யாத்திராகமம் 34:1-35

யாத்திராகமம் 34:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார். அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு: ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக்கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான். அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன். நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும். அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்; அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம். புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே. கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள். கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது. ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக. கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக. வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள். நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை. எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம். உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார். அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள். மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான். பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான். மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது, இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

யாத்திராகமம் 34:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன். நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலைக்குமேல் ஏறி வா. மலை உச்சியில் எனது முன்னிலையில் வந்து நில். உன்னுடன் வேறெவரும் வரக்கூடாது. மலையின் எந்தப்பகுதியிலும் எங்காவது காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் அந்த மலைக்கு முன்னால் மேயக்கூடாது” என்றார். மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான். அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, யெகோவா என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார். அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர். ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார். உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான். அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான். அதற்கு யெகோவா, “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன். முழு உலகத்திலும், எந்த நாட்டினரின் மத்தியிலும் முன் ஒருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உன் மக்களுக்கு முன்பாகச் செய்வேன். யெகோவாவாகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு பிரமிப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னோடுகூட வாழும் மக்கள் காண்பார்கள். இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன். நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள் உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள். நீயோ அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி அழித்துவிடவேண்டும். நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர் என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். “நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது, பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும் தூண்டுவார்கள். “வார்க்கப்பட்ட விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள். “கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை. ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும். “ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது. “ஆறுநாட்கள் வேலைசெய், ஆனால் ஏழாம் நாளிலோ ஓய்ந்திருக்க வேண்டும். உழவு காலத்திலும், அறுப்புக் காலத்திலும் அப்படியே ஓய்ந்திருக்க வேண்டும். “கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் தானிய சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள். ஒரு வருடத்தில் மூன்றுமுறை உங்கள் எல்லா ஆண்களும் இஸ்ரயேலின் இறைவனான ஆண்டவராகிய யெகோவாவுக்குமுன் வரவேண்டும். நான் நாடுகளை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கப் போகும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ளமாட்டான். “புளிப்புள்ள எதனுடனும் ஒரு பலியின் இரத்தத்தை எனக்குச் செலுத்தவேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியிலுள்ள எதையும் மறுநாள் காலைவரை வைக்கவேண்டாம். “உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார். அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார். அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் யெகோவாவோடு இருந்தான். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார். மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான். ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவனுக்கு அருகில் வருவதற்குப் பயந்தார்கள். ஆனால் மோசேயோ அவர்களை அழைத்தான். அப்பொழுது ஆரோனும், சமுதாயத்தின் எல்லா தலைவர்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். அவன் அவர்களுடன் பேசினான். அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான். மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், அவன் தன் முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டான். ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது, இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான்.

யாத்திராகமம் 34:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயை நோக்கி: “முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில். உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார். அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார். மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு: “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள்; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான். அதற்கு அவர்: “இதோ, நான் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்; பூமியெங்கும் எந்த தேசங்களிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்னுடைய மக்கள் எல்லோருக்கும் முன்பாகவும் செய்வேன்; உன்னோடு இருக்கிற மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய செயல்களைக் காண்பார்கள்; உன்னோடு இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும். இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும், ஏவியர்களையும், எபூசியர்களையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன். நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும். அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள். யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்; அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம். புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுவீர்கள்; ஆபீப் மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே. கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள். கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது. ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு. கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி. வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும். நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை. எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம். உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன்” என்றார். அங்கே அவன் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் யெகோவாவோடு இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். மோசே உடன்படிக்கையின் கட்டளைப் பலகைகள் இரண்டையும் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடு அவர் பேசினதாலே தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பதை அவன் அறியாமல் இருந்தான். ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள். மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள தலைவர்கள் அனைவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களுடன் பேசினான். பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் யெகோவா தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான். மோசே அவர்களுடன் பேசி முடியும்வரை, தன்னுடைய முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். மோசே யெகோவாவுடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களுடன் சொல்லும்போது, இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

யாத்திராகமம் 34:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே வார்த்தைகளை நான் இந்தக் கற்களிலும் எழுதுவேன். நாளை காலையில் தக்க ஆயத்தத்துடன் சீனாய் மலைக்கு வா. மலையின்மேல் என் முன்னே வந்து நில். உன்னோடு வேறு யாரும் வரக்கூடாது. யாரும் மலையில் காணப்படக் கூடாது. உங்கள் மிருகங்களோ, ஆட்டு மந்தைகளோ எதுவும் மலையடிவாரத்தில் புல்லை உண்பதற்குக்கூட அனுமதிக்கக் கூடாது” என்றார். எனவே, முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளை மோசே உருவாக்கினான். மறுநாள் அதிகாலையில் சீனாய் மலையின் மேல் ஏறிச் சென்றான். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான். மோசே இரண்டு கற்பலகைகளையும் தன்னோடு எடுத்துச் சென்றான். மோசே மலையின்மீது ஏறியவுடன், கர்த்தர் மேகத்தில் அவனிடம் இறங்கி வந்து, தமது பெயரை மோசேயிடம் சொன்னார். கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைவரைக்கும் கர்த்தர் தமது இரக்கத்தைக் காட்டுவார். ஜனங்கள் செய்கிற தவறுகளை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் குற்றவாளிகளைத் தண்டிக்க கர்த்தர் மறப்பதில்லை. கர்த்தர் குற்றவாளிகளை மட்டும் தண்டிக்காமல் அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும், அவர்களின் பிள்ளைகளையும், அவர்கள் செய்த தீயகாரியங்களுக்காகத் தண்டிப்பார்” என்றார். உடனே மோசே கீழே தரையில் குனிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மோசே, “கர்த்தாவே நீர் என்னோடு சந்தோஷமாக இருக்கிறீர் என்பது உண்மையானால் தயவு செய்து எங்களோடு வாரும். இவர்கள் பிடிவாதமான ஜனங்கள் என்பதை அறிவேன். ஆனால் நாங்கள் செய்த தீயசெயல்களுக்கு எங்களை மன்னித்தருளும்! உமது ஜனங்களாக எங்களை ஏற்றுக்கொள்ளும்” என்றான். அப்போது கர்த்தர், “உன் ஜனங்கள் எல்லாரோடும் இந்த உடன்படிக்கையைச் செய்கிறேன். பூமியிலுள்ள வேறெந்த ஜனத்துக்கும் செய்யாத வியக்கத்தக்க காரியங்களை நான் உங்களிடம் செய்வேன். உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான் மிக உன்னதமான கர்த்தர் என்பதைக் காண்பார்கள். நான் உனக்காகச் செய்யப்போகும் அற்புதங்களை ஜனங்கள் காண்பார்கள். நான் இன்றைக்கு உங்களுக்கு இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் நாட்டிலிருந்து உங்கள் பகைவர்கள் போகும்படி செய்வேன். எமோரியரையும், கானானியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் வெளியேற்றுவேன். எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் நுழையும் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள்! அந்த ஜனங்களோடு ஒப்பந்தம் செய்தால் அது உங்களுக்குத் தொல்லையைத் தரும். ஆகையால் அவர்கள் பலிபீடங்களை அழித்துப்போடுங்கள். அவர்கள் தொழுதுகொள்ளும் கற்களை உடையுங்கள். அவர்கள் விக்கிரகங்களை நொறுக்குங்கள். வேறெந்த தேவனையும் தொழுதுகொள்ளாதீர்கள். நான் ‘யேகோவா’ என்னும் வைராக்கியமுள்ள கர்த்தர். இதுவே என் பெயர். நான் எல்கானா-வைராக்கியமுள்ள தேவன். “இத்தேசத்து ஜனங்களோடு எந்தவொரு ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் தங்கள் தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்போது நீங்களும் சேர்ந்துகொள்ள அவர்கள் உங்களை அழைப்பார்கள். பிறகு அவர்கள் செலுத்திய பலிகளை நீங்கள் உண்பீர்கள். அவர்களின் குமாரத்திகளை உங்கள் குமாரர்களுக்காக நிச்சயம் செய்யக்கூடும். அப்பெண்கள் பொய்த் தேவர்களை சேவிக்கிறார்கள். உங்கள் குமாரர்களையும் அவ்வாறே பொய்த் தேவர்களை தொழுதுகொள்ள வழிநடத்தக்கூடும். “விக்கிரகங்களைச் செய்யாதீர்கள். “புளிப்பில்லாத ரொட்டியின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். உங்களுக்கு நான் கட்டளையிட்டபடி ஏழு நாட்கள் புளிப்பில்லாமல் செய்த ரொட்டிகளை உண்ணுங்கள். நான் தெரிந்துகொண்டபடி ஆபிப் மாதத்திலேயே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்தைவிட்டு வந்தீர்கள். “ஒரு பெண்ணிடம் பிறக்கும் முதல் குழந்தை எப்போதும் எனக்குரியது. உங்கள் மிருகங்களின் ஆடுகளின் முதற்பேறானவையும் எனக்குரியவை. கழுதையின் முதல் ஈற்றை நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால் அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து அக்கழுதையை மீட்காவிட்டால் அப்போது அந்தக் கழுதையின் கழுத்தை முறித்துப் போடவேண்டும். உங்கள் முதற்பேறான குமாரர்கள் அனைவரையும் நீங்கள் என்னிடமிருந்து மீண்டும் வாங்கவேண்டும். காணிக்கையின்றி யாரும் என் முன்னிலையில் வரக்கூடாது. “நீங்கள் ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாம் நாள் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். விதைப்பு, அறுவடை காலங்களிலும் நீங்கள் ஓய்வு நாளில் ஓய்வெடுக்க வேண்டும். “வாரங்களின் பண்டிகையை (பெந்தெகோஸ்தே) கொண்டாடுங்கள். கோதுமை அறுவடையின் முதல் தானியத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். இலையுதிர் காலத்தின்போது அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். “ஆண்டில் மூன்று முறை உங்கள் ஜனங்கள் இஸ்ரவேலரின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதானத்திற்குச் செல்ல வேண்டும். “உங்கள் தேசத்திற்குள் நீங்கள் போகும்போது, அத்தேசத்திலிருந்து உங்கள் பகைவர்களை வெளியேற்றுவேன். உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி உங்கள் தேசத்தின் அளவை அதிகரிக்கச் செய்வேன். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் ஓராண்டில் மூன்று முறை செல்லுங்கள் அப்போது, யாரும் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள முயலமாட்டார்கள். “பலியின் இரத்தத்தை எனக்குப் படைக்கும்போதெல்லாம் புளிப்பை அதனோடு படைக்காதீர்கள். “பஸ்கா உணவிலுள்ள இறைச்சியை மறுநாள் காலைவரைக்கும் வைக்காதீர்கள். “நீங்கள் அறுவடை செய்யும் முதல் தானியங்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வீட்டிற்கு அவற்றைக் கொண்டு வாருங்கள். “இளம் ஆட்டை அதன் தாய்ப்பாலில் ஒருபோதும் சமைக்காதீர்கள்” என்றார். மீண்டும் கர்த்தர் மோசேயிடம், “நான் உங்களுக்குக் கூறிய எல்லாக் காரியங்களையும் எழுதிக்கொள். உன்னோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் நான் செய்த உடன்படிக்கை இதுவேயாகும்” என்றார். மோசே 40 பகலும் 40 இரவும் கர்த்தரோடு தங்கினான். மோசே எந்த உணவையும் உண்ணவோ, தண்ணீரைப் பருகவோ இல்லை. இரண்டு கற்பலகைகளில் உடன்படிக்கையை (பத்துக் கட்டளைகளை) மோசே எழுதினான். பின் மோசே சீனாய் மலையிலிருந்து உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளையும் எடுத்துக்கொண்டு இறங்கி வந்தான். கர்த்தரோடு பேசியதால் அவன் முகம் பிரகாசித்தது. ஆனால் மோசே அதனை அறியவில்லை. ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களும் மோசேயின் முகம் பிரகாசிப்பதைக் கண்டனர். எனவே அவனிடம் செல்ல பயந்தனர். ஆனால் மோசே அவர்களை அழைத்தான். எனவே, ஆரோனும், ஜனங்களின் தலைவர்களும் மோசேயிடம் சென்றனர். மோசே அவர்களோடு பேசினான். அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மோசேயிடம் வந்தனர். சீனாய் மலையில் கர்த்தர் அவனிடம் கொடுத்த கட்டளைகளை மோசே அவர்களுக்குக் கொடுத்தான். ஜனங்களிடம் மோசே பேசி முடித்த பின்பு அவன் தன் முகத்தில் ஒரு முக்காடு போட்டுக்கொண்டான். மோசே கர்த்தருக்கு முன் பேசச் செல்லும்போது அதை அகற்றினான். அப்புறம் கர்த்தர் கூறிய கட்டளைகளை அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்து கூறினான். மோசேயின், முகம் பிரகாசிப்பதை ஜனங்கள் கண்டனர். மீண்டும் மோசே முகத்தை மூடிக்கொண்டான். மறுமுறை கர்த்தரை சந்தித்துப் பேசுவதற்குச் செல்லும்வரைக்கும் மோசே அவனது முகத்தை மூடி வைத்திருந்தான்.