யாத்திராகமம் 33:7-23

யாத்திராகமம் 33:7-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே ஒரு கூடாரத்தை எடுத்துக்கொண்டுபோய் முகாமுக்கு வெளியே சற்றுத் தொலைவில் அதை அமைப்பது வழக்கம். அதை அவன், “சபைக் கூடாரம்” என அழைத்தான். யெகோவாவிடம் விசாரித்து அறியவரும் யாரும், முகாமுக்கு வெளியே அந்தக் கூடாரத்திற்குப் போவார்கள். மோசே வெளியே அந்தக் கூடாரத்திற்குப் போகும்போதெல்லாம், எல்லா மக்களும் தங்களுடைய கூடாரவாசலில் எழுந்து, மோசே கூடாரத்திற்குள் போகும்வரை பார்த்துக்கொண்டு நிற்பார்கள். மோசே கூடாரத்திற்குள் போனதும், மேகத்தூண் கீழே இறங்கி, வாசலில் வந்து நிற்கும். அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசுவார். மேகத்தூண் கூடாரவாசலில் நிற்பதை மக்கள் காணும்போதெல்லாம், எல்லோரும் தங்களுடைய கூடாரவாசலில் நின்று வழிபடுவார்கள். ஒரு மனிதன் தன் நண்பனோடு பேசுவதைப்போல் யெகோவா மோசேயுடன் முகமுகமாய் பேசுவார். அதன்பின் மோசே திரும்பி முகாமுக்குள் போவான். ஆனால் மோசேயின் பணியாளனான நூனின் மகன் யோசுவா என்ற வாலிபன், கூடாரத்தைவிட்டுப் போவதேயில்லை. மோசே யெகோவாவிடம் சொன்னதாவது: “நீ இந்த மக்களை வழிநடத்து என்று நீர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர். ஆனாலும் என்னோடு யாரை அனுப்புவீர் என்று எனக்கு அறிவிக்கவில்லை. நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்; நீ என்னிடம் தயவு பெற்றிருக்கிறாய் என்றும் நீர் சொல்லியிருந்தீர். அவ்வாறு உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததினால், நான் உம்மை இன்னும் அதிகம் அறிவதற்கும், உம்முடைய கண்களில் தொடர்ந்து தயவைப் பெற்றுக்கொள்வதற்கும், உம்முடைய வழிகளை எனக்குப் போதியும். இந்த நாடு உம்முடைய மக்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும்” என்றான். அதற்கு யெகோவா, “எனது சமுகம் உன்னோடு போகும்; நான் உனக்கு ஆறுதலைத் தருவேன்” என்றார். அப்பொழுது மோசே யெகோவாவிடம், “உமது சமுகம் எங்களுடன் வராவிட்டால் எங்களை இவ்விடத்திலிருந்து அனுப்பவேண்டாம். நீர் எங்களுடன் வராவிட்டால், என்மேலும் உம்முடைய மக்கள்மேலும் நீர் பிரியமாயிருக்கிறீர் என்பதை யாராவது எப்படி அறிவார்கள்? இதையல்லாமல் என்னையும், உமது மக்களையும் பூமியின் மேற்பரப்பிலிருக்கும் மக்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது எது?” என்று கேட்டான். அதற்கு யெகோவா மோசேயிடம், “நீ கேட்டுக்கொண்ட அதையே நான் செய்வேன். ஏனெனில் நான் உன்னிடம் பிரியமாய் இருக்கிறேன். நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். அப்பொழுது மோசே, “உம்முடைய மகிமையை எனக்கு இப்பொழுது காண்பியும்” என்றான். அதற்கு யெகோவா, “என் நன்மை எல்லாவற்றையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச் செய்வேன். யெகோவா என்ற என் பெயரை உனக்கு முன்பாக பிரசித்தப்படுத்துவேன். நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். யாரிடம் மனதுருக்கமாய் இருக்க விரும்புகிறேனோ அவர்களிடம் மனதுருகுவேன். ஆனால், என்னுடைய முகத்தை உன்னால் காணமுடியாது; ஏனெனில் என் முகத்தைக் கண்டு ஒருவனும் உயிரோடிருக்கமுடியாது” என்றார். பின்பு யெகோவா, “எனக்கு அருகே இருக்கும் கற்பாறையின்மேல் நீ நில். என் மகிமை கடந்து செல்லும்போது, நான் உன்னைக் கற்பாறை வெடிப்பில் வைப்பேன். நான் கடந்துசெல்லும்வரை என் கையால் உன்னை மூடுவேன். அதன்பின் நான் என் கையை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய்; ஆனால் என் முகமோ காணப்படக்கூடாது” என்றார்.

யாத்திராகமம் 33:7-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள். மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார். மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான். மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.

யாத்திராகமம் 33:7-23 பரிசுத்த பைபிள் (TAERV)

பாளையத்துக்கு வெளியே சற்று தூரத்தில் மோசே ஒரு கூடாரத்தை எடுத்துச் செல்வது வழக்கம். மோசே அதை “ஆசரிப்புக் கூடாரம்” என்று அழைத்தான். கர்த்தரிடமிருந்து எதையாவது கேட்டறிய விரும்புகிறவன் பாளையத்துக்கு வெளியே ஆசாரிப்புக் கூடாரத்திற்குச் செல்வான். மோசே அக்கூடாரத்திற்குப் போகும் போதெல்லாம் ஜனங்கள் அவனைக் கவனித்து நோக்கினார்கள். ஜனங்கள் அவரவர் கூடாரத்தின் வாயிலில் வந்து நின்று, மோசே ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதைப் பார்த்தனர். மோசே கூடாரத்திற்கு போகும்போதெல்லாம் நீண்ட மேகம் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் தங்கும். கர்த்தர் மோசேயோடு பேசுவார். ஜனங்கள் கூடார வாசலில் மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரவர் கூடார வாசல்களுக்குச் சென்று கீழே குனிந்து கர்த்தரை வணங்கினார்கள். இவ்வாறு கர்த்தர் மோசேயுடன் நேருக்கு நேராக நின்று பேசினார். ஒரு மனிதன் தன் நண்பனிடம் பேசுவதுபோல கர்த்தர் மோசேயுடன் பேசினார். கர்த்தரிடம் பேசியபிறகு, மோசே தங்குமிடத்துக்குத் திரும்பினான். ஆனால் அவனது உதவியாளன் எப்போதும் கூடரத்திலேயே இருந்தான். அந்த உதவியாளன் நூனின் குமாரனாகிய யோசுவா என்பவனாவான். மோசே கர்த்தரை நோக்கி, “இந்த ஜனங்களை வழிநடத்துமாறு நீர் சொன்னீர். ஆனால் என்னோடு வருபவர் யார் என்பதை நீர் கூறவில்லை. நீர் என்னிடம், ‘உன்னை நன்கு அறிவேன். உன்னைக் குறித்து பிரியமாயிருக்கிறேன்.’ என்றீர். நான் உண்மையாகவே உம்மை திருப்திப்படுத்தியிருந்தால் உமது வழிகளை எனக்குப் போதியும். நான் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் தொடர்ந்து உம்மைப் பிரியப்படுத்துவேன். இவர்கள் உமது ஜனங்கள் என்பதை நினைவுகூரும்” என்றான். கர்த்தர், “நான் உன்னோடுகூட வருவேன். உன்னை வழிநடத்துவேன்” என்றார். அப்போது மோசே கர்த்தரை நோக்கி, “நீர் வழி நடத்தவில்லையெனில், என்னை இவ்விடத்திலிருந்து அனுப்பாதிரும். மேலும், என்னிடமும் இந்த ஜனங்களிடமும் திருப்தியடைந்துள்ளீர் என்பதை நான் எவ்வாறு அறிவேன்? நீர் எங்களோடு வந்தால், அதை நிச்சயமாக அறிவோம். இல்லையென்றால், பூமியிலுள்ள மற்ற மனிதருக்கும் எங்களுக்கும் வித்தியாசமேயில்லை” என்றான். அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ கேட்டபடியே நான் செய்வேன். உன்னில் சந்தோஷம் அடைந்திருக்கிறேன், உன்னை நான் நன்கு அறிவேன்.” என்றார். அப்போது மோசே, “இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்” என்றான். கர்த்தர், “என் பரிபூரண நன்மை உனக்கு முன் செல்லும்படி செய்வேன். நானே கர்த்தர், நீ கேட்கும்படி என் பெயரை அறிவிப்பேன். நான் விரும்பும் யாருக்கும் எனது இரக்கத்தையும், அன்பையும் காட்டுவேன். ஆனால் நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் என்னைப் பார்த்து பின்பு உயிரோடு இருக்க முடியாது. “எனக்கருகிலுள்ள ஒரு இடத்தில் ஒரு பாறை உள்ளது. நீ அப்பாறையின் மேல் ஏறி நில். எனது மகிமை அவ்விடத்தைக் கடந்து செல்லும். நான் உன்னைத் தாண்டும்போது உன்னை அந்தப் பாறையின் வெடிப்பில் வைத்து என் கரங்களால் உன்னை மூடுவேன். பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.

யாத்திராகமம் 33:7-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள். மோசே கூடாரத்துக்குப் போகும் போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார். ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான். மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே; உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான். அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப்பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார். அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான். அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி, நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார். பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்; பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.