யாத்திராகமம் 33:18-23

யாத்திராகமம் 33:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான். அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி, நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார். பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்; பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

யாத்திராகமம் 33:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது மோசே, “உம்முடைய மகிமையை எனக்கு இப்பொழுது காண்பியும்” என்றான். அதற்கு யெகோவா, “என் நன்மை எல்லாவற்றையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச் செய்வேன். யெகோவா என்ற என் பெயரை உனக்கு முன்பாக பிரசித்தப்படுத்துவேன். நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். யாரிடம் மனதுருக்கமாய் இருக்க விரும்புகிறேனோ அவர்களிடம் மனதுருகுவேன். ஆனால், என்னுடைய முகத்தை உன்னால் காணமுடியாது; ஏனெனில் என் முகத்தைக் கண்டு ஒருவனும் உயிரோடிருக்கமுடியாது” என்றார். பின்பு யெகோவா, “எனக்கு அருகே இருக்கும் கற்பாறையின்மேல் நீ நில். என் மகிமை கடந்து செல்லும்போது, நான் உன்னைக் கற்பாறை வெடிப்பில் வைப்பேன். நான் கடந்துசெல்லும்வரை என் கையால் உன்னை மூடுவேன். அதன்பின் நான் என் கையை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய்; ஆனால் என் முகமோ காணப்படக்கூடாது” என்றார்.

யாத்திராகமம் 33:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.

யாத்திராகமம் 33:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது மோசே, “இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்” என்றான். கர்த்தர், “என் பரிபூரண நன்மை உனக்கு முன் செல்லும்படி செய்வேன். நானே கர்த்தர், நீ கேட்கும்படி என் பெயரை அறிவிப்பேன். நான் விரும்பும் யாருக்கும் எனது இரக்கத்தையும், அன்பையும் காட்டுவேன். ஆனால் நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் என்னைப் பார்த்து பின்பு உயிரோடு இருக்க முடியாது. “எனக்கருகிலுள்ள ஒரு இடத்தில் ஒரு பாறை உள்ளது. நீ அப்பாறையின் மேல் ஏறி நில். எனது மகிமை அவ்விடத்தைக் கடந்து செல்லும். நான் உன்னைத் தாண்டும்போது உன்னை அந்தப் பாறையின் வெடிப்பில் வைத்து என் கரங்களால் உன்னை மூடுவேன். பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.