யாத்திராகமம் 30:1-10
யாத்திராகமம் 30:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபப்பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக. அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும். அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி, அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக. அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய். சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய். ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும். உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே. அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின் மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம். வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறைதோறும் வருஷத்தில் ஒருமுறை அதின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
யாத்திராகமம் 30:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நறுமணத்தூளை எரிப்பதற்கு ஒரு தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்யவேண்டும். அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருக்கவேண்டும். அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் இருக்கவேண்டும். அதன் மேல்பகுதியையும், அதன் எல்லா பக்கங்களையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைக்கவேண்டும். தூபபீடத்தின் தங்க விளிம்புச்சட்டத்துக்குக் கீழே இரண்டு தங்க வளையங்களை இரண்டு பக்கங்களிலும் அமைக்கவேண்டும். அதைச் சுமப்பதற்கான கம்புகளை அதற்குள் மாட்டும்படி எதிரெதிராக அவைகளை அமைக்கவேண்டும். அந்தக் கம்புகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும். தூபபீடத்தை சாட்சிப்பெட்டியின் முன் இருக்கும் திரைக்கு முன்னால் வைக்கவேண்டும். அது நான் உன்னைச் சந்திக்கும் இடமான, சாட்சிப்பெட்டியை மூடியிருக்கும் கிருபாசனத்தின் முன்னே இருக்குமிடம். “ஆரோன் காலைதோறும் விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போது நறுமணத்தூளை எரிக்கவேண்டும். பொழுதுபடும் நேரத்தில் அவன் விளக்கேற்றும்போது, திரும்பவும் நறுமணத்தூளை எரிக்கவேண்டும். இவ்விதமாக தலைமுறைதோறும் இந்த நறுமணத்தூள் யெகோவாவுக்குமுன் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கும். இவைகளைத்தவிர வேறெந்த நறுமணத்தூளையோ, தகன காணிக்கையையோ, தானியக் காணிக்கையையோ இப்பீடத்தின்மேல் செலுத்தாதே. அதன்மேல் பானகாணிக்கையை ஊற்றவும் வேண்டாம். ஆரோன் வருடத்திற்கு ஒருமுறை இப்பீடத்தின் கொம்புகளின்மேல் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இந்த வருடாந்திர பாவநிவிர்த்தி, பாவநிவாரண பலியின் இரத்தத்தினால் தலைமுறைதோறும் செய்யப்படவேண்டும். இந்தத் தூபபீடம் யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.
யாத்திராகமம் 30:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“தூபங்காட்டுவதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும். அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும். அதின் மேல்பக்கத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்விளிம்பை உண்டாக்கி, அந்த விளிம்பின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்கவேண்டும். அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும். சாட்சிப்பெட்டிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்திற்கும் முன்பாக அதை வைக்கவேண்டும். ஆரோன் காலைதோறும் அதின்மேல் நறுமண தூபம்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும். உங்களுடைய தலைமுறைதோறும் யெகோவாவுடைய சந்நிதியில் காட்டவேண்டிய நிரந்தர தூபம் இதுவே. அதின்மேல் அந்நிய தூபத்தையோ, தகனபலியையோ, ஆகாரபலியையோ படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம். வருடத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தால் அதின் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் வருடத்தில் ஒருமுறை அதின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; அது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
யாத்திராகமம் 30:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து. பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும். பீடத்தின் மேல் புறத்தையும் பக்கங்களையும் கொம்புகளையும் பொன்னால் மூட வேண்டும். பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தைப் பதிக்க வேண்டும். அதன் கீழ் இரண்டு பொன் வளையங்கள் இருக்கட்டும். பீடத்தின் எதிர்ப்பக்கங்களில் இரண்டு பொன் வளையங்கள் இருக்க வேண்டும். பீடத்தைத் தண்டுகளால் சுமப்பதற்கு இவ்வளையங்கள் பயன்படுத்தப்படும். தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு. விசேஷ திரைக்கு முன்னால் தூபபீடத்தை நிறுத்து. அத்திரைக்குப் பின் உடன்படிக்கைப் பெட்டி இருக்கும். உடன்படிக்கைக்குமேல் இருக்கும் கிருபாசனத்துக்கு முன்னால் பீடம் அமையும். இவ்விடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். “ஆரோன் தினந்தோறும் அதிகாலையில் தூபபீடத்தின்மேல் இனிய நறுமணப் புகையை எரிக்க வேண்டும். விளக்குகளை பராமரிக்க வரும்போது அவன் இதைச் செய்வான். மீண்டும் மாலையிலும் அவன் நறுமணப்புகையை எரிப்பான். அதுவும் மாலையில் விளக்கைப் பராமரிப்பதற்கு அவன் வரும் நேரமேயாகும். ஒவ்வொரு நாளும் என்றென்றும் கர்த்தரின் முன் நறுமணப் புகை எரிக்கப்பட வேண்டும். வேறு எந்த நறுமணப் பொருட்களை எரிப்பதற்கோ, வேறு தகனபலிகளை எரிப்பதற்கோ இந்தத் தூபபீடத்தைப் பயன்படுத்தக் கூடாது. தானிய காணிக்கையையோ, பானங்களின் காணிக்கையையோ எரிப்பதற்கு இப்பீடத்தைப் பயன்படுத்தலாகாது. “ஆண்டிற்கொருமுறை கர்த்தருக்கு ஒரு விசேஷ பலியை ஆரோன் செலுத்த வேண்டும். ஜனங்களின் பாவத்தைப் போக்குவதற்கு பாவப்பரிகார பலியின் இரத்தத்தை ஆரோன் பயன்படுத்த வேண்டும். பீடத்தின் கொம்புகளினருகே ஆரோன் இதனைச் செய்வான். இது பாவப்பரிகார நாள் எனப்படும். இது கர்த்தருக்கு மிகவும் பரிசுத்த நாள்” என்றார்.