யாத்திராகமம் 3:13-15

யாத்திராகமம் 3:13-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் முற்பிதாக்களின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றான். அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ” மேலும் இறைவன் மோசேயிடம், “ ‘ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். “இதுவே என்றென்றும் என் பெயராய் இருக்கிறது, இந்தப் பெயராலேயே நான் தலைமுறை தலைமுறையாக அழைக்கப்பட வேண்டும்.

யாத்திராகமம் 3:13-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம்.

யாத்திராகமம் 3:13-15 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான். அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.

யாத்திராகமம் 3:13-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.