யாத்திராகமம் 33:7-11
யாத்திராகமம் 33:7-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மோசே ஒரு கூடாரத்தை எடுத்துக்கொண்டுபோய் முகாமுக்கு வெளியே சற்றுத் தொலைவில் அதை அமைப்பது வழக்கம். அதை அவன், “சபைக் கூடாரம்” என அழைத்தான். யெகோவாவிடம் விசாரித்து அறியவரும் யாரும், முகாமுக்கு வெளியே அந்தக் கூடாரத்திற்குப் போவார்கள். மோசே வெளியே அந்தக் கூடாரத்திற்குப் போகும்போதெல்லாம், எல்லா மக்களும் தங்களுடைய கூடாரவாசலில் எழுந்து, மோசே கூடாரத்திற்குள் போகும்வரை பார்த்துக்கொண்டு நிற்பார்கள். மோசே கூடாரத்திற்குள் போனதும், மேகத்தூண் கீழே இறங்கி, வாசலில் வந்து நிற்கும். அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசுவார். மேகத்தூண் கூடாரவாசலில் நிற்பதை மக்கள் காணும்போதெல்லாம், எல்லோரும் தங்களுடைய கூடாரவாசலில் நின்று வழிபடுவார்கள். ஒரு மனிதன் தன் நண்பனோடு பேசுவதைப்போல் யெகோவா மோசேயுடன் முகமுகமாய் பேசுவார். அதன்பின் மோசே திரும்பி முகாமுக்குள் போவான். ஆனால் மோசேயின் பணியாளனான நூனின் மகன் யோசுவா என்ற வாலிபன், கூடாரத்தைவிட்டுப் போவதேயில்லை.
யாத்திராகமம் 33:7-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள். மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார். மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.
யாத்திராகமம் 33:7-11 பரிசுத்த பைபிள் (TAERV)
பாளையத்துக்கு வெளியே சற்று தூரத்தில் மோசே ஒரு கூடாரத்தை எடுத்துச் செல்வது வழக்கம். மோசே அதை “ஆசரிப்புக் கூடாரம்” என்று அழைத்தான். கர்த்தரிடமிருந்து எதையாவது கேட்டறிய விரும்புகிறவன் பாளையத்துக்கு வெளியே ஆசாரிப்புக் கூடாரத்திற்குச் செல்வான். மோசே அக்கூடாரத்திற்குப் போகும் போதெல்லாம் ஜனங்கள் அவனைக் கவனித்து நோக்கினார்கள். ஜனங்கள் அவரவர் கூடாரத்தின் வாயிலில் வந்து நின்று, மோசே ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதைப் பார்த்தனர். மோசே கூடாரத்திற்கு போகும்போதெல்லாம் நீண்ட மேகம் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் தங்கும். கர்த்தர் மோசேயோடு பேசுவார். ஜனங்கள் கூடார வாசலில் மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரவர் கூடார வாசல்களுக்குச் சென்று கீழே குனிந்து கர்த்தரை வணங்கினார்கள். இவ்வாறு கர்த்தர் மோசேயுடன் நேருக்கு நேராக நின்று பேசினார். ஒரு மனிதன் தன் நண்பனிடம் பேசுவதுபோல கர்த்தர் மோசேயுடன் பேசினார். கர்த்தரிடம் பேசியபிறகு, மோசே தங்குமிடத்துக்குத் திரும்பினான். ஆனால் அவனது உதவியாளன் எப்போதும் கூடரத்திலேயே இருந்தான். அந்த உதவியாளன் நூனின் குமாரனாகிய யோசுவா என்பவனாவான்.
யாத்திராகமம் 33:7-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள். மோசே கூடாரத்துக்குப் போகும் போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார். ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.