யாத்திராகமம் 19:3-6

யாத்திராகமம் 19:3-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது மோசே மேலே ஏறி இறைவனிடம் போனான். மலையிலிருந்து யெகோவா அவனைக் கூப்பிட்டுச் சொன்னதாவது: “யாக்கோபின் குடும்பத்தாருக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் நீ சொல்லவேண்டியது இதுவே: ‘நான் எகிப்திற்குச் செய்தவற்றை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். கழுகு தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்மேல் சுமந்து வருவதுபோல், நானும் உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொண்டதையும் நீங்களே கண்டிருக்கிறீர்கள். ஆகையால் இப்பொழுது நீங்கள் எனக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, என் உடன்படிக்கையை கைக்கொண்டால், எல்லா நாட்டினருக்குள்ளும் நீங்களே எனது அரும்பெரும் செல்வமாய் இருப்பீர்கள். பூமி முழுவதும் என்னுடையதாயிருந்தாலும் கூட, நீங்களோ எனக்கான ஒரு ஆசாரியர்களின் அரசாகவும், ஒரு பரிசுத்த ஜனமாகவும் இருப்பீர்கள்.’ இஸ்ரயேலரோடு நீ பேசவேண்டிய வார்த்தைகள் இவையே” என்றார்.

யாத்திராகமம் 19:3-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார்.

யாத்திராகமம் 19:3-6 பரிசுத்த பைபிள் (TAERV)

பின் மோசே தேவனைச் சந்திக்கும்பொருட்டு மலைமீது ஏறினான். மலையின் மேல் தேவன் அவனோடு பேசினார். அவனிடம், “யாக்கோபின் பெரிய குடும்பத்தினராகிய இஸ்ரவேலின் ஜனங்களுக்கு இவ்விஷயங்களைக் கூறு: ‘என் எதிரிகளுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்த்தீர்கள். எகிப்தின் ஜனங்களுக்கு நான் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். கழுகைப்போல நான் உங்களை எகிப்திலிருந்து சுமந்து வந்து, இங்கு என்னிடம் அழைத்து வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். எனவே என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென உங்களுக்குக் கூறுகிறேன். எனது உடன்படிக்கையை மீறாதீர்கள். நான் கூறுகிறபடி நீங்கள் நடந்தால், என் விசேஷமான ஜனங்களாயிருப்பீர்கள். உலகம் முழுவதும் எனக்குச் சொந்தமானது. ஆனால் எனது விசேஷ ஜனங்களாக இருக்கும்படி, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். ராஜரீக ஆசாரிய கூட்டமான, ஒரு பரிசுத்த ஜனமாக நீங்கள் இருப்பீர்கள்.’ மோசே, நான் கூறியதை நீ இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.

யாத்திராகமம் 19:3-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.