யாத்திராகமம் 14:21-31
யாத்திராகமம் 14:21-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு மோசே, கடலின்மேல் தன் கையை நீட்டினான். யெகோவா இரவு முழுவதும் பலத்த கீழ்காற்றினால் கடல்நீரைப் பின்வாங்கச்செய்து, அதை வறண்ட நிலமாக மாற்றினார். தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. இஸ்ரயேலர் கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்து சென்றார்கள். அவர்களுடைய வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல எழுந்து நின்றது. எகிப்தியர் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். பார்வோனின் எல்லா குதிரைகளும், தேர்களும், குதிரைவீரரும், இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து கடலுக்குள் வந்தார்கள். யெகோவா விடியற்காலையில் நெருப்புத்தூணிலும், மேகத்தூணிலுமிருந்து எகிப்திய படையைப் பார்த்து அவர்களைக் கலங்கப்பண்ணினார். யெகோவா அவர்களுடைய தேர்களின் சக்கரங்களைக் கழறப்பண்ணியதால், தேரை ஓட்டுவதற்கு அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. எனவே எகிப்தியர், “நாம் இஸ்ரயேலரைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா எகிப்தை எதிர்த்து அவர்களுக்காகப் போராடுகிறார்” என்றார்கள். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “கடல் தண்ணீர் எகிப்தியர்மேலும் அவர்களுடைய தேர்கள், குதிரைவீரர்மேலும் வரும்படி நீ உன் கையை கடல்மேல் நீட்டு” என்றார். அப்படியே மோசே தன் கையை கடலுக்கு மேலாக நீட்டினான். அதிகாலையில் கடல் தண்ணீர் திரும்பி, அதன் இடத்திற்கு வந்தது. ஆனால் எகிப்தியரோ கடலை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தார்கள். யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திவிட்டார். கடல் தண்ணீர் திரும்பிவந்து, தேர்களையும், குதிரைவீரர்களையும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பார்வோனின் படை முழுவதையும் கடலுக்குள் மூடிவிட்டது. அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. இஸ்ரயேலரோ கடலின் நடுவேயுள்ள காய்ந்த நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள். அவர்களுடைய வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல நின்றது. இவ்விதமாக யெகோவா அன்றையதினம் எகிப்தியரின் கைகளிலிருந்து இஸ்ரயேலரைக் காப்பாற்றினார். கடற்கரையிலே எகிப்தியர் இறந்துகிடப்பதை இஸ்ரயேலர் கண்டார்கள். எகிப்தியருக்கு எதிராகக் காண்பிக்கப்பட்ட யெகோவாவின் வல்லமையை இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும், அவருடைய அடியானாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள்.
யாத்திராகமம் 14:21-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள். காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து, அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: “இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார்” என்றார்கள். யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார். அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார். தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. இப்படியாகக் யெகோவா அந்த நாளிலே இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்தார்; கடற்கரையிலே எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் கண்டார்கள். யெகோவா எகிப்தியர்களில் செய்த அந்த மகத்தான செயல்களை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்; அப்பொழுது மக்கள் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள்.
யாத்திராகமம் 14:21-31 பரிசுத்த பைபிள் (TAERV)
மோசே தனது கரங்களைச் செங்கடலுக்கு நேராக உயர்த்தினான். கர்த்தர் கிழக்கிலிருந்து ஒரு காற்று வீசும்படியாகச் செய்தார். இரவு முழுவதும் காற்று வீசிற்று, கடல் பிளந்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தலையின் மேல் கடலினூடே போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் சுவர்போல் உயர்ந்து நின்றது. அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் இஸ்ரவேலரைப் பின்தொடர ஆரம்பித்தனர். அதிகாலையில் கர்த்தர் உயர்ந்த மேகத்திலிருந்தும், நெருப்புத் தூணிலிருந்தும் எகிப்திய படையை நோக்கிப் பார்த்து அவர்களைத் தோற்கடித்தார். இரதங்களின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன. இரதங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. எகிப்தியர்கள், “இங்கிருந்து தப்பிப் போவோம்! இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் நம்மை எதிர்த்து போர் செய்கிறார்” என்றார்கள். அப்போது கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளைக் கடலுக்கு மேலாக உயர்த்து, தண்ணீர் புரண்டு எகிப்தியரின் இரதங்களையும் குதிரை வீரர்களையும் மூழ்கடிக்கும்” என்றார். எனவே விடிவதற்குச் சற்றுமுன் மோசே கடலுக்கு மேலாகத் தன் கரங்களை உயர்த்தினான். தண்ணீர் முன்புபோல் சமமாக வந்து நின்றது. எகிப்தியர்கள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரிலிருந்து தப்பி ஓட முயன்றார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைக் கடலில் மூழ்கடித்துவிட்டார். தண்ணீர் முன்பு போல் சமமாக வந்ததால் இரதங்களையும், குதிரை வீரர்களையும் மூழ்கடித்து விட்டது. பார்வோனின் படையினர் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினர், ஆனால் அப்படையோ அழிக்கப்பட்டது, ஒருவரும் பிழைக்கவில்லை! இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தரையில் கடலைக் கடந்தனர். அவர்களது வலது, இடது புறங்களில் மாத்திரம் தண்ணீர் சுவரைப்போல நின்றது. எனவே, அந்நாளில் எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் மீட்டார். செங் கடலின் கரையில் எகிப்தியரின் பிணங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டனர். கர்த்தர் எகிப்தியர்களை வென்றபோது, இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மிகுந்த வல்லமையைக் கண்டார்கள். எனவே ஜனங்கள் பயந்து கர்த்தரை மதித்தார்கள். அவர்கள் கர்த்தரையும் அவரது தாசனாகிய மோசேயையும் நம்ப ஆரம்பித்தனர்.
யாத்திராகமம் 14:21-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து, அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார். அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார். ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள். கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.