவிட்டாலும், இந்த அடையாளத்தைக் காட்டும்போது, அவர்கள் உன்னை நம்புவார்கள் இந்த இரண்டு காரியங்களைக் காண்பித்து, அவர்கள் உன்னை நம்ப மறுத்தால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி, அதனைத் தரையில் ஊற்று. அது நிலத்தைத் தொட்டதும் இரத்தமாக மாறும்” என்றார்.