யாத்திராகமம் 12:5-13
யாத்திராகமம் 12:5-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீ தெரிந்தெடுக்கும் மிருகங்களோ, ஒரு வயதுடைய பழுதற்ற கடாக்களாக இருக்கவேண்டும். இவற்றைச் செம்மறியாடுகளிலிருந்தோ, வெள்ளாடுகளிலிருந்தோ தெரிந்தெடுக்கலாம். அவற்றை மாதத்தின் பதினான்காம் தேதிவரை, வீட்டில் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பின்பு இஸ்ரயேல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் தங்கள் ஆட்டுக்குட்டியை சாயங்கால வேளையில் கொல்லவேண்டும். அதன்பின் அவர்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை சாப்பிடும் வீட்டுக்கதவின் நிலைக்கால் இரண்டிலும், மேற்சட்டத்திலும் பூசவேண்டும். அன்று இரவு இறைச்சியை நெருப்பில் சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிடவேண்டும். இறைச்சியைப் பச்சையாகவோ அல்லது நீரில் சமைத்தோ சாப்பிடக்கூடாது. அதன் தலை, கால்கள், உள் உறுப்புகள் ஆகிய எல்லாவற்றையும் நெருப்பில் சுட்டே சாப்பிடவேண்டும். அவற்றில் எதையும் விடியும்வரை மீதியாக வைக்கவேண்டாம்; காலையில் ஏதும் மிஞ்சியிருந்தால் அவற்றை நெருப்பில் எரிக்கவேண்டும். இவ்விதமாகவே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும்: உங்கள் அங்கிகளை இடுப்புப்பட்டியால் கட்டிக்கொண்டு, கால்களில் செருப்புகளைப் போட்டுக்கொண்டு, உங்கள் கோலை உங்கள் கையில் பிடித்தபடி, அதை அவசரமாக சாப்பிடவேண்டும். இதுவே யெகோவாவின் கடந்துசெல்லுதல், யெகோவாவின் பஸ்கா. “அதே இரவில் நான் எகிப்து வழியாகக் கடந்துசென்று, அங்குள்ள மனிதர் மற்றும் மிருகங்களின் தலையீற்றுகளையும் சாகடிப்பேன். எகிப்திய தெய்வங்கள் எல்லாவற்றின் மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே யெகோவா. இந்த இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளின்மேல் உங்களுக்கான ஒரு அடையாளமாயிருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்தியரைச் சாகடிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொடமாட்டாது.
யாத்திராகமம் 12:5-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம். அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள எல்லாவற்றையும் ஒன்றாக நெருப்பினால் சுட்டதாக அதைச் சாப்பிடுங்கள். அதிலே ஒன்றையும் காலைவரை மீதியாக வைக்காமல், காலைவரை அதிலே மீதியாக இருப்பதை அக்கினியால் சுட்டெரியுங்கள். அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா. அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே யெகோவா. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும்.
யாத்திராகமம் 12:5-13 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம். மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும். நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும். “இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும். ஆட்டுக்குட்டியை நீங்கள் தண்ணீரில் வேக வைக்கக்கூடாது. அந்த ஆட்டுக்குட்டி முழுவதையும் நெருப்பினால் சுடவேண்டும். அதன் தலை, கால்கள் மற்றும் உள் உறுப்புக்கள் எல்லாம் இருக்க வேண்டும். அந்த இரவுக்குள் நீங்கள் மாமிசம் முழுவதையும் சாப்பிட்டு முடிக்கவேண்டும். காலையில் மாமிசம் மீதியாயிருந்தால் நெருப்பில் அந்த மாமிசத்தை சுட்டு எரிக்கவேண்டும். “நீங்கள் உணவைச் சாப்பிடும்போது பயணத்திற்குத் தயாரான உடை அணிந்தவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் மிதியடிகளை அணிந்து, கைத்தடிகளை ஏந்தியவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இது கர்த்தருடைய பஸ்கா பண்டிகை. கர்த்தர் தமது ஜனங்களைப் பாதுகாத்து, எகிப்திலிருந்து விரைவாக வெளியில் கொண்டுவரும் நேரம். “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது.
யாத்திராகமம் 12:5-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம் மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக. அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா. அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.