யாத்திராகமம் 20:8-11

யாத்திராகமம் 20:8-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

யாத்திராகமம் 20:8-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள்ளும்படி அதை நினைவில் வைத்துக்கொள். ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும். ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது, நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. உன் மிருகங்களோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையும் செய்யக்கூடாது. ஏனெனில், யெகோவா வானத்தையும் பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் படைத்தார். ஏழாம் நாளிலோ அவர் ஓய்ந்திருந்தார். அதனால் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

யாத்திராகமம் 20:8-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை; ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து; ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம். யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

யாத்திராகமம் 20:8-11 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார்.

யாத்திராகமம் 20:8-11

யாத்திராகமம் 20:8-11 TAOVBSI