யாத்திராகமம் 3:1-14

யாத்திராகமம் 3:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே மீதியான் நாட்டு ஆசாரியரான தன் மாமன் எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; ஒரு நாள் அவன் மந்தையை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தின் தூரமான பகுதிக்கு, ஓரேப் என்னும் இறைவனின் மலைக்கு வந்தான். அப்பொழுது அங்கே புதரிலிருந்து வந்த ஒரு அக்கினி ஜூவாலையில், யெகோவாவின் தூதனானவர் அவனுக்குக் காட்சியளித்தார்; அந்தப் புதரில் நெருப்பு பற்றியிருந்தும் எரிந்து போகாதிருந்ததை மோசே கண்டான். எனவே மோசே, “புதர் எரிந்து போகாதிருக்கும் இந்த ஆச்சரியமான காட்சியை நான் போய்ப்பார்ப்பேன்” என்றான். அவன் அதைப் பார்ப்பதற்காக அங்கு போயிருந்ததை யெகோவா கண்டபோது, இறைவன் புதரின் நடுவிலிருந்து, “மோசே! மோசே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான். இறைவன் அவனிடம், “இதற்குமேல் நெருங்கி வராதே, உன் காலிலுள்ள செருப்பைக் கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்தமான நிலமாய் இருக்கிறது” என்றார். மேலும் அவர், “நான் உன் முற்பிதாக்களின் இறைவனாகிய ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்” என்றார். அதைக் கேட்டதும் மோசே இறைவனைப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன். அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும். இப்பொழுதும் இஸ்ரயேலரின் அழுகுரல் எனக்கு எட்டியிருக்கிறது; எகிப்தியர் அவர்களை ஒடுக்கும் விதத்தைக் கண்டிருக்கிறேன். ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார். ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய், இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றான். அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்: நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள்” என்றார். அப்பொழுது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் முற்பிதாக்களின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றான். அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ”

யாத்திராகமம் 3:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய ஓரேப்வரை வந்தான். அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான். அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான். அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார்.

யாத்திராகமம் 3:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசேயின் மாமன் எத்திரோ என்ற பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான். மோசே மலையின்மேல், ஒரு எரியும் புதரில் கர்த்தருடைய தூதனைக் கண்டான். அது பின்வருமாறு நிகழ்ந்தது: அழியாதபடி எரிந்துகொண்டிருந்த ஒரு புதரை மோசே கண்டான். மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான். புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார். மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார். தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான். அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார். ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான். தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார். அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான். அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார்.

யாத்திராகமம் 3:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்