யாத்திராகமம் 13:1-10
யாத்திராகமம் 13:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம், “முதற்பேறான எல்லா ஆண்களையும் எனக்கு அர்ப்பணம் செய்யவேண்டும். எந்த மனிதனானாலும், மிருகமானாலும் இஸ்ரயேலருக்குள் கர்ப்பத்திலிருந்து வரும் ஒவ்வொரு முதற்பேறும் எனக்குரியது” என்றார். பின்பு மோசே இஸ்ரயேல் மக்களிடம் சொன்னதாவது, “நீங்கள் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியேவந்த இந்த நாளை நினைவுபடுத்திக் கொண்டாடுங்கள். ஏனெனில் யெகோவா தமது வல்லமையான கரத்தினால் அவ்விடத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்தார். புளிப்பூட்டப்பட்ட எதையும் சாப்பிடவேண்டாம். இன்று ஆபீப் மாதத்தில் நீங்கள் புறப்படுகிறீர்கள். யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என வாக்குப்பண்ணிய, பாலும் தேனும் வழிந்தோடும் செழிப்பான நாடான கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய நாட்டுக்கு யெகோவா உங்களைக் கொண்டுவருவார். அப்போது இந்தப் பண்டிகையை வருடந்தோறும் இதே மாதத்தில் நீங்கள் கொண்டாடவேண்டும். புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்குச் சாப்பிட்டு, ஏழாவதுநாள் யெகோவாவுக்கு பண்டிகையைக் கொண்டாடுவீர்களாக. ஏழுநாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்; உங்கள் வீட்டிலோ அல்லது நாட்டின் எல்லைக்குள்ளோ புளித்தது எதுவும் காணப்படக்கூடாது. அன்றையதினம் நீங்கள் உங்கள் மகன்களிடம், ‘நான் எகிப்திலிருந்து வந்தபோது யெகோவா எனக்குச் செய்தற்காகவே இதைச் செய்கிறேன்’ என்று சொல்லுங்கள். யெகோவாவின் சட்டம் உங்கள் வாயில் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த கொண்டாட்டம் உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும். ஏனெனில், யெகோவா தன் பலத்த கரத்தால் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். ஆதலால் நீங்கள் வருடந்தோறும், குறித்த காலத்தில் இந்த நியமத்தைக் கைக்கொள்ளவேண்டும்.
யாத்திராகமம் 13:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார். அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம். ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். ஆகையால், யெகோவா உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும். அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும்.
யாத்திராகமம் 13:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார். அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது. ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்கு கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ளவேண்டும். “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும். எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது. இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும். “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும். எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள்.
யாத்திராகமம் 13:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம். ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக. அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை ஆசரித்து வருவாயாக.