யாத்திராகமம் 35:21-29

யாத்திராகமம் 35:21-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான். இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள். எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத்திரித்தார்கள். பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும், பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகதைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள். செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 35:21-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்களில் விருப்பமுடையவர்களும், இருதயத்தில் ஏவப்பட்டவர்களும், சபைக்கூடார வேலைக்கும் அதன் எல்லா பணிகளுக்கும், பரிசுத்த உடைகளுக்கும் வேண்டிய காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள். விருப்பமுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் ஒரேவிதமாகவே உடையலங்கார ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆபரணங்கள் முதலிய எல்லாவித தங்க நகைகளையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லோரும் தமது தங்கத்தை யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். அத்துடன் ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணி, வெள்ளாட்டு உரோமம், சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடா தோல், கடல்பசுத் தோல் ஆகியவற்றையும் கொண்டுவந்தார்கள். வெள்ளியையும், வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொடுக்க விரும்பியவர்கள் அதை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். மற்றெந்த வேலைகளுக்கும் பயன்படக்கூடிய சித்தீம் மரத்தை வைத்திருந்தவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள். திறமையுள்ள பெண்கள் தங்கள் கைகளினால் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களையும், மென்பட்டுத் துணிகளையும் திரித்துக் கொண்டுவந்தார்கள். திறமையுள்ள ஊக்கமான பெண்கள் யாவரும் வெள்ளாட்டு உரோமத்தையும் திரித்தார்கள். மக்களின் தலைவர்கள் ஏபோத்திற்கும், மார்பு அணிக்கும் பதிப்பதற்கான கோமேதகக் கற்களையும், இரத்தினக் கற்களையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கும், அபிஷேக எண்ணெய்க்கும், நறுமணத்தூளுக்கும் தேவையான ஒலிவ எண்ணெயையும், வாசனைப் பொருட்களையும் கொண்டுவந்தார்கள். யெகோவா மோசே மூலமாக அவர்கள் செய்யும்படி கட்டளையிட்ட எல்லா விதமான வேலைகளுக்காகவும் மனதில் விருப்பமுள்ள எல்லா இஸ்ரயேல் ஆண்களும், பெண்களும் சுயவிருப்பக் காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 35:21-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான். இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள். எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள். தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும், நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள். செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 35:21-29 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தருக்கு காணிக்கைகளைக் கொடுக்க விரும்பியவர்கள் அனைவரும் கொண்டு வந்தனர். ஆசாரிப்புக் கூடாரம், அதிலுள்ள பொருட்கள், விசேஷ ஆடைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு இப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பல வகை பொன் அணிகலன்களைக் கொடுக்க விரும்பிய தாராள மனமுள்ள ஆண்களும், பெண்களும் அவற்றைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், மற்றும் பிற அணிகலன்களைக் கொண்டு வந்தார்கள். கர்த்தருக்காக தம் ஆபரணங்களை அவர்கள் கொடுத்தனர். இது கர்த்தருக்கு விசேஷ காணிக்கையாகும். மெல்லிய துகில், மற்றும் இளநீல இரத்தாம்பர, சிவப்பு நூல் வைத்திருந்தவர்கள் அனைவரும் அவற்றை கர்த்தருக்காகக் கொண்டு வந்தார்கள். மேலும் ஆட்டுத் தோலோ, சிவப்புச் சாயமிட்ட செம்மறியாட்டுத் தோலோ அல்லது பதனிடப்பட்ட மெல்லிய தோலோ வைத்திருந்தவர்கள் அதை கர்த்தருக்காகக் கொண்டு வந்தனர். வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பியவர்கள், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். சீத்திம் மரத்தை வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். கலைத்திறன் வாய்ந்த ஒவ்வொரு பெண்ணும் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூல்களையும் தயாரித்தனர். திறமை மிகுந்தவர்களும், உதவிசெய்ய விரும்பிய எல்லா பெண்களும் வெள்ளாட்டு மயிரால் ஆடைகளைச் செய்தனர். தலைவர்கள் கோமேதகக் கற்களையும் பிற விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தனர். ஆசாரியரின் ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் இவை வைக்கப்பட்டன. ஜனங்கள் தூபவர்க்க பொருட்களையும், ஒலிவ எண்ணெயையும் கொண்டு வந்தனர். நறுமணப் பொருள்களுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும், குத்துவிளக்கின் எண்ணெய்க்கும் இவை பயன்படுத்தப்பட்டன. உதவிசெய்ய விரும்பிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். இவ்வன்பளிப்புகளை அவர்கள் விரும்பிக் கொடுத்ததால் தாராளமாகக் கொடுத்தார்கள். கர்த்தர் மோசேக்கும், அவனது ஜனங்களுக்கும் செய்யுமாறு கட்டளையிட்ட எல்லாப் பொருட்களையும் செய்வதற்கு இப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.