யாத்திராகமம் 32:1-35

யாத்திராகமம் 32:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்ததை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனைச் சுற்றி ஒன்றுகூடி அவனிடம், “எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆகையால் நீர் வந்து, எங்களை வழிநடத்தும்படி தெய்வங்களை எங்களுக்காகச் செய்யும்” என்றார்கள். அப்பொழுது ஆரோன் அவர்களிடம், “உங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அணிந்திருக்கும் தங்கக் காதணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். அப்படியே அனைவரும் தங்கள் காதணிகளைக் கழற்றி ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் தன்னிடம் கொடுத்ததை அவன் எடுத்து கன்றுக்குட்டி வடிவில் அதை வார்ப்பித்து, ஒரு கருவியினால் அதை வடிவமைத்து அதை ஒரு விக்கிரகமாகச் செய்தான். அப்பொழுது அவர்கள், “இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவைகளே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன” என்றார்கள். அதைக்கண்ட ஆரோன் அந்தக் கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்கு யெகோவாவுக்கு ஒரு பண்டிகை கொண்டாடப்படும்” என அறிவித்தான். மறுநாள் அதிகாலையில் மக்கள் எழுந்து தகன காணிக்கைகளைப் பலியிட்டு, சமாதான காணிக்கைகளைச் செலுத்தினார்கள். அதன்பின் மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்து களியாட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ கீழே இறங்கிப்போ. ஏனெனில், எகிப்திலிருந்து நீ வெளியே கொண்டுவந்த உன் மக்கள் சீர்கெட்டுப் போனார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி நடக்காமல், விரைவில் வழிதவறி கன்றுக்குட்டி உருவமுடைய ஒரு விக்கிரகத்தைத் தங்களுக்காக செய்திருக்கிறார்கள். அவர்கள் அதை வணங்கி, பலிசெலுத்தி, ‘இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள், இவையே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார். மேலும் யெகோவா மோசேயிடம், “இந்த மக்களை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்களோ பிடிவாத குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக என் கோபம் எரியும்படியும், நான் அவர்களை அழிக்கும்படியும் என்னை விட்டுவிடு; அதன்பின் நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். ஆனால் மோசேயோ தன் இறைவனாகிய யெகோவாவின் தயவை நாடினான். அவன் அவரிடம், “யெகோவாவே, நீர் மகா வல்லமையினாலும், பலமுள்ள கரத்தினாலும், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு எதிராக உமது கோபம் ஏன் எரியவேண்டும்? ‘இஸ்ரயேலரை மலைகளில் கொன்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்து ஒழிக்கும்படியான தீய நோக்கத்துடனே, அவர் அவர்களை வெளியே கொண்டுவந்தார்’ என எகிப்தியர் ஏன் சொல்லவேண்டும்? ஆகவே உமது கோபத்தின் உக்கிரத்தைத் தணித்து, மனமிரங்கி, மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவராதிரும். உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரை நினைவிற்கொள்ளும். ‘உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, நான் உங்கள் சந்ததியினருக்கு வாக்குப்பண்ணிய இந்த நாடு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அந்த நாடு என்றும் அவர்களுக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்’ என்று நீர் உம்மைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்றான். அப்பொழுது யெகோவா மனமிரங்கி, தன் மக்கள்மேல் தான் கொண்டுவருவதாக அச்சுறுத்திய பேராபத்தைக் கொண்டுவரவில்லை. மோசே மலையிலிருந்து தனது கைகளில் இரண்டு சாட்சி கற்பலகைகளுடன் கீழே இறங்கிப் போனான். அந்தக் கற்பலகைகளில் முன்னும் பின்னுமாக இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தன. அந்தக் கற்பலகைகள் இறைவனின் கைவேலையாயிருந்தன. அதில் இறைவனால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆரவாரம் செய்யும் மக்களின் சத்தத்தை யோசுவா கேட்டபோது, அவன் மோசேயிடம், “முகாமில் யுத்த சத்தம் கேட்கிறது” என்றான். அதற்கு மோசே சொன்னது: “அது வெற்றியின் சத்தமும் அல்ல; தோல்வியின் சத்தமும் அல்ல; நாம் கேட்பது பாடலின் சத்தம்.” மோசே முகாமுக்குக் கிட்டவந்தபோது, கன்றுக்குட்டியையும் மக்களின் ஆட்டத்தையும் கண்டான். அதைக்கண்ட மோசே கடுங்கோபம் கொண்டு, தன் கையில் இருந்த கற்பலகைகளை மலையடிவாரத்தில் எறிந்து துண்டுகளாக உடைத்தான். அத்துடன் அவர்கள் செய்துவைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து, அதை நெருப்பில்போட்டு எரித்து தூளாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, இஸ்ரயேலரைக் குடிக்கச் செய்தான். அதன்பின் மோசே ஆரோனிடம், “இந்த மக்கள் உனக்கு என்ன செய்தார்கள்? நீ அவர்களை இவ்வளவு பெரிய பாவத்தைச்செய்ய வழிநடத்துவதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?” என்று கேட்டான். அதற்கு ஆரோன், “என் ஆண்டவனே, கோபங்கொள்ள வேண்டாம். இவர்கள் எவ்வளவாய் தீமையின் பக்கம் சார்ந்து நடக்கின்ற மக்கள் என்பதை நீர் அறிவீர்தானே! அவர்கள் என்னிடம், ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்களை வழிநடத்த எங்களுக்கு தெய்வங்களைச் செய்துகொடும்’ என்றார்கள். ஆகவே நான் அவர்களிடம், ‘தங்க நகைகள் இருப்பவர்கள் அதைக் கழற்றுங்கள்’ என்றேன். அப்படியே அவர்கள் அந்த தங்க நகைகளை என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை நெருப்பில் போட்டேன். அதிலிருந்து இந்த கன்றுக்குட்டி வந்தது” என்றான். மக்கள் கட்டுக்கடங்காமல் திரிவதையும், அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்கள் கேலிப்பொருளாகும்படி, ஆரோன் அவர்களை கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதையும் மோசே கண்டான். அப்பொழுது மோசே முகாமின் வாசலில் நின்று, “யெகோவாவின் பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வாருங்கள்” என்றான். லேவியர் எல்லோரும் அவனிடம் வந்து சேர்ந்தார்கள். மோசே அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொருவரும் உங்கள் இடுப்பில் ஒரு வாளைக் கட்டிக்கொள்ளுங்கள். முகாமெங்கும் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அங்குமிங்குமாகச் சென்று ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும், நண்பனையும், அயலானையும் கொல்லுங்கள்” என்றான். லேவியர்கள் மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்று மக்களில் மூவாயிரம்பேர்வரை செத்தார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் சொந்த மகன்களுக்கும், சகோதரர்களுக்கும் விரோதமாய் இருந்தபடியால், இன்று நீங்கள் யெகோவாவினுடைய பணிக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யெகோவா இன்றைக்கு உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்” என்றான். மறுநாள் மோசே மக்களிடம், “நீங்கள் பெரிய பாவம் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது நான் யெகோவாவிடம் ஏறிப்போவேன். ஒருவேளை உங்களுடைய பாவத்திற்காக நான் பாவநிவிர்த்தி செய்யலாம்” என்றான். அவ்வாறே மோசே திரும்பவும் யெகோவாவிடம் போய், “இந்த மக்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக தங்கத்தினால் தெய்வங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய பாவத்தை இப்பொழுது மன்னியும்; இல்லாவிட்டால் நீர் எழுதிய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடும்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரையே என் புத்தகத்திலிருந்து அழிப்பேன். இப்பொழுது நீ போய் நான் உனக்கு சொன்ன இடத்துக்கு மக்களை அழைத்துக்கொண்டு போ. இதோ! என் தூதன் உனக்குமுன் செல்வான். ஆனாலும், நான் தண்டிக்கும் காலம் வரும்போது, அவர்கள் பாவத்திற்காக நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார். ஆரோன் செய்து கொடுத்த கன்றுக்குட்டியை வணங்கியதற்காக யெகோவா மக்களைப் பெரும் கொள்ளைநோயினால் வாதித்தார்.

யாத்திராகமம் 32:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடம் கூட்டம்கூடி. அவனை நோக்கி: “எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டாக்கும்” என்றார்கள். அதற்கு ஆரோன்: “உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். அவர்களுடைய கையிலிருந்து அவன் அந்தப் தங்கங்களை வாங்கி, சிற்பக்கருவியைக் கூர்மையாக்கி, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே” என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்குக் யெகோவாவுக்குப் பண்டிகை” என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, மக்கள் சாப்பிடவும், குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலர்களே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள்” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள மக்கள். ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய தேசமாக்குவேன்” என்றார். மோசே தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: “யெகோவாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்? மலைகளில் அவர்களைக் கொன்றுபோடவும், பூமியின்மேல் இல்லாதபடி அவர்களை அழிக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்வதற்காகவே அவர்களைப் புறப்படச்செய்தார் என்று எகிப்தியர்கள் சொல்லுவானேன்? உம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பி, உமது மக்களுக்குத் தீங்குசெய்யாதபடி, அவர்கள்மேல் பரிதாபம்கொள்ளும். உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான். அப்பொழுது யெகோவா தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார். பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவனுடைய கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாகவும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்தாகவும் இருந்தது. மக்கள் ஆரவாரம் செய்கிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: “முகாமில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது” என்றான். அதற்கு மோசே: “அது வெற்றியின் சத்தமும் அல்ல, தோல்வியின் சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது” என்றான். அவன் முகாமிற்கு அருகே, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபமடைந்தவனாய், தன்னுடைய கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே வீசி உடைத்துப்போட்டு; அவர்கள் உண்டாக்கின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் மக்கள் குடிக்கும்படி செய்தான். பின்பு, மோசே ஆரோனை நோக்கி: “நீ இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய பாவத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்” என்றான். அதற்கு ஆரோன்: “என்னுடைய ஆண்டவனுக்குக் கோபம் வராமல் இருப்பதாக; இது பொல்லாத மக்கள் என்று நீர் அறிந்திருக்கிறீர். இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டாக்கும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்” என்றார்கள். அப்பொழுது நான்: தங்கங்களை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரவேண்டும் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான். மக்கள் தங்களுடைய எதிரிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாக இருக்கிறதை மோசே கண்டு, முகாமின் வாசலில் நின்று: “யெகோவாவின் பக்கம் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடம் சேரவேண்டும்” என்றான். அப்பொழுது லேவியர்கள் எல்லோரும் அவனிடம் கூடிவந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்றான். லேவியர்கள் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்தநாளில் மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் இறந்தார்கள். “யெகோவா இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன் தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாக இருக்கிறதினால், யெகோவாவுக்கு உங்களைப் பிரதிஷ்டைசெய்யுங்கள்” என்று மோசே சொல்லியிருந்தான். மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான். அப்படியே மோசே யெகோவாவிடத்திற்குத் திரும்பிப்போய்: “ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார். ஆரோன் செய்த கன்றுக்குட்டியை மக்கள் செய்யவைத்ததால் யெகோவா அவர்களை வாதித்தார்.

யாத்திராகமம் 32:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே வழி நடத்தி வந்தான். இப்போது அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்பாகச் சென்று வழி நடத்துவதற்குச் சில தேவர்களை உருவாக்கும்” என்றனர். ஆரோன் ஜனங்களிடம், “உங்கள் மனைவி, பிள்ளைகளுக்குச் சொந்தமான பொன் காதணிகளை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றான். எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் ஜனங்களிடமிருந்து அவற்றை வாங்கி, அதைப் பயன்படுத்தி ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை வார்த்தான். பின்பு ஒரு உளியைப் பயன்படுத்தி, அந்த சிலையைச் செதுக்கினான். பின் அதை பொன் தகட்டால் மூடினான். அப்போது ஜனங்கள், “இஸ்ரவேலரே, இந்த தெய்வங்களே உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தன!” என்றனர். ஆரோன் இவற்றையெல்லாம் பார்த்தான். கன்றுக்குட்டியின் எதிரில் ஒரு பலிபீடம் அமைத்தான். பின்பு ஜனங்களை நோக்கி, “கர்த்தரைக் கனப்படுத்துவதற்கு நாளை ஒரு பண்டிகை நடத்துவோம்” என்றான். மறுநாள் காலையில் ஜனங்கள் வெகு சீக்கிரமாக எழுந்தனர். அவர்கள் மிருகங்களைக் கொன்று தகன பலிகளையும், சமாதானபலிகளையும் படைத்தனர். ஜனங்கள் தின்று, குடித்துக் களிக்க உட்கார்ந்தனர். பின்பு எழுந்து மிகுதியான அநாகரீகத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த மலையைவிட்டு சீக்கிரமாய் கீழே இறங்கிப் போ. எகிப்திலிருந்து நீ வெளியே அழைத்து வந்த, உனது ஜனங்கள் மிகவும் சீர்கேடான பாவத்தைச் செய்திருக்கிறார்கள். செய்யும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டவைகளினின்று மிக வேகமாய் சோரம் போனார்கள். பொன்னை உருக்கி கன்றுக்குட்டியை வார்த்தார்கள். அவர்கள் அதைத் தொழுது அதற்குப் பலி செலுத்துகிறார்கள். அதனிடம், ‘எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தின தெய்வங்கள் இவையே’ என்றனர்” என்றார். மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் இந்த ஜனங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பிடிவாத குணமுடையோர் என்பதையும் அறிவேன். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திரும்புவார்கள். எனவே என் கோபத்தால் அவர்களை அழிப்பேன். பின் உன் மூலமாக ஒரு பெரிய ஜனத்தை உருவாக்குவேன்” என்றார். ஆனால் மோசே தேவனாகிய கர்த்தரை மிகவும் கெஞ்சி, “கர்த்தாவே, உமது கோபத்தால் உமது ஜனங்களை அழித்துவிடாதேயும். உமது மிகுந்த ஆற்றலினாலும் வல்லமையாலும் நீர் இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீர். ஆனால் நீர் உமது ஜனங்களை அழித்துவிட்டால் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அந்த ஜனங்களுக்குத் தீமை செய்யத் திட்டமிட்டார். எனவே அவர்களை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவர்களை மலைகளில் கொல்ல விரும்பினார். அவர்களைப் பூமியிலிருந்து நிர்மூலமாக்க எண்ணினார், என்று சொல்வார்கள்.’ எனவே, உமது ஜனங்களிடம் கோபம் கொள்ளாதிரும். உமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்குறுதி அளித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான். எனவே, கர்த்தர் ஜனங்களுக்காக மனஸ்தாபப்பட்டார். தான் செய்வதாகக் கூறிய செயலை கர்த்தர் செய்யவில்லை, அவர் ஜனங்களை அழிக்கவில்லை. பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான். உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை அவன் கையில் ஏந்திவந்தான். கற்பலகைகளின் முன்புறமும், பின்புறமும் அந்தக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்தன. தேவனே அக்கற்களை உண்டாக்கி, அக்கற்களின் மீது கட்டளைகளை எழுதியிருந்தார். மலையிலிருந்து இறங்கியபோது பாளையத்திலிருந்து பெரும் சத்தத்தை யோசுவா கேட்டான். யோசுவா மோசேயை நோக்கி: “நம் பாளையத்தில் யுத்த சத்தம் எழும்புகிறது” என்றான். மோசே பதிலாக, “இது வெற்றியால் ஒரு படை எழுப்பும் சத்தமல்ல. தோல்வியால் ஒரு படை எழுப்பும் கூக்குரலும் அல்ல. நான் கேட்டது இசையின் சத்தமே” என்றான். மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். அவன் கற்பல கைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின. பின்பு மோசே ஜனங்கள் செய்த கன்றுக்குட்டியை உடைத்து, அதை நெருப்பில் போட்டு உருக்கினான். பொன்னைத் தூளாகுமட்டும் அரைத்து அதைத் தண்ணீரில் கரைத்தான். அந்த தண்ணீரை பருகும்படி இஸ்ரவேல் ஜனங்களை வற்புறுத்தினான். மோசே ஆரோனை நோக்கி, “இந்த ஜனங்கள் உனக்குச் செய்ததென்ன? ஏன் இந்த மாபெரும் கேடான பாவத்தைச் செய்யும்படியாக அவர்களை வழி நடத்தினாய்?” என்று கேட்டான். ஆரோன், “கோபம் கொள்ளாதிரும், இந்த ஜனங்கள் எப்போதுமே பாவம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும் அல்லவா. ஜனங்கள் என்னிடம், ‘மோசே எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினான். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, எங்களை வழிநடத்துவதற்கு தெய்வங்களைச் செய்’ என்றார்கள். நான் அவர்களிடம், ‘உங்களிடம் பொன் காதணிகள் இருந்தால், அவற்றை என்னிடம் கொடுங்கள்’ என்றேன். ஜனங்கள் பொன்னை என்னிடம் கொடுத்தார்கள். நான் பொன்னை நெருப்பில் போட்டேன். நெருப்பிலிருந்து கன்றுகுட்டி வந்தது!” என்று பதிலுரைத்தான். ஜனங்கள் கட்டுப்பாட்டை மீறி அநாகரீகமாக நடக்கும்படியாக ஆரோன் அவர்களை அனுமதித்ததை மோசே கண்டான். ஜனங்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை அவர்களின் பகைவர்கள் கண்டனர். எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான். லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது குமாரனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான். மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான். எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர். இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான். ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன். எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.

யாத்திராகமம் 32:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி. அவனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள். ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப்பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? மலைகளில் அவர்களைக்கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான். அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது. ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான். அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான். அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு; அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான். பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான். அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர். இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள். அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான். ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு, பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள். கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டைபண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான். மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான். அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார். ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்