யாத்திராகமம் 3:4-10

யாத்திராகமம் 3:4-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவன் அதைப் பார்ப்பதற்காக அங்கு போயிருந்ததை யெகோவா கண்டபோது, இறைவன் புதரின் நடுவிலிருந்து, “மோசே! மோசே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான். இறைவன் அவனிடம், “இதற்குமேல் நெருங்கி வராதே, உன் காலிலுள்ள செருப்பைக் கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்தமான நிலமாய் இருக்கிறது” என்றார். மேலும் அவர், “நான் உன் முற்பிதாக்களின் இறைவனாகிய ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்” என்றார். அதைக் கேட்டதும் மோசே இறைவனைப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன். அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும். இப்பொழுதும் இஸ்ரயேலரின் அழுகுரல் எனக்கு எட்டியிருக்கிறது; எகிப்தியர் அவர்களை ஒடுக்கும் விதத்தைக் கண்டிருக்கிறேன். ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார்.

யாத்திராகமம் 3:4-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான். அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார்.

யாத்திராகமம் 3:4-10 பரிசுத்த பைபிள் (TAERV)

புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார். மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார். தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான். அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.

யாத்திராகமம் 3:4-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.