யாத்திராகமம் 19:1-25

யாத்திராகமம் 19:1-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வெளியேறிய மூன்றாம் மாதம் முடிந்த அதே நாளில், அவர்கள் சீனாய் பாலைவனத்தை வந்தடைந்தார்கள். ரெவிதீமைவிட்டுப் புறப்பட்டபின் அவர்கள் சீனாய் பாலைவனத்துக்குள் வந்தார்கள். இஸ்ரயேலர் மலைக்கு முன்பாக உள்ள அந்த பாலைவனத்தில் முகாமிட்டார்கள். அப்பொழுது மோசே மேலே ஏறி இறைவனிடம் போனான். மலையிலிருந்து யெகோவா அவனைக் கூப்பிட்டுச் சொன்னதாவது: “யாக்கோபின் குடும்பத்தாருக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் நீ சொல்லவேண்டியது இதுவே: ‘நான் எகிப்திற்குச் செய்தவற்றை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். கழுகு தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்மேல் சுமந்து வருவதுபோல், நானும் உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொண்டதையும் நீங்களே கண்டிருக்கிறீர்கள். ஆகையால் இப்பொழுது நீங்கள் எனக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, என் உடன்படிக்கையை கைக்கொண்டால், எல்லா நாட்டினருக்குள்ளும் நீங்களே எனது அரும்பெரும் செல்வமாய் இருப்பீர்கள். பூமி முழுவதும் என்னுடையதாயிருந்தாலும் கூட, நீங்களோ எனக்கான ஒரு ஆசாரியர்களின் அரசாகவும், ஒரு பரிசுத்த ஜனமாகவும் இருப்பீர்கள்.’ இஸ்ரயேலரோடு நீ பேசவேண்டிய வார்த்தைகள் இவையே” என்றார். எனவே மோசே திரும்பிப்போய் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களை வரவழைத்தான். யெகோவா அவர்களுக்குச் சொல்லும்படி அவனுக்குக் கட்டளையிட்ட எல்லா வார்த்தைகளையும் அவர்கள் முன்னிலையில் எடுத்துச்சொன்னான். அப்பொழுது அதைக்கேட்ட மக்களெல்லோரும் ஒருமித்து, “யெகோவா கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்று பதிலளித்தார்கள். மோசே யெகோவாவினிடத்திற்குத் திரும்பிப்போய் அவர்களுடைய பதிலை அவருக்கு அறிவித்தான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்டு, அவர்கள் எப்போதும் உன்மேல் நம்பிக்கை வைக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வரப்போகிறேன்” என்றார். மக்கள் சொன்னவற்றை மோசே யெகோவாவுக்குச் சொன்னான். பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம்போய், இன்றும் நாளையும் அவர்களை பரிசுத்தப்படுத்து. அவர்கள் தங்கள் உடைகளைக் கழுவும்படியும் செய்யவேண்டும். அவர்கள் மூன்றாம் நாளில் ஆயத்தமாயிருக்கும்படி செய்யவேண்டும். ஏனெனில், அன்று மக்கள் அனைவரின் கண்கள் முன்பாக யெகோவா சீனாய் மலையின்மேல் இறங்குவார். மலையை அணுகாதவாறு அதைச் சுற்றி ஒரு எல்லையைப் போட்டு, அவர்களிடம், ‘நீங்கள் மலைக்கு ஏறிப்போகாமலும், அதன் அடிவாரத்தைத் தொடாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும். அப்படி மீறுகிறவனை கைகளால் தாக்காமல் கல்லால் எறிந்தோ, அம்புகளால் எய்தோ அவனைக் கொல்லவேண்டும். இதை மீறுகிற மிருகத்தையோ, மனிதனையோ உயிரோடிருக்க அனுமதிக்கக் கூடாது’ என்று சொல். செம்மறியாட்டுக் கடாவின் கொம்பு வாத்தியத்தால் நீண்ட சத்தம் எழுப்பப்படும்போது மாத்திரமே, அவர்கள் மலைக்குப் போகலாம்” என்றார். மோசே மலையிலிருந்து இறங்கி இஸ்ரயேல் மக்களிடம் வந்து, அவர்களை பரிசுத்தப்படுத்தினான். அவர்களும் தங்கள் உடைகளைக் கழுவினார்கள். அதன்பின் மோசே மக்களிடம், “மூன்றாம் நாளுக்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பாலுறவுகளிலிருந்து விலகியிருங்கள்” என்றான். மூன்றாம் நாள் காலையில் இடிமுழக்கமும், மின்னலும் உண்டாகி, மலையைக் கார்மேகம் மூடியது. பலமாய் எக்காள சத்தம் தொனித்தது. முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள். அப்பொழுது மோசே இறைவனைச் சந்திக்கும்படி, மக்களை முகாமுக்கு வெளியே கொண்டுவந்தான். அவர்கள் மலையடிவாரத்தில் நின்றார்கள். யெகோவா சீனாய் மலையின்மேல் அக்கினியில் இறங்கியபடியால், மலை முழுவதும் புகையால் மூடப்பட்டிருந்தது. சூளையிலிருந்து புகை எழும்பியதுபோல் அப்புகை எழும்பிற்று. மலை முழுவதும் பலமாய் அதிர்ந்தது. எக்காள சத்தம் மேன்மேலும் பலமாய்த் தொனித்தது. அப்போது மோசே பேசினான். இறைவனின் குரல் அவனுக்குப் பதிலளித்தது. யெகோவா சீனாய் மலை உச்சியில் இறங்கி, மோசேயை அந்த மலை உச்சிக்கு வரும்படி அழைத்தார். அப்படியே மோசே மேலே ஏறிப்போனான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “யெகோவாவைப் பார்க்கும்படி எல்லையைத் தாண்டி மக்கள் வந்து, அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கு, நீ கீழே இறங்கிப்போய் அவர்களை எச்சரிக்கை செய்யவேண்டும். யெகோவாவுக்கு அருகே வரும் ஆசாரியரும் தங்களை பரிசுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில் யெகோவா அவர்களையும் அழித்துவிடுவார்” என்றார். அப்பொழுது மோசே யெகோவாவிடம், “மக்களால் சீனாய் மலைக்கு ஏறி வரமுடியாது. ஏனெனில் மலையைச் சுற்றி எல்லை போட்டு அதைப் பரிசுத்தப்படுத்தி பிரித்து வைக்கவேண்டும் என்று நீரே எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறீர்” என்றான். அதற்கு யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நீ இறங்கிப்போய் ஆரோனை அழைத்துக்கொண்டு மேலே ஏறி வா. ஆனால் ஆசாரியரும், மக்களும் பலவந்தமாய் எல்லையைக் கடந்து யெகோவாவிடம் மேலே வரக்கூடாது. வந்தால் யெகோவா அவர்களை அழித்துவிடுவார்” என்றார். அவ்வாறே மோசே இறங்கி மக்களிடம்போய் யெகோவா கட்டளையிட்டவைகளைச் சொன்னான்.

யாத்திராகமம் 19:1-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள். மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார். மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, யெகோவா தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான். அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவிடம் தெரிவித்தான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவுக்குச் சொன்னான். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து, மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் யெகோவா எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார். மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்” என்றார். மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள். அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான். மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள். அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றார். அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள்” என்றான். யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார். அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

யாத்திராகமம் 19:1-25 பரிசுத்த பைபிள் (TAERV)

எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர். அவர்கள் ரெவிதீமிலிருந்து சீனாய் பாலை வனத்திற்குப் பிரயாணம் செய்திருந்தனர். மலைக்கருகே (ஓரேப் மலை) இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரமிட்டனர். பின் மோசே தேவனைச் சந்திக்கும்பொருட்டு மலைமீது ஏறினான். மலையின் மேல் தேவன் அவனோடு பேசினார். அவனிடம், “யாக்கோபின் பெரிய குடும்பத்தினராகிய இஸ்ரவேலின் ஜனங்களுக்கு இவ்விஷயங்களைக் கூறு: ‘என் எதிரிகளுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்த்தீர்கள். எகிப்தின் ஜனங்களுக்கு நான் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். கழுகைப்போல நான் உங்களை எகிப்திலிருந்து சுமந்து வந்து, இங்கு என்னிடம் அழைத்து வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். எனவே என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென உங்களுக்குக் கூறுகிறேன். எனது உடன்படிக்கையை மீறாதீர்கள். நான் கூறுகிறபடி நீங்கள் நடந்தால், என் விசேஷமான ஜனங்களாயிருப்பீர்கள். உலகம் முழுவதும் எனக்குச் சொந்தமானது. ஆனால் எனது விசேஷ ஜனங்களாக இருக்கும்படி, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். ராஜரீக ஆசாரிய கூட்டமான, ஒரு பரிசுத்த ஜனமாக நீங்கள் இருப்பீர்கள்.’ மோசே, நான் கூறியதை நீ இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்றார். மோசே மலையிருந்து கீழே இறங்கினான். ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்கள்) வரவழைத்து அவர்களிடம் கூறும்படியாக கர்த்தர் கட்டளையிட்டவற்றை மோசே கூறினான். எல்லா ஜனங்களும் சேர்ந்து ஒரே குரலில், “கர்த்தர் கூறுகின்றவற்றிற்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள். மோசே மீண்டும் மலையின் மேலேறி தேவனிடம் சென்றான். மோசே தேவனிடம் ஜனங்கள் அவருக்குக் கீழ்ப்படிவதாகக் கூறியதைச் சொன்னான். கர்த்தர் மோசேயிடம், “கார்மேகத்தினூடே நான் உன்னிடம் வருவேன், உன்னோடு பேசுவேன்! நான் உன்னோடு பேசுவதை எல்லா ஜனங்களும் கேட்பார்கள். நீ அவர்களுக்குக் கூறுவதை ஜனங்கள் எப்போதும் நம்புவதற்காக நான் இதைச் செய்வேன்” என்றார். ஜனங்கள் கூறிய அனைத்தையும் மோசே தேவனுக்குச் சொன்னான். கர்த்தர் மோசேயை நோக்கி, “ஒரு விசேஷ கூட்டத்திற்காக இன்றும், நாளையும் நீ ஜனங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். ஜனங்கள் அவர்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். மூன்றாம் நாளில் எனக்காகக் காத்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் கர்த்தர் சீனாய் மலைக்கு இறங்கி வருவார், எல்லா ஜனங்களும் என்னைக் காண்பார்கள். எல்லா ஜனங்களும் மலையை நெருங்காதிருக்கும்படி அவர்களுக்கு நீ கூறவேண்டும். ஒரு எல்லையை வரைந்து, ஜனங்கள் அதைத் தாண்டிச் செல்லாதபடி பார்த்துக்கொள். மலையைத் தொடும் மனிதனோ, மிருகமோ கொல்லப்பட வேண்டும். அவனைக் கற்களால் தாக்கியோ, அம்புகளை எய்தோ கொல்ல வேண்டும். கொல்லப்பட்டவனைப் பிறர் தொடக்கூடாது. எக்காளம் தொனிக்கும் வரைக்கும் ஜனங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மலைக்கு சமீபம் செல்லலாம்” என்றார். மோசே மலையை விட்டிறங்கி, ஜனங்களிடம் சென்று, விசேஷ கூட்டத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து பரிசுத்தமாக்கினார்கள். மோசே ஜனங்களை நோக்கி, “மூன்று நாட்களில் தேவனைத் தரிசிப்பதற்குத் தயாராகுங்கள். அதுவரைக்கும் ஆண்கள், பெண்களைத் தொடக்கூடாது” என்றான். மூன்றாம் நாள் காலையில், மலையின் மேல் மேகமொன்று திரண்டு வந்தது. இடியும் மின்னலும் எக்காளத்தின் பேரொலியும் இருந்தன. கூடாரத்திலிருந்த ஜனங்கள் அனைவரும் பயந்தனர். அப்போது மோசே, ஜனங்களைக் கூடாரத்திலிருந்து மலையருகேயுள்ள ஓரிடத்திற்கு தேவனைச் சந்திப்பதற்காக வழிநடத்திச் சென்றான். சீனாய் மலை புகையால் நிரம்பிற்று. சூளையிலிருந்து புகை வருவதுபோல் மலையின் மேல் புகை எழுந்தது. கர்த்தர் மலைக்கு நெருப்பில் இறங்கி வந்ததால் இப்படி ஆயிற்று. மலையும் அதிரத்தொடங்கிற்று. எக்காள சத்தம் உரத்து தொனிக்க ஆரம்பித்தது. மோசே தேவனிடம் பேசியபோதெல்லாம், தேவன் இடிபோன்ற குரலில் பதிலளித்தார். கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்கினார். பரலோகத்திலிருந்து கர்த்தர் மலையின் உச்சியில் இறங்கினார். பின் கர்த்தர் மோசேயை மலையின் உச்சிக்கு தன்னிடத்தில் வருமாறு கூறினார். அவ்வாறே மோசேயும் மலையின் மீது ஏறினான். கர்த்தர், மோசேயை நோக்கி, “ஜனங்கள் என்னைப் பார்கும்படி நெருங்கிவராதபடி அவர்களை எச்சரி. இதை மீறினால் அவர்களில் பலர் மரிக்க நேரிடும். என்னிடம் வர வேண்டிய ஆசாரியர்களை இந்த சிறப்புச் சந்திப்புக்கு ஆயத்தமாகி வரும்படி கூறு. அவர்கள் சரியான ஆயத்தம் செய்யவில்லையென்றால், நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார். மோசே கர்த்தரை நோக்கி, “ஜனங்கள் மலை உச்சிக்கு வரமுடியாது. பரிசுத்த எல்லையை நெருங்காதபடி செய்யுமாறு நீர் தானே எங்களிடம் கூறியுள்ளீர்” என்றான். கர்த்தர் அவனிடம், “ஜனங்களிடம் இறங்கிச் செல். ஆரோனை உன்னோடு அழைத்து வா, ஆசாரியர்களோ, ஜனங்களோ என்னை அணுகவிடாதே. அவர்கள் என்னை நெருங்கினால் நான் அவர்களை தண்டிப்பேன்” என்றார். எனவே மோசே ஜனங்களிடம் போய் இச்செய்தியைக் கூறினான்.

யாத்திராகமம் 19:1-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள். மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார். மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான். அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து. மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார். ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். ஒரு கையும் அதைத்தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார். மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள். அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான். மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள். அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார். அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.