யாத்திராகமம் 34:29-35

யாத்திராகமம் 34:29-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான். ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவனுக்கு அருகில் வருவதற்குப் பயந்தார்கள். ஆனால் மோசேயோ அவர்களை அழைத்தான். அப்பொழுது ஆரோனும், சமுதாயத்தின் எல்லா தலைவர்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். அவன் அவர்களுடன் பேசினான். அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான். மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், அவன் தன் முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டான். ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது, இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான்.

யாத்திராகமம் 34:29-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே உடன்படிக்கையின் கட்டளைப் பலகைகள் இரண்டையும் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடு அவர் பேசினதாலே தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பதை அவன் அறியாமல் இருந்தான். ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள். மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள தலைவர்கள் அனைவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களுடன் பேசினான். பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் யெகோவா தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான். மோசே அவர்களுடன் பேசி முடியும்வரை, தன்னுடைய முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். மோசே யெகோவாவுடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களுடன் சொல்லும்போது, இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

யாத்திராகமம் 34:29-35 பரிசுத்த பைபிள் (TAERV)

பின் மோசே சீனாய் மலையிலிருந்து உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளையும் எடுத்துக்கொண்டு இறங்கி வந்தான். கர்த்தரோடு பேசியதால் அவன் முகம் பிரகாசித்தது. ஆனால் மோசே அதனை அறியவில்லை. ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களும் மோசேயின் முகம் பிரகாசிப்பதைக் கண்டனர். எனவே அவனிடம் செல்ல பயந்தனர். ஆனால் மோசே அவர்களை அழைத்தான். எனவே, ஆரோனும், ஜனங்களின் தலைவர்களும் மோசேயிடம் சென்றனர். மோசே அவர்களோடு பேசினான். அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மோசேயிடம் வந்தனர். சீனாய் மலையில் கர்த்தர் அவனிடம் கொடுத்த கட்டளைகளை மோசே அவர்களுக்குக் கொடுத்தான். ஜனங்களிடம் மோசே பேசி முடித்த பின்பு அவன் தன் முகத்தில் ஒரு முக்காடு போட்டுக்கொண்டான். மோசே கர்த்தருக்கு முன் பேசச் செல்லும்போது அதை அகற்றினான். அப்புறம் கர்த்தர் கூறிய கட்டளைகளை அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்து கூறினான். மோசேயின், முகம் பிரகாசிப்பதை ஜனங்கள் கண்டனர். மீண்டும் மோசே முகத்தை மூடிக்கொண்டான். மறுமுறை கர்த்தரை சந்தித்துப் பேசுவதற்குச் செல்லும்வரைக்கும் மோசே அவனது முகத்தை மூடி வைத்திருந்தான்.

யாத்திராகமம் 34:29-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள். மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான். பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான். மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது, இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.