யாத்திராகமம் 38:9-31

யாத்திராகமம் 38:9-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான். அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி. வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி. மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம். ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. சுற்றுப்பிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது. தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது. பிராகார வாசலின் தொங்குதிரை இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம். அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி. வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம். மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே. யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான். அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான். பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது. சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது. எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது. அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று. அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான். காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது. அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப்பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும், சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகலமுளைகளையும் பண்ணினான்.

யாத்திராகமம் 38:9-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் அவர்கள் முற்றத்தை அமைத்தார்கள். அது தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கு திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் இருந்தன. அத்திரையைத் தொங்கவிடுவதற்கு இருபது கம்பங்களும், அதற்கு இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன. அதன் வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கும் திரைகள் இருந்ததால், இருபது கம்பங்களும், இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றிற்கும் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன. முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது. அதற்குத் திரைகளும் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான பத்து கம்பங்களும், பத்து அடித்தளங்களும் இருந்தன. அத்துடன் அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், கம்பங்களில் பூண்களும் இருந்தன. சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது. வாசலின் ஒரு பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருந்தன. முற்றத்து வாசலின் மற்றப் பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கு மூன்று கம்பங்களும் மூன்று அடித்தளங்களும் இருந்தன. முற்றத்தைச் சுற்றிலும் இருந்த திரைகளெல்லாம் திரிக்கப்பட்ட மென்பட்டுநூலால் நெய்யப்பட்டிருந்தன. அங்கிருந்த எல்லா கம்பங்களின் அடித்தளங்களும் வெண்கலத்தாலும், அக்கம்பங்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகள் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. இவ்வாறு முற்றத்தின் எல்லா கம்பங்களும் வெள்ளிப் பூண்கள் உடையதாய் இருந்தன. முற்றத்தின் நுழைவு வாசலுக்கு போடப்பட்ட திரை, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் நெய்யப்பட்ட சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருந்தது. அது இருபது முழம் நீளமும், முற்றத்தின் திரைகளைப்போல் ஐந்து முழம் உயரம் உடையதுமாய் இருந்தது. அதைத் தொங்கவிடுவதற்கு நான்கு கம்பங்களும், நான்கு வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகளும் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தையும், அதன் முற்றத்தையும் சுற்றியிருந்த கூடார முளைகள் வெண்கலத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. சாட்சிக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தொகைகள் இவையே: அவைகள் மோசேயின் கட்டளைப்படி, ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் மேற்பார்வையின்கீழ் லேவியர்களால் பதிவுசெய்யப்பட்டிருந்தன. யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதை எல்லாம் செய்தான். தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கலைஞனும், ஓவியனும், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் வேலைசெய்யும் சித்திரத் தையல்காரனுமாயிருந்தான். பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும் என்று, அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்தத்தொகை, பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி 29 தாலந்துகளும் 730 சேக்கலுமாயிருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எண்ணப்பட்ட மக்கள் சமுதாயத்திலிருந்து பெறப்பட்ட வெள்ளி, பரிசுத்த இடத்தின் நிறையின்படி 100 தாலந்துகளும், 1,775 சேக்கலுமாயிருந்தது. இருபது வயதிற்கும் அதற்கு மேற்பட்டவர்களும் கணக்கிடப்பட்டு கடந்து செல்லும்போது ஒவ்வொருவரிடமிருந்தும் ஆளுக்கு ஒரு பெக்கா வசூலிக்கப்பட்டது. ஒரு பெக்கா என்பது பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி அரைச்சேக்கலாகும். எண்ணப்பட்ட மனிதரின் மொத்தத்தொகை 6,03,550 பேர்கள். கொடுக்கப்பட்ட அந்த 100 தாலந்து வெள்ளியும் பரிசுத்த இடத்திற்கான அடித்தளங்களையும், திரைக்கான அடித்தளங்களையும் செய்ய உபயோகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அடித்தளத்துக்கும் ஒரு அடித்தளத்துக்கு ஒரு தாலந்து என்ற கணக்கின்படி 100 அடித்தளங்களுக்கு 100 தாலந்துகள் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் 1,775 சேக்கல் வெள்ளியை கம்பங்களுக்கான கொக்கிகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான மேற்பரப்பைத் தகட்டால் மூடுவதற்கும், கம்பங்களுக்கான பூண்களைச் செய்வதற்கும் உபயோகித்தார்கள். அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பெறப்பட்ட வெண்கலத்தின் அளவு 70 தாலந்துகளும், 2,400 சேக்கலுமாகும். அந்த வெண்கலத்தை சபைக் கூடாரத்தின் நுழைவு வாசலின் அடித்தளங்களையும், வெண்கலபீடத்தையும், அதற்கான வெண்கலச் சல்லடையையும், பீடத்திற்குரிய எல்லா பாத்திரங்களையும் செய்ய உபயோகித்தார்கள். அத்துடன் முற்றத்தைச் சுற்றியிருந்த அடித்தளங்களையும், வாசலின் அடித்தளத்தையும், இறைசமுகக் கூடாரத்திற்கும் அதைச் சுற்றியிருந்த முற்றத்திற்குமான கூடார முளைகளையும் செய்ய உபயோகித்தார்கள்.

யாத்திராகமம் 38:9-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிராகாரத்தையும் உண்டாக்கினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்கு திரைகளைச் செய்தான். அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. வடபக்கத்துத் தொங்கு திரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் கம்பிகளும் வெள்ளி. மேற்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம். ஒருபுறத்துத் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. பிராகாரவாசலின் ஒருபுறத்திற்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. சுற்றுபிராகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது. தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், கம்பிகளும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிக்கம்பிகள் போடப்பட்டவைகளுமாக இருந்தது. பிராகாரத்தின் வாசலின் தொங்கு திரை இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட சித்திரத்தையல் வேலையாக இருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்கு திரைகளைப்போல ஐந்து முழம். அவைகளின் தூண்கள் நான்கு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நான்கு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பிராகாரத்திற்கும் சுற்றிலும் இருந்த ஆப்புகளெல்லாம் வெண்கலம். மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் கையிலே லேவியர்களின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் ஆசரிப்புக்கூடாரத்தின் பொருள்களின் தொகை இதுவே. யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான். அவனுடன் தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாப் அலங்காரக் கொத்துவேலைக்காரனும், வித்தியாசமான வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத்தையல் வேலை செய்கிறவனுமாக இருந்தான். பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் எல்லாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாக இருந்தது. சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாக இருந்தது. எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது. அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்க்கப்பட்டது; பாதத்திற்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவானது. அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குக் கொக்கிகளைச்செய்து, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குக் கம்பிகளை உண்டாக்கினான். காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாக இருந்தது. அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் எல்லாப் பணிப்பொருட்களையும், சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா ஆப்புகளையும், சுற்றுப்பிராகாரத்தின் எல்லா ஆப்புகளையும் செய்தான்.

யாத்திராகமம் 38:9-31 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன. தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான். பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன. வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான். வெளிப் பிரகாரத்தின் கிழக்குப்புறத்திலிருந்து தொங்குதிரை 50 முழ அகலம் உடையதாக இருந்தது. பிரகாரத்தின் நுழைவாயில் இப்பக்கத்தில் இருந்தது. நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் தொங்கு திரை 15 முழ நீள முடையதாகவும் மூன்று பீடங்களின்மேல் நின்ற மூன்று தூண்களைக் கொண்டதாகவும் இருந்தது. நுழை வாயிலின் மறுபுறத்திலுள்ள தொங்கு திரைகள் 15 முழ நீளமுடையதாக இருந்தது. அந்தப் பக்கத்தில் மூன்று தூண்களும் அவற்றிக்கு மூன்று பீடங்களும் அமைத்தனர். பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகள் மெல்லிய துகிலால் செய்யப்பட்டன. தூண்களின் பீடங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. கொக்கிகளும், திரைப்பூண்களும், வெள்ளியால் செய்யப்பட்டன. தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. பிரகாரத்தின் தூண்களில் வெள்ளியாலான திரைப்பூண்கள் இருந்தன. பிரகார நுழைவாயிலின் தொங்குதிரைகள் மெல்லிய துகிலாலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் நெய்யப்பட்டன. அவற்றில் பல சித்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. திரையானது 20 முழ நீளமும் 5 முழ உயரமும் உடையதாக இருந்தது. அவை பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகளின் உயரம் கொண்டிருந்தன. தொங்குதிரையை நான்கு தூண்களும், வெண்கல பீடங்களும் தாங்கின. தூண்களின் கொக்கிகள் வெள்ளியால் ஆனவை ஆகும். தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. திரைப் பூண்களும் வெள்ளியாலாயின. பரிசுத்தக் கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகள் வெண்கலத்தால் செய்யப்பட்டன. உடன்படிக்கையின் கூடாரமாகிய பரிசுத்த கூடாரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களை எல்லாம் லேவி குடும்பத்தார் எழுதி வைத்துக்கொள்ளும்படியாக மோசே கட்டளையிட்டான். பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை ஆரோனின் குமாரனாகிய இத்தாமார் ஏற்றுக்கொண்டான். மோசேக்கு கர்த்தர் விதித்த எல்லாக் கட்டளைகளையும் யூதாவின் கோத்திரத்தின் வழியே வந்த ஊரின் குமாரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் நிறைவேற்றினான். தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் குமாரனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான். கர்த்தரின் பரிசுத்த இடத்திற்கு 2 டன்கள் எடைக்கு மேற்பட்ட பொன் காணிக்கையாக அளிக்கப்பட்டது. (அதிகாரப் பூர்வமான அளவு எடையின்படி அது எடையிடப்பட்டது.) எண்ணிக்கை எடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் 3 3/4 டன்கள் வெள்ளி கொடுத்தனர். (இதுவும் அதிகாரப்பூர்வமான அளவின் தராசில் நிறுக்கப்பட்டது) இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்கள் எண்ணப்பட்டனர். 6,03,550 ஆண்கள் இருந்தனர். ஒவ்வொருவனும் 1 பெக்கா வெள்ளியை வரியாக அளித்தான். (அதிகாரப்பூர்வமான அளவின்படி 1 பெக்கா என்பது 1/2 சேக்கல் எடை அளவாகும்.) கர்த்தரின் பரிசுத்த இடத்தின் தொங்கு திரைகளுக்கும் 100 பீடங்களை உண்டாக்குவதற்கு அந்த 3 3/4 டன்கள் வெள்ளியைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பீடத்திற்கும் சுமார் 75 பவுண்டு வெள்ளி வீதம் உபயோகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 50 பவுண்டு வெள்ளியால் கொக்கிகளையும், திரைப்பூண்களையும், தூண்களின் வெள்ளிப் பூச்சையும் செய்தனர். கர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது. ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் பீடங்களைச் செய்வதற்கு அது பயன்பட்டது. பீடத்தையும், சல்லடையையும் செய்வதற்கும் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். பலிபீடத்தின் எல்லாக் கருவிகளையும், பாத்திரங்களையும் செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும், நுழைவாயிலில் உள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும் அமைப்பதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் பரிசுத்தக்கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் தொங்கு திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகளைச் செய்தனர்.