யாத்திராகமம் 14:8-12

யாத்திராகமம் 14:8-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள். பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.

யாத்திராகமம் 14:8-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா எகிப்திய அரசன் பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினபடியால், அவன் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றான். ஆனால் இஸ்ரயேலரோ துணிவுடன் அணிவகுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். எகிப்தியர் பார்வோனின் குதிரைகளோடும், தேர்களோடும், குதிரைவீரர்களோடும், இராணுவப்படைகளோடும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றனர். பாகால் செபோனுக்கு எதிரே, பிகாஈரோத்துக்கு அருகே கடல் பக்கத்தில் இஸ்ரயேலர் முகாமிட்டிருந்தபோது, அவர்களை எகிப்தியர் பின்தொடர்ந்து வந்துசேர்ந்தனர். பார்வோன் நெருங்கி வந்தபொழுது இஸ்ரயேலர் நோக்கிப்பார்த்து, தங்களுக்குப்பின் எகிப்தியர் அணிவகுத்து வருவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் பயந்து, யெகோவாவை நோக்கிக் கதறினார்கள். அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் பிரேதக்குழிகள் இல்லையென்று எங்களைச் சாகும்படி பாலைவனத்திற்குக் கொண்டுவந்தீரோ? எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்து எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்? ‘எங்களைச் சும்மாவிடும்; நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்வோம்’ என்று, நாங்கள் எகிப்திலிருக்கும்போதே உமக்குச் சொல்லவில்லையா? பாலைவனத்தில் நாங்கள் சாகிறதைவிட, எகிப்தியருக்கு வேலை செய்வது நலமாயிருந்திருக்குமே!” என்றார்கள்.

யாத்திராகமம் 14:8-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளுடனும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள். பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: “எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்? நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே” என்றார்கள்.

யாத்திராகமம் 14:8-12 பரிசுத்த பைபிள் (TAERV)

வெற்றிக் களிப்போடு தங்கள் கைகளை உயர்த்தியவர்களாய் இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் எகிப்திய ராஜாவாகிய பார்வோன் தைரியம் கொள்ளும்படியாக கர்த்தர் செய்தார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினான். எகிப்திய படையில் இரதங்களோடு கூடிய பல குதிரை வீரர்கள் இருந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்து அவர்கள் செங்கடலின் அருகேயுள்ள பாகால் செபோனுக்குக் கிழக்கேயிருக்கிற ஈரோத்தில் இருக்கும்போது நெருங்கி வந்தனர். பார்வோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டு மிகவும் பயந்தனர். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினர். அவர்கள் மோசேயை நோக்கி, “நீர் ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? பாலைவனத்தில் சாகும்படியாக ஏன் எங்களை அழைத்துக் கொண்டு வந்தீர்? எகிப்தில் நிம்மதியாக மரித்திருப்போம். எகிப்தில் நிறைய கல்லறைகள் இருந்தன. இவ்வாறு நடக்குமென நாங்கள் உங்களிடம் கூறினோம். எகிப்தில் இருந்தபோது நாங்கள், ‘எங்களைத் தொல்லைப்படுத்தாதீர்கள். நாங்கள் தங்கியிருந்து எகிப்தியருக்கு அடிமை வேலை செய்வோம்’ என்றோம். அங்கிருந்து வெளியேறி பாலைவனத்தில் இங்கு மடிவதைக் காட்டிலும் அங்கு தங்கி அடிமைகளாக இருப்பதே நலமாக இருந்திருக்கும்” என்றனர்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்