யாத்திராகமம் 2:1-22

யாத்திராகமம் 2:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

லேவி வம்சத்திலுள்ள ஒரு மனிதன் ஒரு லேவியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அவன் ஒரு அழகான குழந்தையென அவள் கண்டபோது, அவனை மூன்று மாதங்களாக ஒளித்து வைத்தாள். ஆனால் அதற்கு மேலும் அவனை மறைத்துவைக்க முடியாமல், அவள் ஒரு நாணல் பெட்டியை எடுத்து அதற்கு தார் மற்றும் நிலக்கீல் பூசினாள். குழந்தையை அதற்குள் கிடத்தி, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள். அந்த குழந்தையின் சகோதரி அதற்கு என்ன நடக்குமென அறியும்படி, தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள்; அவளுடன் வந்த தோழியர்கள் நதிக்கரையில் உலாவினார்கள். பார்வோனின் மகள், நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் வேலைக்காரப் பெண்ணை அனுப்பினாள். அவள் அக்கூடையைத் திறந்தபோது, ஒரு குழந்தையைக் கண்டாள். அது அழுது கொண்டிருந்தது, அவள் அக்குழந்தைமேல் அனுதாபப்பட்டாள். அவள், “இது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று” என்றாள். அந்நேரத்தில் அங்கு வந்த குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளிடம், “உமக்காக இந்தப் பிள்ளைக்குப் பால்கொடுத்து வளர்க்க, எபிரெயப் பெண்களில் ஒருத்தியை போய்க்கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள். அதற்குப் பார்வோனின் மகள், “ஆம், போய் அழைத்து வா” என்றாள். அவள் உடனேபோய் குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் அவளிடம், “இக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா; நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன்” என்றாள். எனவே அப்பெண் அவனைக் கொண்டுபோய்ப் பாலூட்டி வளர்த்தாள். குழந்தை வளர்ந்து பெரியவனானபோது, அவன் தாய் அவனைப் பார்வோனின் மகளிடம் ஒப்படைத்தாள்; அவன் அவளுடைய மகனானான். பார்வோனின் மகள் இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள். மோசே வளர்ந்தபின் ஒரு நாள், தன் சொந்த எபிரெய மக்கள் இருக்கும் இடத்திற்குப் போய், அங்கு அவர்கள் கடினமான வேலைசெய்வதைப் பார்த்தான். அவன் தன் சொந்த மக்களில் ஒருவனான ஒரு எபிரெயனை ஒரு எகிப்தியன் அடிப்பதையும் கண்டான். அவன் இங்கும் அங்கும் சுற்றி பார்த்துவிட்டு, ஒருவரையும் காணாததினால், அந்த எகிப்தியனைக் கொன்று மணலில் புதைத்துவிட்டான். மோசே மறுநாளும் வெளியே போனபோது, எபிரெயர் இருவர் சண்டையிடுவதைக் கண்டான். அப்பொழுது அவன் தவறு செய்தவனிடம், “நீ உன் சகோதரனான எபிரெயனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு அந்த மனிதன், “எங்களுக்கு மேலாக உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல, என்னையும் கொல்ல நினைக்கிறாயோ?” என்று கேட்டான். மோசே, “நான் செய்தது மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே” என்று அறிந்து பயந்தான். பார்வோன் இதைப்பற்றி கேள்விப்பட்டதும் மோசேயைக் கொலைசெய்ய முயன்றான்; ஆனால் மோசே பார்வோனிடம் இருந்து தப்பியோடி, மீதியானில் வாழும்படி போய், அங்கே ஒரு கிணற்றருகே உட்கார்ந்திருந்தான். மீதியானிலுள்ள ஒரு ஆசாரியருக்கு ஏழு மகள்கள் இருந்தனர்; அவர்கள் தங்கள் தகப்பனின் மந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும்படி தண்ணீரை எடுத்துத் தொட்டிகளை நிரப்புவதற்காக அங்கே வந்தார்கள். அப்பொழுது சில மேய்ப்பர்கள் அங்கே வந்து அவர்களைத் துரத்தினார்கள். மோசே எழுந்துவந்து, அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய மந்தைக்குத் தண்ணீர் அள்ளிக்கொடுத்தான். அப்பெண்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுயேலிடம் வந்தபோது, அவன் அவர்களிடம், “ஏன் இன்றைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “எகிப்தியன் ஒருவன் எங்களை மேய்ப்பரிடமிருந்து காப்பாற்றினான்; அவன் எங்களுக்காகத் தண்ணீரும் அள்ளி, எங்கள் மந்தைக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்றார்கள். அப்பொழுது அவன் தன் மகள்களிடம், “அவன் எங்கே? ஏன் அவனை விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று கேட்டு, “ஏதாவது சாப்பிடும்படி அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான். மோசே அந்த மனிதனுடன் தங்கியிருப்பதற்குச் சம்மதித்தான்; சிறிது காலத்தின்பின் அவன் தன் மகள் சிப்போராளை மோசேக்கு திருமணம் செய்துகொடுத்தான். சிப்போராள் ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது மோசே, “நான் வேற்று நாட்டில் பிறநாட்டினனாய் இருக்கிறேன்” என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.

யாத்திராகமம் 2:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான். அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள். அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள். அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள். அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள். மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான். அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான். மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள். அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான். அதற்கு அவர்கள்: “எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள். அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான். மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான். அவள் ஒரு மகனைப் பெற்றாள். “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்” என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.

யாத்திராகமம் 2:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான். அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக் கண்டு அதை மூன்று மாதங்கள் மறைத்து வைத்தாள். அது ஆணாக இருந்ததால், அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுமோ என்று தாய் பயந்தாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு கூடையைச் செய்து, அது மிதக்கும்படியாக கீல் பூசி, குழந்தையை அக்கூடையில் வைத்து, நதியில் உயரமான புற்களிடையே கூடையை மிதக்கவிட்டாள். குழந்தையின் சகோதரி அங்கு நின்று நடப்பதைக் கவனித்தாள். குழந்தைக்கு நிகழப்போவதைப் பார்க்க விரும்பினாள். அப்போதுதான் பார்வோனின் குமாரத்தி குளிப்பதற்காக நதிக்கு வந்தாள். உயர்ந்த புற்களிடையே இருந்த கூடையை அவள் கண்டாள். நதியருகே அவளது வேலைக்காரிகள் நடந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் கூடையை எடுத்து வருமாறு அவள் கூறினாள். ராஜாவின் குமாரத்தி கூடையைத் திறந்து அதில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அவள் அதற்காக மனமிரங்கினாள். அது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று என்பதை அவள் அறிந்தாள். அங்கே நின்றுகொண்டிருந்த குழந்தையின் சகோதரி ராஜாவின் குமாரத்தியை நோக்கி, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா?” என்றாள். ராஜாவின் குமாரத்தியும், “தயவு செய்து அவ்வாறே செய்” என்றாள். எனவே அப்பெண் சென்று, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். ராஜாவின் குமாரத்தி அத்தாயை நோக்கி, “குழந்தையை எடுத்து எனக்காக அதற்குப் பாலூட்டு. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உனக்குப் பணம் கொடுப்பேன்” என்றாள். எனவே, அப்பெண் குழந்தையை எடுத்துச் சென்று, அதனை வளர்த்தாள். குழந்தை வளர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு, அவள் அக்குழந்தையை ராஜாவின் குமாரத்தியிடம் கொடுத்தாள். ராஜாவின் குமாரத்தி குழந்தையைத் தன் சொந்த குமாரனாகவே ஏற்றுக்கொண்டாள். அக்குழந்தையை தண்ணீரிலிருந்து எடுத்ததால் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள். மோசே வளர்ந்து, பெரியவனானான். அவனது சொந்த ஜனங்களாகிய எபிரெயர்கள் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டான். ஒரு நாள் ஒரு எபிரெய மனிதனை, எகிப்திய மனிதன் ஒருவன் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். மோசே சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைக் கண்டான். பின் மோசே, எகிப்தியனைக் கொன்று, அவனை மண்ணில் புதைத்தான். மறுநாள் இரண்டு எபிரெய மனிதர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையும், அவர்களில் ஒருவன் செய்தது தவறாயிருப்பதையும் மோசே பார்த்தான். மோசே அம்மனிதனை நோக்கி, “நீ ஏன் உனது அயலானை அடிக்கிறாய்?” என்று கேட்டான். அம்மனிதன் அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் இருக்கும்படியாக உன்னிடம் யாராவது கூறினார்களா? நீ எகிப்தியனை நேற்று கொன்றதுபோல என்னையும் கொல்லப் போகிறாயா?” என்றான். இதைக் கேட்டு மோசே அஞ்சினான். மோசே தனக்குள், “நான் செய்ததை எல்லோரும் இப்போது அறிந்திருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டான். மோசே செய்ததைக் குறித்து பார்வோன் கேள்விப்பட்டு, அவன் மோசேயைக் கொல்ல முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து மோசே தப்பி ஓடி, மீதியான் தேசத்திற்குச் சென்றான். மீதியானின் ஒரு கிணற்றருகே மோசே நின்றான். ஏழு பெண்களைப் பெற்ற ஒரு ஆசாரியன் மீதியானில் இருந்தான். அப்பெண்கள் வந்து தம்முடைய தந்தையின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படிக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்த சில மேய்ப்பர்கள் அப்பெண்களைத் துரத்தி, அவர்கள் தண்ணீர் இறைக்க முடியாதபடி செய்தனர். மோசே அப்பெண்களுக்கு உதவி, அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்தான். பின் அப்பெண்கள் தங்கள் தந்தையாகிய ரெகுவேலிடம் சென்றனர். அவர்கள் தந்தை அவர்களிடம், “இன்று சீக்கிரமாக வந்துவிட்டீர்களே!” என்று கேட்டான். அப்பெண்கள், “மேய்ப்பர்கள் எங்களைத் துரத்திவிட முயன்றதால் ஒரு எகிப்திய மனிதன் எங்களுக்கு உதவினான். அவன் எங்களுக்கும் எங்கள் ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்று பதில் சொன்னார்கள். எனவே, ரெகுவேல் அவனது பெண்களை நோக்கி, “அம்மனிதன் எங்கே? ஏன் அவனை விட்டு வந்தீர்கள்? அவனை அழையுங்கள், அவன் நம்மோடு சாப்பிடட்டும்” என்றான். மோசே அம்மனிதனோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தான். ரெகுவேல், தனது குமாரத்தியாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து வைத்தான். சிப்போராள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். மோசே அவனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டான். தனக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியனாக இருந்தமையால் மோசே அவனுக்கு இப்பெயரை வைத்தான்.

யாத்திராகமம் 2:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள். அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான். அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள். அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள். அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து, அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம் பண்ணும்படிக்கு அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான். மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்