யாத்திராகமம் 12:1-8

யாத்திராகமம் 12:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா எகிப்திலே மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “இம்மாதம் உங்களுக்கு முதல் மாதம், உங்கள் வருடத்தின் முதலாம் மாதம். நீங்கள், இம்மாதத்தின் பத்தாம்நாள் ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன்தன் குடும்பத்திற்காக வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று முழு இஸ்ரயேல் சமுதாயத்திற்கும் நீங்கள் சொல்லுங்கள். எந்த குடும்பமாவது ஒரு முழு ஆட்டுக்குட்டியை சாப்பிட முடியாத அளவுக்குச் சிறியதாயிருந்தால், அவர்கள் தங்களுக்கு மிக அருகிலுள்ள அண்டை வீட்டாருடன் சேர்ந்து, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அக்குட்டியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஆட்டுக்குட்டியின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். நீ தெரிந்தெடுக்கும் மிருகங்களோ, ஒரு வயதுடைய பழுதற்ற கடாக்களாக இருக்கவேண்டும். இவற்றைச் செம்மறியாடுகளிலிருந்தோ, வெள்ளாடுகளிலிருந்தோ தெரிந்தெடுக்கலாம். அவற்றை மாதத்தின் பதினான்காம் தேதிவரை, வீட்டில் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பின்பு இஸ்ரயேல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் தங்கள் ஆட்டுக்குட்டியை சாயங்கால வேளையில் கொல்லவேண்டும். அதன்பின் அவர்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை சாப்பிடும் வீட்டுக்கதவின் நிலைக்கால் இரண்டிலும், மேற்சட்டத்திலும் பூசவேண்டும். அன்று இரவு இறைச்சியை நெருப்பில் சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிடவேண்டும்.

யாத்திராகமம் 12:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக. நீங்கள் இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளட்டும். ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம். அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும்.

யாத்திராகமம் 12:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது: இம்மாதத்தின் பத்தாவது நாள் ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டினருக்காக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும். ஒரு ஆட்டுக்குட்டியை உண்பதற்கு வேண்டிய ஆட்கள் அவனது வீட்டில் இல்லாதிருந்தால், அவன் அக்கம் பக்கத்தாரில் சிலரை உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு அழைக்க வேண்டும். ஆட்டுக் குட்டி ஒவ்வொருவரும் உண்ணப் போதுமானதாக இருக்கவேண்டும். அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம். மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும். நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும். “இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும்.

யாத்திராகமம் 12:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.