யாத்திராகமம் 33:12-16

யாத்திராகமம் 33:12-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே யெகோவாவிடம் சொன்னதாவது: “நீ இந்த மக்களை வழிநடத்து என்று நீர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர். ஆனாலும் என்னோடு யாரை அனுப்புவீர் என்று எனக்கு அறிவிக்கவில்லை. நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்; நீ என்னிடம் தயவு பெற்றிருக்கிறாய் என்றும் நீர் சொல்லியிருந்தீர். அவ்வாறு உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததினால், நான் உம்மை இன்னும் அதிகம் அறிவதற்கும், உம்முடைய கண்களில் தொடர்ந்து தயவைப் பெற்றுக்கொள்வதற்கும், உம்முடைய வழிகளை எனக்குப் போதியும். இந்த நாடு உம்முடைய மக்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும்” என்றான். அதற்கு யெகோவா, “எனது சமுகம் உன்னோடு போகும்; நான் உனக்கு ஆறுதலைத் தருவேன்” என்றார். அப்பொழுது மோசே யெகோவாவிடம், “உமது சமுகம் எங்களுடன் வராவிட்டால் எங்களை இவ்விடத்திலிருந்து அனுப்பவேண்டாம். நீர் எங்களுடன் வராவிட்டால், என்மேலும் உம்முடைய மக்கள்மேலும் நீர் பிரியமாயிருக்கிறீர் என்பதை யாராவது எப்படி அறிவார்கள்? இதையல்லாமல் என்னையும், உமது மக்களையும் பூமியின் மேற்பரப்பிலிருக்கும் மக்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது எது?” என்று கேட்டான்.

யாத்திராகமம் 33:12-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான்.

யாத்திராகமம் 33:12-16 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே கர்த்தரை நோக்கி, “இந்த ஜனங்களை வழிநடத்துமாறு நீர் சொன்னீர். ஆனால் என்னோடு வருபவர் யார் என்பதை நீர் கூறவில்லை. நீர் என்னிடம், ‘உன்னை நன்கு அறிவேன். உன்னைக் குறித்து பிரியமாயிருக்கிறேன்.’ என்றீர். நான் உண்மையாகவே உம்மை திருப்திப்படுத்தியிருந்தால் உமது வழிகளை எனக்குப் போதியும். நான் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் தொடர்ந்து உம்மைப் பிரியப்படுத்துவேன். இவர்கள் உமது ஜனங்கள் என்பதை நினைவுகூரும்” என்றான். கர்த்தர், “நான் உன்னோடுகூட வருவேன். உன்னை வழிநடத்துவேன்” என்றார். அப்போது மோசே கர்த்தரை நோக்கி, “நீர் வழி நடத்தவில்லையெனில், என்னை இவ்விடத்திலிருந்து அனுப்பாதிரும். மேலும், என்னிடமும் இந்த ஜனங்களிடமும் திருப்தியடைந்துள்ளீர் என்பதை நான் எவ்வாறு அறிவேன்? நீர் எங்களோடு வந்தால், அதை நிச்சயமாக அறிவோம். இல்லையென்றால், பூமியிலுள்ள மற்ற மனிதருக்கும் எங்களுக்கும் வித்தியாசமேயில்லை” என்றான்.

யாத்திராகமம் 33:12-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே; உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான். அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.