யாத்திராகமம் 31:12-18
யாத்திராகமம் 31:12-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
யாத்திராகமம் 31:12-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியது இதுவே: நீங்கள் என் ஓய்வுநாட்களைக் கைக்கொள்ளவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நானே என்பதை நீங்கள் தலைமுறைதோறும் அறியும்படி, இது உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். “ ‘இந்த ஓய்வுநாள், உங்களுக்குப் பரிசுத்த நாள் என்பதால் அதைக் கைக்கொள்ளுங்கள். அதைத் தூய்மைக்கேடாக்கும் எவனும் கொல்லப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ, யெகோவாவுக்கு பரிசுத்தமான ஓய்வுநாள். இந்த ஓய்வுநாளில் எந்தவித வேலையைச் செய்கிற எவனும் கொல்லப்படவேண்டும். இஸ்ரயேலர் தலைமுறைதோறும், ஓய்வுநாளை கைக்கொண்டு நிரந்தர உடன்படிக்கையாக அதைக் கொண்டாடவேண்டும். அது என்றென்றைக்கும் எனக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். ஏனெனில், யெகோவா வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, ஏழாம்நாளில் வேலைசெய்யாமல் ஓய்ந்திருந்தார்.’ ” இவ்வாறு சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசி முடித்தபின், இறைவனின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளாலான இரண்டு சாட்சிப்பலகைகளை அவனிடம் கொடுத்தார்.
யாத்திராகமம் 31:12-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மேலும், யெகோவா மோசேயிடம்: “நீ இஸ்ரவேலர்களை நோக்கி, நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும். ஆகையால், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதின் பரிசுத்தத்தை கெடுக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; அந்த நாளிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடி துண்டிக்கப்பட்டுபோவான். ஆறுநாட்களும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை செய்யாமல் ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளவேண்டும். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அடையாளமாக இருக்கும்; ஆறுநாட்களுக்குள்ளே யெகோவா வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே வேலைகளை முடித்து ஓய்ந்திருந்தார் என்றார். சீனாய்மலையில் அவர் மோசேயோடு பேசி முடிந்தபின்பு, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய இரண்டு சாட்சி பலகைகளை அவனிடம் கொடுத்தார்.
யாத்திராகமம் 31:12-18 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதைக் கூறு: ‘ஓய்வுக்குரிய விசேஷ தினங்களின் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எல்லாத் தலைமுறைகளிலும் அது உங்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள அடையாளமாக விளங்கும். உங்களை எனது விசேஷமான ஜனங்களாக கர்த்தராகிய நான் ஏற்றுக்கொண்டதை இது உணர்த்தும். “‘ஒய்வு நாளை ஒரு விசேஷ நாளாக எண்ணுவாயாக. பிறநாட்களுக்கு சமமாக ஓய்வு நாளையும் ஒருவன் எண்ணினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். ஓய்வு நாளில் வேலை செய்கிறவனை அவனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கிவிட வேண்டும். வேலை நாட்களாக வாரத்தில் ஆறு நாட்கள் உள்ளன. ஏழாவது நாள் ஓய்வுக்குரிய விசேஷ நாளாகும். கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாள் அது. ஓய்வு நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வு நாளை நினைவுகூர்ந்து அதை விசேஷ நாளாக்க வேண்டும். என்றென்றும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும். என்றென்றும் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் தொடர்கிற உடன்படிக்கையாக அது விளங்கும். ஓய்வு நாள் எனக்கும் இஸ்ரவேலருக்கும் மத்தியில் ஒரு அடையாளமாக எப்போதும் இருக்கும். கர்த்தர் ஆறு நாட்கள் உழைத்து வானையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் ஏழாம் நாளில் ஓய்வாகவும் அமைதியாகவும் இருந்தார்’” என்றார். சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் பேசி முடித்தார். உடன்படிக்கை பதித்த இரண்டு கற்பலகைகளை கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். தேவன் தமது விரல்களால் அக்கற்பலகைகளில் எழுதினார்.