யாத்திராகமம் 36:6-38
யாத்திராகமம் 36:6-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது மோசே, “இனிமேல் எந்த ஒரு ஆணோ, பெண்ணோ பரிசுத்த இடத்தின் வேலைக்கான காணிக்கையாக எதையும் கொண்டுவர வேண்டாம்” என உத்தரவிட்டான். அது முகாமெங்கும் உள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விதமாக மக்கள் கூடுதலாகப் பொருட்களைக் கொண்டுவருவது நிறுத்தப்பட்டது. ஏனெனில், எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதற்குத் தேவையானவற்றைவிட அதிகமான பொருட்கள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன. வேலையாட்களில் திறமையானவர்கள் எல்லோரும், தரமாய் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்தார்கள். அதில் கேருபீன்களை சித்திரத் தையல்காரனுடைய வேலையால் அலங்கரித்து, அவற்றால் இறைசமுகக் கூடாரத்தை அமைத்தார்கள். எல்லா திரைகளும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன. பின்பு ஐந்து திரைகளை ஒன்றாக இணைத்து, மற்ற ஐந்து திரைகளையும் அதேவிதமாகவே இணைத்தார்கள். இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்தார்கள். அவ்விதமே இணைக்கப்பட்ட மற்றத்திரையின் தொகுப்பின் விளிம்பு நெடுகிலும் செய்தார்கள். வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கும்படி, ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும், மறு தொகுப்பு திரையின், ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும் அமைத்தார்கள். பின் ஐம்பது தங்கக்கொக்கிகளைச் செய்து, இரண்டு தொகுப்புத் திரைகளையும் ஒன்றாய் இணைத்தார்கள். இவ்வாறு இறைசமுகக் கூடாரம் ஒரே அமைப்பாய் ஆக்கப்பட்டது. இறைசமுகக் கூடாரத்தின் மேலாக ஒரு கூடாரத்தைப் போடுவதற்கு ஆட்டு உரோமத்தினால் பதினோரு திரைகளைச் செய்தார்கள். அந்த பதினொரு திரைகளும், ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன. அவர்கள் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளை இன்னொரு தொகுப்பாகவும் இணைத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும் ஐம்பது வளையங்களை அமைத்தார்கள். மற்ற தொகுப்பு கடைசி திரையின் ஒரு விளிம்பு நெடுகிலும் அவ்வாறே அமைத்தார்கள். அவர்கள் அந்தக் கூடாரத்தை ஒன்றாய் இணைப்பதற்காக ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்தார்கள். பின்பு சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் அக்கூடாரத்திற்கு ஒரு மூடுதிரையைச் செய்தார்கள். அந்த மூடுதிரைக்கு மேலாகப் போடுவதற்குக் கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையையும் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்திற்காக நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் சித்தீம் மரத்தினால் செய்தார்கள். ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது. அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாய் இருக்கும்படி இரண்டு முளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தின் மரச்சட்டங்களையெல்லாம் அவர்கள் இவ்விதமாகவே செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்திற்காக அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள். ஒவ்வொரு முளை முனையையும் தாங்கி நிற்க ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்திற்கும் கீழே இரு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கமான மறுபக்கத்திற்கும் அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள். ஒவ்வொரு மரச்சட்டத்திற்குக் கீழும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களை செய்தார்கள். இவ்வாறு அவர்கள் இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் கடைசியில் உள்ள இரு பக்கத்து மூலைகளுக்கும் இரண்டு சட்டப்பலகைகள் செய்யப்பட்டன. அந்த இரு மூலைகளிலும் சட்டப்பலகைகள் இரட்டையாக நிறுத்தப்பட்டு, அடியிலிருந்து நுனிவரை ஒரே வளையத்தினால் இணைக்கப்பட்டன. இரு மூலைகளும் ஒரேவிதமாகவே அமைக்கப்பட்டன. இவ்விதமாக பின்புறத்தில் எட்டு இணைப்புப் பலகைகள் நிறுத்தப்பட்டன. ஒவ்வொரு இணைப்பு பலகையின் கீழும் இரு அடித்தளங்களாக பதினாறு வெள்ளி அடித்தளங்களும் வைக்கப்பட்டன. அத்துடன் சித்தீம் மரத்தினால் குறுக்குச் சட்டங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், மற்றப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்தார்கள். நடுக்குறுக்குச் சட்டம் மரச்சட்டங்களின் நடுவே ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை நீண்டிருக்கும்படி செய்தார்கள். மரச்சட்டங்களைத் தங்கத்தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை மாட்டுவதற்காக, தங்க வளையங்களையும் அதில் செய்தார்கள். குறுக்குச் சட்டங்களையும், தங்கத்தகட்டால் மூடினார்கள். நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞர்கள் கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்தார்கள். அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்கு சித்தீம் மரத்தினால் நான்கு கம்பங்களைச் செய்து, தங்கத்தகட்டால் அவற்றை மூடினார்கள். அவற்றுக்குத் தங்கத்தால் கொக்கிகளைச் செய்து, வெள்ளியினால் அதன் நான்கு அடித்தளங்களையும் வார்த்தார்கள். கூடாரத்தின் வாசலுக்கு நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் சித்திரத்தையற்காரனின் வேலையாய் ஒரு திரைச்சீலையைச் செய்தார்கள். இந்த திரைக்குக் கொக்கிகளை உடைய ஐந்து கம்பங்களைச் செய்தார்கள். கம்பங்களின் மேற்பகுதிகளையும், பூண்களையும் தங்கத்தகட்டால் மூடினார்கள். அவற்றுக்காக ஐந்து வெண்கல அடித்தளங்களையும் செய்தார்கள்.
யாத்திராகமம் 36:6-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது மோசே “இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம்” என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது. வேலை செய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள அனைவரும் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், வித்தியாசமான நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைச் செய்தான். மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருந்தது. ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான். இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது வளையங்களை உண்டாக்கி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டாக்கினான். வளையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாக இருந்தது. ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஆசாரிப்புக்கூடாரம் ஒன்றானது. ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான். ஒவ்வொரு மூடுதிரையும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருந்தது. ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து, இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி, கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான். சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லிய தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான். ஆசரிப்புக்கூடாரத்தில் நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான். ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாக இருந்தது. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு பொருந்தும் முனைகள் இருந்தது; ஆசரிப்புக்கூடாரத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான். ஆசரிப்புக்கூடாரத்திற்காக செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தெற்குதிசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி, அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து; ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான். ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான். ஆசரிப்புக்கூடாரத்தின் மேற்கு பக்கத்திற்கு ஆறு பலகைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான். அவைகள் கீழே இணைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலும் உள்ள அந்த இரண்டிற்கும் அப்படியே செய்தான். அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது. சீத்திம் மரத்தால் ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்கு புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்தான். நடுத்தாழ்ப்பாள் ஒருமுனை துவங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் செல்லும்படி செய்தான். பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்செய்து, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான். இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்கள் உள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டாக்கி, அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான். கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்கு திரையையும், அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.
யாத்திராகமம் 36:6-38 பரிசுத்த பைபிள் (TAERV)
மோசே இந்தச் செய்தியை பாளையத்தைச் சுற்றிலும் அறிவித்து: “பரிசுத்த இடத்தின் வேலைக்கு இனிமேல் எவரும் எதையும் காணிக்கையாக தரவேண்டாம்” என்றான். இவ்வாறு ஜனங்கள் அளவுக்கதிகமாகக் கொடுப்பதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டியதாயிற்று. தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு ஜனங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள். பரிசுத்தக் கூடாரத்தை திறமையுள்ளவர்கள் அமைக்கத் தொடங்கினார்கள். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் அவர்கள் பத்துத் திரைகளை உண்டாக்கினார்கள். திரைகளில் சிறகுகளுள்ள கேரூப் தூதர்களின் சித்திரங்களைத் தைத்தனர். ஒவ்வொரு திரையும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக ஒரே அளவுடையதாய் அமைந்தன. பணி செய்வோர் இரண்டு வெவ்வேறு திரைகளாக அத்திரைகளை இணைத்தனர். ஐந்து திரைகளை ஒரே திரையாகவும், மற்றும் ஐந்து திரைகளை இன்னொரு திரையாகவும் இணைத்தனர். ஒரு திரையின் கடைசிப் பகுதியில் நீலத்துணியால் துளைகளைச் செய்தனர். மற்றொரு திரையின் கடைசிப் பகுதியிலும் அவ்வாறே செய்தனர். ஒரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் மற்றொரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் இருந்தன. அவ்வளையங்கள் எதிரெதிராக அமைந்தன. பின் அவர்கள் அத்திரைகளை இணைப்பதற்கு 50 பொன் வளையங்களைச் செய்தனர். எனவே பரிசுத்தக் கூடாரம் ஒரே துண்டாக இணைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தை மூடி மறைத்து நிற்குமாறு அந்தத் திறமைச்சாலிகள் மற்றொரு கூடாரத்தை அமைத்தனர். வெள்ளாட்டின் மயிரால் பதினொரு திரைகளைச் செய்தனர். எல்லாத் திரைகளும் 30 முழ நீளமும் 4 முழ அகலமும் கொண்ட ஓரே அளவுடையனவாய் இருந்தன. பணியாட்கள் ஐந்து திரைகளை ஒன்றாகவும், பிற ஆறு திரைகளை ஒன்றாகவும் இணைத்தனர். ஒரு திரையின் இறுதியில் 50 துளைகளை அமைத்தனர். மறறொரு திரையில் இறுதியிலும் அவ்வாறே செய்தனர். பணியாட்கள் 50 வெண்கல வளையங்களை இரு திரைகளையும் சேர்த்து ஒரே கூடாரமாக இணைப்பதற்காகச் செய்தனர். பரிசுத்தக் கூடாரத்திற்கு அவர்கள் மேலும் இரண்டு மூடுதிரைகளை செய்தனர். ஒரு மூடுதிரை சிவப்புத் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலாலானது. மற்றொரு மூடுதிரை மெல்லிய தோலினாலானது. பிறகு அந்த வல்லுநர்கள் பரிசுத்த கூடாரத்தைத் தாங்குவதற்காக சீத்தீம் மரத்தினால் சட்டங்களை அமைத்தனர். ஒவ்வொரு சட்டமும் 10 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாய் இருந்தது. இரண்டு பக்கத்திலும் தூண்கள் குறுக்குத் துண்டுகளால் இணைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமும் அமைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தின் ஒவ்வொரு சட்டமும் அவ்வாறு அமைந்தது. பரிசுத்தக் கூட்டத்தின் தெற்குப் புறத்திற்கு 20 சட்டங்களைச் செய்தனர். பின் அந்தச் சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் இருந்தன. அவர்கள் மறுபக்கமாகிய (வடபுறத்திற்கு) 20 சட்டங்களைச் செய்தார்கள். ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்களாக 20 சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். பரிசுத்த கூடாரத்தின் பின் பகுதியாகிய மேற்கு புறத்திற்கு 6 சட்டங்கள் செய்தனர். மேலும் பரிசுத்த கூடாரத்தின் பின் மூலைகளுக்கென்று 2 சட்டங்கள் செய்தனர். இந்தச் சட்டங்கள் அடிப் புறத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டன. மேலே இந்த மூலை சட்டங்களை ஒரு வளையம் தாங்கிக்கொண்டிருந்தது. இரண்டு மூலைகளுக்கும் அவர்கள் அவ்வாறே செய்தனர். பரிசுத்தக் கூடாரத்தின் மேற்குப் புறத்தில் மொத்தம் எட்டுச் சட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் வீதம் 16 வெள்ளியாலாகிய பீடங்கள் அமைந்தன. பரிசுத்தக் கூடாரத்தின் முதல் பக்கத்திற்கு சீத்திம் மரத்தாலான ஐந்து தாழ்ப்பாள்களைப் பணியாட்கள் செய்தனர். மறுபக்கத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்களும், பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்கு) ஐந்து தாழ்ப்பாள்களும் அமைத்தனர். சட்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லும்படியாக மத்தியிலுள்ள தாழ்ப்பாளைச் செய்தனர். தாழ்ப்பாள்களைத் தாங்கிக்கொள்வதற்குப் பொன்னால் வளையங்களைச் செய்தனர். தாழ்ப்பாள்களில் பொன் முலாம் பூசினர். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல்களையும் மகாபரிசுத்த கூடாரத்தின் நுழைவாயிலுக்கான திரையைச் செய்வதற்குப் பயன்படுத்தினர். திரையில் கேருபீன்களின் சித்திரங்களைத் தைத்தனர். சீத்திம் மரத்தால் நான்கு தூண்களைச் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினர். அவற்றிற்குப் பொன் கொக்கிகளைச் செய்தனர். அவற்றிற்கு நான்கு வெள்ளி பீடங்களைச் செய்து வைத்தனர். கூடாரத்தின் வாயிலை மூடுவதற்குத் திரைகள் அமைத்தனர். அவர்கள் இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலையும், மெல்லிய துகிலையும் இத்திரையைச் செய்வதற்கு உபயோகப்படுத்தினர். அத்திரையில் சித்திரங்களை நெய்தனர். பின் அவர்கள் நுழைவாயிலின் திரைக்காக ஐந்து தூண்களையும் அதன் கொக்கிகளையும் அமைத்தனர். அவர்கள் தூண்களின் மேற் பகுதிகளையும் திரைத்தண்டுகளையும் பொன் தகட்டால் மூடினார்கள். அத்தூண்களுக்கு ஐந்து வெண்கல பீடங்களைச் செய்தனர்.
யாத்திராகமம் 36:6-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது. வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான். ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது. ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான். இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான். காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது. ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று. வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான். ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது. ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து, இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி, கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான். சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான். வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான். ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாயிருந்தது. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான். வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி, அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்ற பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து; வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான். ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்ற பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான். வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும், வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான். அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான். அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது. சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான். நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனை மட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான். பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான். இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி, அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான். கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும், அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.