யாத்திராகமம் 32:9-14

யாத்திராகமம் 32:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் யெகோவா மோசேயிடம், “இந்த மக்களை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்களோ பிடிவாத குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக என் கோபம் எரியும்படியும், நான் அவர்களை அழிக்கும்படியும் என்னை விட்டுவிடு; அதன்பின் நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். ஆனால் மோசேயோ தன் இறைவனாகிய யெகோவாவின் தயவை நாடினான். அவன் அவரிடம், “யெகோவாவே, நீர் மகா வல்லமையினாலும், பலமுள்ள கரத்தினாலும், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு எதிராக உமது கோபம் ஏன் எரியவேண்டும்? ‘இஸ்ரயேலரை மலைகளில் கொன்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்து ஒழிக்கும்படியான தீய நோக்கத்துடனே, அவர் அவர்களை வெளியே கொண்டுவந்தார்’ என எகிப்தியர் ஏன் சொல்லவேண்டும்? ஆகவே உமது கோபத்தின் உக்கிரத்தைத் தணித்து, மனமிரங்கி, மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவராதிரும். உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரை நினைவிற்கொள்ளும். ‘உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, நான் உங்கள் சந்ததியினருக்கு வாக்குப்பண்ணிய இந்த நாடு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அந்த நாடு என்றும் அவர்களுக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்’ என்று நீர் உம்மைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்றான். அப்பொழுது யெகோவா மனமிரங்கி, தன் மக்கள்மேல் தான் கொண்டுவருவதாக அச்சுறுத்திய பேராபத்தைக் கொண்டுவரவில்லை.

யாத்திராகமம் 32:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள மக்கள். ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய தேசமாக்குவேன்” என்றார். மோசே தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: “யெகோவாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்? மலைகளில் அவர்களைக் கொன்றுபோடவும், பூமியின்மேல் இல்லாதபடி அவர்களை அழிக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்வதற்காகவே அவர்களைப் புறப்படச்செய்தார் என்று எகிப்தியர்கள் சொல்லுவானேன்? உம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பி, உமது மக்களுக்குத் தீங்குசெய்யாதபடி, அவர்கள்மேல் பரிதாபம்கொள்ளும். உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான். அப்பொழுது யெகோவா தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார்.

யாத்திராகமம் 32:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் இந்த ஜனங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பிடிவாத குணமுடையோர் என்பதையும் அறிவேன். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திரும்புவார்கள். எனவே என் கோபத்தால் அவர்களை அழிப்பேன். பின் உன் மூலமாக ஒரு பெரிய ஜனத்தை உருவாக்குவேன்” என்றார். ஆனால் மோசே தேவனாகிய கர்த்தரை மிகவும் கெஞ்சி, “கர்த்தாவே, உமது கோபத்தால் உமது ஜனங்களை அழித்துவிடாதேயும். உமது மிகுந்த ஆற்றலினாலும் வல்லமையாலும் நீர் இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீர். ஆனால் நீர் உமது ஜனங்களை அழித்துவிட்டால் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அந்த ஜனங்களுக்குத் தீமை செய்யத் திட்டமிட்டார். எனவே அவர்களை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவர்களை மலைகளில் கொல்ல விரும்பினார். அவர்களைப் பூமியிலிருந்து நிர்மூலமாக்க எண்ணினார், என்று சொல்வார்கள்.’ எனவே, உமது ஜனங்களிடம் கோபம் கொள்ளாதிரும். உமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்குறுதி அளித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான். எனவே, கர்த்தர் ஜனங்களுக்காக மனஸ்தாபப்பட்டார். தான் செய்வதாகக் கூறிய செயலை கர்த்தர் செய்யவில்லை, அவர் ஜனங்களை அழிக்கவில்லை.

யாத்திராகமம் 32:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? மலைகளில் அவர்களைக்கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான். அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.