யாத்திராகமம் 30:11-38
யாத்திராகமம் 30:11-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன். எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும். உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திபண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம். அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக. அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள். அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது. அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபப்பீடத்தையும், தகன பலிபீடத்தையும் அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும். ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச்சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுங்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது. இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார்.
யாத்திராகமம் 30:11-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ இஸ்ரயேலரை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் தன் உயிருக்காக ஒரு மீட்புப் பணத்தை யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீ அவர்களைக் கணக்கிடுகையில் அவர்கள்மேல் ஒரு கொள்ளைநோயும் வராது. எண்ணப்படுகிறவன் ஏற்கெனவே எண்ணப்பட்டவர்களிடம் கடந்துபோகும்போது, பரிசுத்த இடத்தின் அளவின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும். ஒரு சேக்கல் இருபது கேரா நிறையுள்ளது. இந்த அரைச்சேக்கல் யெகோவாவுக்கான ஒரு காணிக்கையாகும். இருபது வயதுடையவர்களும், அதற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறு கடந்துபோகும் எல்லோரும் யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொடுக்கவேண்டும். உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்காக நீங்கள் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தர்கள் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் கூடாது, ஏழைகள் அதைவிடக் குறைவாகக் கொடுக்கவும் கூடாது. நீயோ அந்த பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரயேலரிடம் இருந்து வாங்கி, சபைக் கூடாரப் பணிக்காக அதைப் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும்படி, யெகோவா முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாய் இருக்கும்” என்றார். பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ கழுவுவதற்காக ஒரு வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் செய்யவேண்டும். அதைச் சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். அதிலுள்ள தண்ணீரால் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவவேண்டும். அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதெல்லாம் தாங்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் கழுவவேண்டும். அத்துடன், நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவந்து ஆசாரிய ஊழியம் செய்வதற்காக பலிபீடத்தை அணுகும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவவேண்டும். இது ஆரோனுக்கும், அவன் சந்ததியினருக்கும் தலைமுறைதோறும் நிரந்தர நியமமாயிருக்கும்.” மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ பின்வரும் சிறந்த வாசனைப் பொருட்களை எடுக்கவேண்டும். திரவ வெள்ளைப்போளம் 500 சேக்கல், சுகந்த கறுவாப்பட்டை 250 சேக்கல், நறுமண வசம்பு 250 சேக்கல், இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றைக்கொண்டு வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைச் செய்யவேண்டும். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாயிருக்கும். இந்த எண்ணெயை உபயோகித்து சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அபிஷேகம் செய்யவேண்டும். மேஜையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதின் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்யவேண்டும். தகன பலிபீடத்தையும், அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவை மகா பரிசுத்தமாயிருக்கும்படியும், அவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாயிருக்கும்படியும் அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும். “அத்துடன் ஆரோனும் அவன் மகன்களும், ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அபிஷேகம் செய்து அர்ப்பணம் செய்யவேண்டும். இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் இது எனக்கு பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கவேண்டும். இதை ஒரு மனிதனுடைய உடலின்மேல் ஊற்றவோ, இந்தக் கலவை முறைப்படி வேறொரு எண்ணெயைத் தயார்செய்யவோ வேண்டாம். இது பரிசுத்தமானது. நீங்களும் இதைப் பரிசுத்தமாய் எண்ணவேண்டும். இதேபோல் வாசனைத் தைலத்தைச் செய்கிறவனோ அல்லது ஆசாரியரைத் தவிர வேறு யார்மேலாவது இந்த எண்ணெயைப் பூசுகிறவனோ தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார். பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பிசின் கலந்த குங்கிலியம், சாம்பிராணி, அல்பான்பிசின், சுத்தமான நறுமணமுள்ள குங்கிலியம் ஆகிய வாசனைப் பொருட்களை சமமான அளவு எடுத்துக்கொண்டு, இவற்றை வாசனை தைலம் தயாரிப்பவனின் வேலையைப் போல் வாசனைக் கலவையாக நறுமணத்தூளைச் செய்யவேண்டும். அது உப்பிடப்பட்டு, தூய்மையும், பரிசுத்தமுமாய் இருக்கவேண்டும். அதில் கொஞ்சத்தை அரைத்துத் தூளாக்கி, நான் உன்னைச் சந்திக்கும் இடமான சபைக் கூடாரத்திலுள்ள சாட்சிப்பெட்டிக்கு முன் வைக்கவேண்டும். அது உங்களுக்கு மகா பரிசுத்தமுள்ளதாய் இருக்கும். இந்தக் கலவை முறையைக் கொண்டு உங்களுக்காக வேறெந்த நறுமணத்தூளையும் தயாரிக்கக்கூடாது. இதை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக எண்ணிக்கொள்ளுங்கள். அதன் வாசனையை அனுபவிக்கும்படி இதுபோன்ற எதையாவது செய்யும் எவனும், தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
யாத்திராகமம் 30:11-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேலர்களை அவர்கள் எண்ணிக்கையின்படி கணக்குப்பார்க்க, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடி, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் நேரத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் யெகோவாவுக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கவேண்டும். எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தன் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம். அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும். அதனிடம் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும். அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், யெகோவாவுக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும். அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக. அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும், தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, அவைகள் மகா பரிசுத்தமாக இருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாக இருக்கும். ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும். இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும். இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் ஊற்றுகிறவனும், தன்னுடைய மக்களில் இராதபடி அறுப்புண்டுபோகவேண்டும் என்று சொல் என்றார். “பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமஎடையாக எடுத்து, தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, தூய்மையான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைக்கவேண்டும்; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாக இருக்கவேண்டும். இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது யேகோவாக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும். இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும் என்றார்.
யாத்திராகமம் 30:11-38 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள். நீ இதைச் செய்தபிறகு ஒவ்வொருவனும் கர்த்தருக்கென ஒரு தொகை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவனும் இதைச் செய்தால் அவர்களுக்குத் தீங்கு நேராது. எண்ணப்பட்ட ஒவ்வொருவனும் 1/2 சேக்கல் வீதம் கொடுக்க வேண்டும். (அதாவது அதிகாரப்பூர்வமான அளவுப்படி 1/2 சேக்கல்.) 1 சேக்கலுக்கு 20 கேரா 1/2 சேக்கல் கர்த்தருக்குரிய காணிக்கை. குறைந்தபட்சம் இருபது வயது நிம்பியவர்கள் எல்லோரையும் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுத்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்கு இந்தக் காணிக்கையைக் கொடுக்க வேண்டும். செல்வந்தர்கள் 1/2 சேக்கலுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. ஏழைகளும் 1/2 சேக்கலுக்குக் குறைவாகக் கொடுக்கக்கூடாது. எல்லோரும் கர்த்தருக்கு ஒரே அளவு காணிக்கை தரவேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் இரட்சிப்பிற்கான பணம். இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார். கர்த்தர் மோசேயை நோக்கி, “வெண்கலத்தால் ஒரு பெரிய தொட்டியைச் செய்து அதை வெண்கலப் பீடத்தில் வை. இதைக் கைகளையும், கால்களையும் கழுவுவதற்குப் பயன்படுத்து. அதை ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் நடுவில் வை. வெண்கலத் தொட்டியைத் தண்ணீரால் நிரப்பு. ஆரோனும், அவனது குமாரர்களும் அவர்கள் கைகளையும் கால்களையும் இந்த தொட்டித் தண்ணீரில் கழுவ வேண்டும். ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதும் கர்த்தருக்குக் காணிக்கையைப் படைக்க பலிபீடத்தை நெருங்கும்போதும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மரிக்கமாட்டார்கள். அவர்கள் மரிக்காமலிருக்கும்படிக்குத் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆரோனும், அவனது ஜனங்களும் என்றென்றும் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். எதிர் காலத்தில் வாழவிருக்கும் ஆரோனின் ஜனங்களுக்கும் இது நித்திய கட்டளையாயிருக்கும்” என்றார். பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “தரத்தில் உயர்ந்த நறுமணப் பொருட்களை அரசாங்க அளவின்படி வாங்கு. வெள்ளைப் போள தைலம் 12 பவுண்டும், நறுமணப் பட்டை 6 பவுண்டும், வசம்பு 6 பவுண்டும் இலவங்கம் 12 பவுண்டும் வாங்கிக்கொள். அதிகாரப்பூர்வமான அளவின்படி பார்த்து வாங்குவதோடு ஒரு கேலன் தரமான ஒலிவ எண்ணெயையும் வாங்கிக்கொள். “எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து சுகந்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக்கொள். ஆசாரிப்புக் கூடாரத்தின் மேலும் உடன்படிக்கைப் பெட்டியின் மேலும் இந்த எண்ணெயைத் தெளி. அவை விசேஷமானவை என்பதை இது உணர்த்தும். எண்ணெயை மேசைமீதும் அதன் மீதுள்ள எல்லாப் பாத்திரங்களின்மீதும் ஊற்று. குத்துவிளக்குத் தண்டின்மீதும், அதன் உபகரணங்களின்மீதும், தூபபீடத்தின்மீதும் ஊற்று. “தேவனுக்கு பலிகளை எரிப்பதற்கான பலிபீடத்திலும் எண்ணெயை ஊற்று. இதன் பாத்திரத்திலும் அதன் அடித்தளத்திலும் ஊற்று. இவற்றையெல்லாம் நீ பரிசுத்தமாக்குவாய். அவை கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவை. அவற்றைத் தொடும் எவையும் பரிசுத்தமாகும். “ஆரோன்மீதும், அவனது குமாரர்கள் மீதும் அபிஷேக எண்ணெயை ஊற்று. அவர்கள் எனக்கு விசேஷ பணிவிடை செய்வதை அது காட்டும். அப்பொழுது அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு சேவை செய்யலாம். அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல். அது எனக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சாதாரண நறுமணப் பொருளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. இந்த விசேஷ எண்ணெயைத் தயாரிக்கும் முறையில் சாதாரண நறுமண தைலத்தை தயாரிக்கக் கூடாது. இந்த அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது. இது உங்களுக்கு மிகவும் விசேஷமானதாகும். இந்தப் பரிசுத்த எண்ணெயைப் போல யாரேனும் நறுமண தைலத்தை உண்டாக்கி அதை அந்நியருக்குக் கொடுத்தால் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்றார். பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “இந்த நறுமணப் பொருட்களை வாங்கிக்கொள். அவை வெள்ளைப் போளம், குங்கிலியம், அல்பான் பிசின், கந்தவர்க்கம், சாம்பிராணி ஆகியன எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்துக்கொள். இவற்றைச் சேர்த்து நறுமணமுள்ள தூபவர்க்கம் செய். அபிஷேக எண்ணெய் தயாரிப்பதுபோல, இதைத் தயாரிக்க வேண்டும். உப்பையும் அதனோடு சேர்க்கும்போது அது சுத்தமானதாகவும், விசேஷமானதாகவும் இருக்கும். அதில் கொஞ்சம் தூபவர்க்கத்தைத் தூளாக்கு. ஆசாரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைக்கு முன்னால் நறுமணப் பொடியை வை. அந்த இடத்தில் நான் உன்னைச் சந்திப்பேன். விசேஷ காரியத்துக்காக மட்டுமே அந்த நறுமணப் பொடியை நீ பயன்படுத்த வேண்டும். இப்படியாக இந்த நறுமணப்பொருளை கர்த்தருக்கென்று சிறந்த முறையில் தயாரிக்கவேண்டும். அதேவிதமாக வேறு நறுமணப் பொருளைத் தயாரிக்கக் கூடாது. ஒருவன் நறுமணத்திற்கென்று தனது உபயோகத்திற்காக நறுமணப் பொருளை இதே முறையில் தயாரிக்க விரும்பலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்தால், எனது ஜனங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவான்” என்றார்.