யாத்திராகமம் 32:1-5

யாத்திராகமம் 32:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்ததை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனைச் சுற்றி ஒன்றுகூடி அவனிடம், “எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆகையால் நீர் வந்து, எங்களை வழிநடத்தும்படி தெய்வங்களை எங்களுக்காகச் செய்யும்” என்றார்கள். அப்பொழுது ஆரோன் அவர்களிடம், “உங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அணிந்திருக்கும் தங்கக் காதணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். அப்படியே அனைவரும் தங்கள் காதணிகளைக் கழற்றி ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் தன்னிடம் கொடுத்ததை அவன் எடுத்து கன்றுக்குட்டி வடிவில் அதை வார்ப்பித்து, ஒரு கருவியினால் அதை வடிவமைத்து அதை ஒரு விக்கிரகமாகச் செய்தான். அப்பொழுது அவர்கள், “இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவைகளே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன” என்றார்கள். அதைக்கண்ட ஆரோன் அந்தக் கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்கு யெகோவாவுக்கு ஒரு பண்டிகை கொண்டாடப்படும்” என அறிவித்தான்.

யாத்திராகமம் 32:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடம் கூட்டம்கூடி. அவனை நோக்கி: “எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டாக்கும்” என்றார்கள். அதற்கு ஆரோன்: “உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். அவர்களுடைய கையிலிருந்து அவன் அந்தப் தங்கங்களை வாங்கி, சிற்பக்கருவியைக் கூர்மையாக்கி, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே” என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்குக் யெகோவாவுக்குப் பண்டிகை” என்று கூறினான்.

யாத்திராகமம் 32:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே வழி நடத்தி வந்தான். இப்போது அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்பாகச் சென்று வழி நடத்துவதற்குச் சில தேவர்களை உருவாக்கும்” என்றனர். ஆரோன் ஜனங்களிடம், “உங்கள் மனைவி, பிள்ளைகளுக்குச் சொந்தமான பொன் காதணிகளை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றான். எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் ஜனங்களிடமிருந்து அவற்றை வாங்கி, அதைப் பயன்படுத்தி ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை வார்த்தான். பின்பு ஒரு உளியைப் பயன்படுத்தி, அந்த சிலையைச் செதுக்கினான். பின் அதை பொன் தகட்டால் மூடினான். அப்போது ஜனங்கள், “இஸ்ரவேலரே, இந்த தெய்வங்களே உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தன!” என்றனர். ஆரோன் இவற்றையெல்லாம் பார்த்தான். கன்றுக்குட்டியின் எதிரில் ஒரு பலிபீடம் அமைத்தான். பின்பு ஜனங்களை நோக்கி, “கர்த்தரைக் கனப்படுத்துவதற்கு நாளை ஒரு பண்டிகை நடத்துவோம்” என்றான்.

யாத்திராகமம் 32:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி. அவனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.