யாத்திராகமம் 16:1-7

யாத்திராகமம் 16:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன் பின்னர் முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஏலிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய இரண்டாம் மாதம் பதினைந்தாம்நாள் ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையேயுள்ள சீன் பாலைவனத்தை வந்தடைந்தார்கள். அப்பாலைவனத்திலே இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். இஸ்ரயேலர் அவர்களிடம், “நாங்கள் யெகோவாவின் கையால் எகிப்திலே இறந்திருக்கலாமே! நாங்களோ அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து, விரும்பிய உணவையெல்லாம் சாப்பிட்டோம்; ஆனால் நீங்கள், இந்த முழு மக்கள் கூட்டமும் பட்டினியாய்ச் சாகும்படி இந்தப் பாலைவனத்திற்குள் எங்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்றார்கள். அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொரு நாளும் வெளியே போய் அந்நாளுக்குப் போதுமானதைச் சேர்க்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன். ஆறாம்நாளிலோ, மற்றநாட்களில் சேர்ப்பதுபோல் இருமடங்கு சேர்க்கவேண்டும். அந்த நாளிலே அவர்கள் எடுத்துவந்ததைத் தயாரித்து வைக்கவேண்டும்” என்றார். ஆகவே, மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலரிடம், “யெகோவாவே உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்பதை இன்று மாலையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள், காலையிலோ யெகோவாவின் மகிமையைக் காண்பீர்கள்; ஏனெனில் அவருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்பை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுப்பதற்கு நாங்கள் யார்?” என்றார்கள்.

யாத்திராகமம் 16:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், யெகோவாவின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடம் சொன்னார்கள். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்; அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.

யாத்திராகமம் 16:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். பாலைவனத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “எகிப்து தேசத்தில் கர்த்தர் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீர் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். பசியால் இங்கு நாங்கள் எல்லோரும் செத்துப்போவோம்” என்றனர். அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்கு அது உணவாகும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். இப்படி நான் அவர்களைச் சோதித்து, என் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “இன்றிரவு நீங்கள் கர்த்தரின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கர்த்தரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளைக் காலையில் கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள்.

யாத்திராகமம் 16:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்; விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.