யாத்திராகமம் 14:1-22

யாத்திராகமம் 14:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான். ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள். அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான். கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள். பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள். எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார். அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

யாத்திராகமம் 14:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீங்கள் திரும்பிவந்து மிக்தோலுக்கும், கடலுக்கும் இடையேயுள்ள பிகாஈரோத் அருகே முகாமிடுங்கள் என்று இஸ்ரயேலருக்குச் சொல். அவர்கள் கடலருகே பாகால் செபோனுக்கு நேரெதிராக முகாமிடவேண்டும். ‘இஸ்ரயேலர் மனங்குழம்பி நாட்டைச் சுற்றி அலைந்து திரிகிறார்கள். பாலைவனம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது’ என்று பார்வோன் நினைப்பான். எனவே, நான் பார்வோனின் மனதைக் கடினப்படுத்துவேன். அவன் உங்களைப் பின்தொடர்ந்து வருவான். நானோ பார்வோனாலும், அவனுடைய படைகள் எல்லாவற்றினாலும் மகிமையடைவேன். அப்பொழுது நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார். இஸ்ரயேலர் அவ்வாறே செய்தார்கள். இஸ்ரயேலர் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்திய அரசன் பார்வோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவனும் அவனுடைய அதிகாரிகளும் இஸ்ரயேலரைக் குறித்து தங்கள் மனங்களை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துவிட்டோம்? இஸ்ரயேலரை போகவிட்டு, அவர்களுடைய வேலையை இழந்துவிட்டோமே!” என்றார்கள். எனவே பார்வோன், தன் தேரை ஆயத்தப்படுத்தி, தன் இராணுவவீரரையும் தன்னுடன் கூட்டிச்சென்றான். அவன் எகிப்திலுள்ள மற்ற எல்லா தேர்களோடு, மிகச்சிறந்த அறுநூறு தேர்களையும் மற்றும் அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு போனான். யெகோவா எகிப்திய அரசன் பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினபடியால், அவன் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றான். ஆனால் இஸ்ரயேலரோ துணிவுடன் அணிவகுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். எகிப்தியர் பார்வோனின் குதிரைகளோடும், தேர்களோடும், குதிரைவீரர்களோடும், இராணுவப்படைகளோடும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றனர். பாகால் செபோனுக்கு எதிரே, பிகாஈரோத்துக்கு அருகே கடல் பக்கத்தில் இஸ்ரயேலர் முகாமிட்டிருந்தபோது, அவர்களை எகிப்தியர் பின்தொடர்ந்து வந்துசேர்ந்தனர். பார்வோன் நெருங்கி வந்தபொழுது இஸ்ரயேலர் நோக்கிப்பார்த்து, தங்களுக்குப்பின் எகிப்தியர் அணிவகுத்து வருவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் பயந்து, யெகோவாவை நோக்கிக் கதறினார்கள். அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் பிரேதக்குழிகள் இல்லையென்று எங்களைச் சாகும்படி பாலைவனத்திற்குக் கொண்டுவந்தீரோ? எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்து எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்? ‘எங்களைச் சும்மாவிடும்; நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்வோம்’ என்று, நாங்கள் எகிப்திலிருக்கும்போதே உமக்குச் சொல்லவில்லையா? பாலைவனத்தில் நாங்கள் சாகிறதைவிட, எகிப்தியருக்கு வேலை செய்வது நலமாயிருந்திருக்குமே!” என்றார்கள். மோசே இஸ்ரயேல் மக்களிடம், “பயப்படாதிருங்கள். உறுதியாய் நில்லுங்கள்; யெகோவா இன்று உங்களுக்குக் கொண்டுவரப்போகும் விடுதலையைக் காண்பீர்கள். நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள். யெகோவா உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் மட்டும் இருங்கள்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ என்னிடம் முறையிட்டு அழுவது ஏன்? இஸ்ரயேலரை முன்னேறிப்போகச்சொல். நீ உன் கோலை உயர்த்தி, தண்ணீரைப் பிரிக்கும்படி கடலின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்து போகக்கூடியதாய் இருக்கும். நான் எகிப்தியரின் உள்ளத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடருவார்கள். நானோ பார்வோனாலும், அவனுடைய எல்லா படைகள், தேர்கள், குதிரைவீரர் முதலியவற்றாலும் மகிமையடைவேன். இப்படியாக நான் பார்வோனாலும், அவன் தேர்கள், குதிரைகளாலும் மகிமையடையும்போது நானே யெகோவா என்பதை எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார். அப்பொழுது இஸ்ரயேலரின் படைக்கு முன்னாகச் சென்றுகொண்டிருந்த இறைவனின் தூதனானவர், அவ்விடத்தைவிட்டு அவர்களுக்குப் பின்னாகப் போனார். அவர்களுக்கு முன்பாக இருந்த மேகத்தூணும் விலகி, அவர்களுக்குப் பின்னாக வந்துநின்றது. அது எகிப்திய படைகளுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் வந்துநின்றது. அந்த மேகம் இரவு முழுவதும் ஒரு பக்கத்துக்கு இருளையும், மற்றொரு பக்கத்துக்கு வெளிச்சத்தையும் கொடுத்தது. இதனால் இஸ்ரயேலரோ, எகிப்தியரோ இரவு முழுவதும் ஒருவரையொருவர் நெருங்கவில்லை. பின்பு மோசே, கடலின்மேல் தன் கையை நீட்டினான். யெகோவா இரவு முழுவதும் பலத்த கீழ்காற்றினால் கடல்நீரைப் பின்வாங்கச்செய்து, அதை வறண்ட நிலமாக மாற்றினார். தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. இஸ்ரயேலர் கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்து சென்றார்கள். அவர்களுடைய வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல எழுந்து நின்றது.

யாத்திராகமம் 14:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயை நோக்கி: “நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் கடலுக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிடவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு; அதற்கு எதிராக கடற்கரையில் முகாமிடுங்கள். அப்பொழுது பார்வோன் இஸ்ரவேலர்களைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்திரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான். ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவிற்கு அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவனுடைய ஊழியக்காரர்களும் மனம் மாறி: “நமக்கு வேலை செய்யாதபடி நாம் இஸ்ரவேலர்களைப் போகவிட்டது என்ன காரியம்” என்றார்கள். அவன் தன்னுடைய இரதத்தைப் பூட்டி, தன்னுடைய மக்களைக் கூட்டிக்கொண்டு, முதல்தரமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற எல்லா இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான். யெகோவா எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளுடனும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள். பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: “எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்? நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே” என்றார்கள். அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ என்னிடம் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு. நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள். எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார். அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகத்தூணிலும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது.

யாத்திராகமம் 14:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “ஜனங்களிடம் ஈரோத்துக்கு திரும்பிப் போகும்படியாகக் கூறு. பாகால் செபோனுக்கு அருகேயுள்ள மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்கள் இரவில் தங்கட்டும். இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் காணாமற்போனார்கள் என்று பார்வோன் எண்ணுவான். ஜனங்களுக்குப் போகத்தக்க இடம் எதுவுமில்லை என்று அவன் நினைப்பான். பார்வோனுக்குத் தைரியம் தந்து, அவன் உங்களைத் துரத்தும்படியாகச் செய்வேன். ஆனால் நான் பார்வோனையும் அவனது சேனையையும் தோற்கடிப்பேன். அது எனக்கு கனத்தைக் கொண்டுவரும். அப்போது எகிப்திய ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்” என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர் கூறினபடியே அவர்கள் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி பார்வோனுக்குக் கிடைத்தது. இதைக் கேட்டபோது அவனும், அவனது அதிகாரிகளும் மனம்மாறி முன்பு செய்த தங்கள் செயல்களை மறு பரிசீலனை செய்தனர். பார்வோன், “இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு ஏன் அனுமதித்தோம்? அவர்கள் ஓடிப்போவதற்கு ஏன் வகை செய்தோம்? இப்போது நாம் நமது அடிமைகளை இழந்துபோனோம்!” என்றான். எனவே, பார்வோன் தனது ஆட்களோடு தேரையும் தயார்ப்படுத்தினான். பார்வோன் அவனது சிறந்த 600 ஆட்களையும், அவனது இரதங்கள் அனைத்தையும் கூட்டிச் சென்றான். ஒவ்வொரு தேரிலும் ஒரு அதிகாரி இருந்தான். வெற்றிக் களிப்போடு தங்கள் கைகளை உயர்த்தியவர்களாய் இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் எகிப்திய ராஜாவாகிய பார்வோன் தைரியம் கொள்ளும்படியாக கர்த்தர் செய்தார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினான். எகிப்திய படையில் இரதங்களோடு கூடிய பல குதிரை வீரர்கள் இருந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்து அவர்கள் செங்கடலின் அருகேயுள்ள பாகால் செபோனுக்குக் கிழக்கேயிருக்கிற ஈரோத்தில் இருக்கும்போது நெருங்கி வந்தனர். பார்வோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டு மிகவும் பயந்தனர். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினர். அவர்கள் மோசேயை நோக்கி, “நீர் ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? பாலைவனத்தில் சாகும்படியாக ஏன் எங்களை அழைத்துக் கொண்டு வந்தீர்? எகிப்தில் நிம்மதியாக மரித்திருப்போம். எகிப்தில் நிறைய கல்லறைகள் இருந்தன. இவ்வாறு நடக்குமென நாங்கள் உங்களிடம் கூறினோம். எகிப்தில் இருந்தபோது நாங்கள், ‘எங்களைத் தொல்லைப்படுத்தாதீர்கள். நாங்கள் தங்கியிருந்து எகிப்தியருக்கு அடிமை வேலை செய்வோம்’ என்றோம். அங்கிருந்து வெளியேறி பாலைவனத்தில் இங்கு மடிவதைக் காட்டிலும் அங்கு தங்கி அடிமைகளாக இருப்பதே நலமாக இருந்திருக்கும்” என்றனர். ஆனால் மோசே, “பயப்படாதீர்கள்! ஓடிப் போகாதீர்கள்! சும்மா இருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்! நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்” என்றான். கர்த்தர் மோசேயை நோக்கி, “ஏன் இன்னும் நீ என்னிடம் அழுகிறாய்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடருமாறு கூறு. செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் பிளக்கும். அப்போது ஜனங்கள் அதிலுள்ள உலர்ந்த தரை வழியே நடந்து செல்லலாம். உங்களைத் துரத்தும்படியாக நானே எகிப்தியருக்குத் தைரியம் அளித்தேன். ஆனால் நானே பார்வோனையும், அவனது குதிரைகள் இரதங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவர் என்று உணரச் செய்வேன். அப்போது எகிப்தியர் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். பார்வோனையும் அவனது இரதம் குதிரை வீரர்களையும் நான் மேற்கொள்ளும்போது அவர்கள் என்னை மதிப்பார்கள்” என்றார். அப்போது கர்த்தருடைய தூதன் ஜனங்களுக்குப் பின்னாகப் போனான். (கர்த்தருடைய தூதன் எப்போதும் ஜனங்களுக்கு முன்னே, அவர்களை வழிநடத்தியபடியே சென்று கொண்டிருந்தான்). அந்த உயரமான மேகம் ஜனங்களுக்கு முன்னே செல்லாமல் அவர்களுக்கு பின்னே சென்றது. இவ்வாறு அம்மேகம் எகிப்தியருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே சென்று நின்றது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிச்சம் இருந்தது. ஆனால் எகிப்தியர்களையோ இருள் சூழ்ந்தது. எனவே அந்த இரவில் எகிப்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கிவர முடியவில்லை. மோசே தனது கரங்களைச் செங்கடலுக்கு நேராக உயர்த்தினான். கர்த்தர் கிழக்கிலிருந்து ஒரு காற்று வீசும்படியாகச் செய்தார். இரவு முழுவதும் காற்று வீசிற்று, கடல் பிளந்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தலையின் மேல் கடலினூடே போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் சுவர்போல் உயர்ந்து நின்றது.