யாத்திராகமம் 12:21-28

யாத்திராகமம் 12:21-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார். இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள். கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

யாத்திராகமம் 12:21-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உடனேபோய் உங்கள் குடும்பங்களுக்கான மிருகங்களைத் தெரிந்துகொண்டு பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். பின்பு ஒரு கட்டு ஈசோப்புக் குழையை எடுத்து, அதைக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்து, அதில் சிறிதளவு இரத்தத்தைக் கதவு நிலையின் மேற்சட்டத்திலும், அதன் இரண்டு நிலைக்கால்களிலும் பூசுங்கள். காலைவரை உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைக் கடந்து வெளியே போகக்கூடாது. யெகோவா எகிப்தியரை அழிப்பதற்காகத் தேசத்தின் வழியாகக் கடந்துசெல்வார்; அப்பொழுது உங்கள் கதவின், மேல்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தத்தைக் காணும்போது, அவர் அந்த வாசலைக் கடந்துபோவார், அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்க அவர் அனுமதிக்கமாட்டார். “உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்குமான இந்த அறிவுறுத்தல்களை நிரந்தரமாகக் கைக்கொள்ளுங்கள். யெகோவா உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, இந்த வழிபாட்டைக் கைக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த வழிபாடு எதைக் குறிக்கின்றது?’ என்று கேட்பார்கள், அப்பொழுது நீங்கள் அவர்களிடம், ‘யெகோவா எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்துசென்று எங்கள் வீடுகளைத் தப்பவிட்டார். எனவே இது யெகோவாவுக்குச் செலுத்தும் பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள். யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.

யாத்திராகமம் 12:21-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார். இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள். யெகோவா உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள். இஸ்ரவேலர்கள் போய் அப்படியே செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

யாத்திராகமம் 12:21-28 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே எல்லா மூப்பர்களையும் (தலைவர்கள்) ஒன்றாகக் கூடிவரச் செய்தான். மோசே அவர்களிடம், “உங்கள் குடும்பங்களுக்குரிய ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்து, பஸ்கா பண்டிகைக்காக அவற்றைக் கொல்லுங்கள். ஈசோப் தழைகளை எடுத்து, அவற்றை இரத்தம் நிரம்பியிருக்கும் கிண்ணங்களில் தோய்த்து எடுத்து வாசல் நிலைக்கால்களின் பக்கங்களிலும், மேலேயும் இரத்தத்தைப் பூசுங்கள். காலை வரைக்கும் ஒருவனும் அவனது வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது. எகிப்தின் முதற்பேறானவற்றை அழிப்பதற்காக கர்த்தர் கடந்து செல்லும்போது அவர் வாசல் நிலைக்கால்களிலிருக்கும் இரத்தத்தைக் காண்பார். அப்போது கர்த்தர் அந்த வீட்டைப் பாதுகாப்பார். அழிக்கிறவன் உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களைச் சேதப்படுத்த கர்த்தர் அவனை விடமாட்டார். நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும். கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்திற்குப் போன பிறகும் இதை நினைவுகூர்ந்து செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால், நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார். ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள் கர்த்தர் இந்தக் கட்டளையை மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள்.