யாத்திராகமம் 36:1-5

யாத்திராகமம் 36:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியே பெசலெயேலுடனும், அகோலியாபுடனும் பரிசுத்த இடத்தை அமைக்கும் எல்லா வேலைகளையும் எப்படிச் செய்வது என அறியும் ஆற்றலையும், திறமையையும், யெகோவா கொடுத்திருந்த ஒவ்வொரு திறமைசாலியும், யெகோவாவின் கட்டளைப்படியே அவ்வேலைகளைச் செய்யவேண்டும்” என்றான். பின்பு மோசே பெசலெயேலையும், அகோலியாபையும், யெகோவாவினால் ஆற்றல் வழங்கப்பட்டு, வந்து வேலைசெய்வதற்கு மனவிருப்பமுள்ள திறமைசாலிகள் எல்லோரையும் வரவழைத்தான். பரிசுத்த இடத்தை அமைக்கும் வேலைகளைச் செய்வதற்கு, இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை எல்லாம், மோசேயிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மக்கள் சுயவிருப்பக் காணிக்கைகளைத் தொடர்ந்து காலைதோறும் கொண்டுவந்தார்கள். அதனால் பரிசுத்த இடத்தின் வேலையைச் செய்துகொண்டிருந்த திறமையான கலைஞர்கள் தங்கள் வேலையைவிட்டு, மோசேயிடம் வந்து, “யெகோவா செய்யும்படி கட்டளையிட்ட வேலைக்கு, தேவைக்கு அதிகமான பொருட்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்று சொன்னார்கள்.

யாத்திராகமம் 36:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் திருப்பணிகளைச் சேர்ந்த எல்லா வேலைகளையும், யெகோவா கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், வேலை செய்யத்தெரிந்த யெகோவாவால் ஞானமும், புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரோடும் செய்யத்தொடங்கினார்கள். பெசலெயேலையும், அகோலியாபையும் யெகோவாவால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்களுடைய இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயமுள்ளவர்களாகிய எல்லோரையும், மோசே வரவழைத்தான். அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள். அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து, மோசேயை நோக்கி: “யெகோவா செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்றார்கள்.

யாத்திராகமம் 36:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

“எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை செய்யத் தேவையான ஞானத்தையும், அறிவையும் கர்த்தர் அந்த மனிதருக்குக் கொடுத்திருக்கிறார்” என்றான். பின் மோசே பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரால் திறமை வழங்கப்பட்ட பிற கலைவல்லுநர்களையும் அழைத்தான். வேலையில் உதவ விரும்பியதால் அவர்களும் ஒன்றாகக் கூடினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கையாகக் கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும் மோசே இந்த ஜனங்களுக்குக் கொடுத்தான். தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். காலைதோறும் ஜனங்கள் தங்கள் விருப்பதின்படி காணிக்கைகளை கொண்டு வந்தனர். பின்னர் கலை வல்லுநர்கள் பரிசுத்த இடத்தில் தாங்கள் செய்யும் வேலையை விட்டு மோசேயிடம் பேசுவதற்குச் சென்றார்கள். அவர்கள், “ஜனங்கள் மிகுதியாகப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்! கூடார வேலையை முடிப்பதற்குத் தேவையான பொருளைக் காட்டிலும் அதிகமான பொருள்கள் உள்ளன!” என்றார்கள்.

யாத்திராகமம் 36:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள். பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான். அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து, மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.