யாத்திராகமம் 22:22-27
யாத்திராகமம் 22:22-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம். அப்படிச் செய்தால் அவர்கள் என்னிடம் அழும்போது, நான் நிச்சயமாக அவர்கள் அழுகையைக் கேட்பேன். அதனால் நான் கோபமடைந்து, உங்களை வாளினால் கொல்லுவேன். அப்பொழுது உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றவர்கள் ஆவார்கள். “என் மக்களில் வறுமையான ஒருவனுக்கு யாராவது பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப்போல அவனிடம் வட்டியை வாங்கக்கூடாது. உங்கள் அயலானுடைய மேலங்கியை அடகுப்பொருளாக வாங்கியிருந்தால், சூரியன் மறையும் முன்பே அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஏனெனில், அதுமட்டுமே அவனுடைய உடலை மூடும் போர்வையாயிருக்கிறது. அவன் படுக்கும்போது, வேறு எதனால் அவன் தன்னை மூடிக்கொள்வான்? அவன் என்னிடம் அழும்போது நான் கேட்பேன். ஏனெனில் நான் கருணையுள்ளவர்.
யாத்திராகமம் 22:22-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு, கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள். உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம். பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக. அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடலை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன்.
யாத்திராகமம் 22:22-27 பரிசுத்த பைபிள் (TAERV)
“கணவனை இழந்த பெண்களுக்கும், பெற்றோரற்ற குழந்தைகளுக்கும் எந்தத் தீமையும் செய்யாதீர்கள். விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் ஏதேனும் தீங்கு செய்தீர்களானால் நான் அதை அறிவேன். அவர்கள் பட்ட துன்பத்தைப்பற்றிக் கூறும்போது, நான் கேட்பேன். எனக்கு மிகுந்த கோபம் உண்டாகும். உங்களைப் பட்டயத்தால் கொல்லுவேன். அப்போது உங்கள் மனைவியர் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள். “என் ஜனங்களில் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் கடனாகப் பணம் கொடுத்தால், அதற்கு வட்டி கேட்காதீர்கள். உடனே அப்பணத்தைத் திருப்பும்படியாக வற்புறுத்தக் கூடாது. நீ கொடுக்கவிருக்கும் பணத்திற்கு அடமானமாக தன் மேற்சட்டையை ஒருவன் கொடுத்தால் சூரியன் மறையும் முன்னர் அந்த மேற்சட்டையைத் திரும்பக் கொடுத்து விடவேண்டும். அம்மனிதனுக்கு மேற்சட்டை இல்லாமலிருந்தால் உடலைப் போர்த்திக்கொள்ள எதுவுமிராது. அவன் தூங்கும்போது சளிபிடிக்கும். அவன் என்னைக் கூப்பிட்டால் நான் அவனைக் கேட்பேன். நான் இரக்கம் பொருந்தியவராக இருப்பதால் நான் அவனுக்கு செவிகொடுப்பேன்.
யாத்திராகமம் 22:22-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம்மூண்டவராகி, உங்களைப்பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள். உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக. அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.