யாத்திராகமம் 30:22-29

யாத்திராகமம் 30:22-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது. அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபப்பீடத்தையும், தகன பலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.

யாத்திராகமம் 30:22-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ பின்வரும் சிறந்த வாசனைப் பொருட்களை எடுக்கவேண்டும். திரவ வெள்ளைப்போளம் 500 சேக்கல், சுகந்த கறுவாப்பட்டை 250 சேக்கல், நறுமண வசம்பு 250 சேக்கல், இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றைக்கொண்டு வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைச் செய்யவேண்டும். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாயிருக்கும். இந்த எண்ணெயை உபயோகித்து சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அபிஷேகம் செய்யவேண்டும். மேஜையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதின் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்யவேண்டும். தகன பலிபீடத்தையும், அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவை மகா பரிசுத்தமாயிருக்கும்படியும், அவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாயிருக்கும்படியும் அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.

யாத்திராகமம் 30:22-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக. அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும், தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, அவைகள் மகா பரிசுத்தமாக இருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாக இருக்கும்.

யாத்திராகமம் 30:22-29 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “தரத்தில் உயர்ந்த நறுமணப் பொருட்களை அரசாங்க அளவின்படி வாங்கு. வெள்ளைப் போள தைலம் 12 பவுண்டும், நறுமணப் பட்டை 6 பவுண்டும், வசம்பு 6 பவுண்டும் இலவங்கம் 12 பவுண்டும் வாங்கிக்கொள். அதிகாரப்பூர்வமான அளவின்படி பார்த்து வாங்குவதோடு ஒரு கேலன் தரமான ஒலிவ எண்ணெயையும் வாங்கிக்கொள். “எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து சுகந்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக்கொள். ஆசாரிப்புக் கூடாரத்தின் மேலும் உடன்படிக்கைப் பெட்டியின் மேலும் இந்த எண்ணெயைத் தெளி. அவை விசேஷமானவை என்பதை இது உணர்த்தும். எண்ணெயை மேசைமீதும் அதன் மீதுள்ள எல்லாப் பாத்திரங்களின்மீதும் ஊற்று. குத்துவிளக்குத் தண்டின்மீதும், அதன் உபகரணங்களின்மீதும், தூபபீடத்தின்மீதும் ஊற்று. “தேவனுக்கு பலிகளை எரிப்பதற்கான பலிபீடத்திலும் எண்ணெயை ஊற்று. இதன் பாத்திரத்திலும் அதன் அடித்தளத்திலும் ஊற்று. இவற்றையெல்லாம் நீ பரிசுத்தமாக்குவாய். அவை கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவை. அவற்றைத் தொடும் எவையும் பரிசுத்தமாகும்.