யாத்திராகமம் 2:11-15

யாத்திராகமம் 2:11-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே வளர்ந்தபின் ஒரு நாள், தன் சொந்த எபிரெய மக்கள் இருக்கும் இடத்திற்குப் போய், அங்கு அவர்கள் கடினமான வேலைசெய்வதைப் பார்த்தான். அவன் தன் சொந்த மக்களில் ஒருவனான ஒரு எபிரெயனை ஒரு எகிப்தியன் அடிப்பதையும் கண்டான். அவன் இங்கும் அங்கும் சுற்றி பார்த்துவிட்டு, ஒருவரையும் காணாததினால், அந்த எகிப்தியனைக் கொன்று மணலில் புதைத்துவிட்டான். மோசே மறுநாளும் வெளியே போனபோது, எபிரெயர் இருவர் சண்டையிடுவதைக் கண்டான். அப்பொழுது அவன் தவறு செய்தவனிடம், “நீ உன் சகோதரனான எபிரெயனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு அந்த மனிதன், “எங்களுக்கு மேலாக உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல, என்னையும் கொல்ல நினைக்கிறாயோ?” என்று கேட்டான். மோசே, “நான் செய்தது மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே” என்று அறிந்து பயந்தான். பார்வோன் இதைப்பற்றி கேள்விப்பட்டதும் மோசேயைக் கொலைசெய்ய முயன்றான்; ஆனால் மோசே பார்வோனிடம் இருந்து தப்பியோடி, மீதியானில் வாழும்படி போய், அங்கே ஒரு கிணற்றருகே உட்கார்ந்திருந்தான்.

யாத்திராகமம் 2:11-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான். அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான்.

யாத்திராகமம் 2:11-15 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே வளர்ந்து, பெரியவனானான். அவனது சொந்த ஜனங்களாகிய எபிரெயர்கள் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டான். ஒரு நாள் ஒரு எபிரெய மனிதனை, எகிப்திய மனிதன் ஒருவன் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். மோசே சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைக் கண்டான். பின் மோசே, எகிப்தியனைக் கொன்று, அவனை மண்ணில் புதைத்தான். மறுநாள் இரண்டு எபிரெய மனிதர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையும், அவர்களில் ஒருவன் செய்தது தவறாயிருப்பதையும் மோசே பார்த்தான். மோசே அம்மனிதனை நோக்கி, “நீ ஏன் உனது அயலானை அடிக்கிறாய்?” என்று கேட்டான். அம்மனிதன் அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் இருக்கும்படியாக உன்னிடம் யாராவது கூறினார்களா? நீ எகிப்தியனை நேற்று கொன்றதுபோல என்னையும் கொல்லப் போகிறாயா?” என்றான். இதைக் கேட்டு மோசே அஞ்சினான். மோசே தனக்குள், “நான் செய்ததை எல்லோரும் இப்போது அறிந்திருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டான். மோசே செய்ததைக் குறித்து பார்வோன் கேள்விப்பட்டு, அவன் மோசேயைக் கொல்ல முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து மோசே தப்பி ஓடி, மீதியான் தேசத்திற்குச் சென்றான்.

யாத்திராகமம் 2:11-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான். அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்