யாத்திராகமம் 12:1-28
யாத்திராகமம் 12:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம் மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக. அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா. அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான். முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம். புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான். புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார். அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார். இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள். கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலை வணங்கிப் பணிந்துகொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
யாத்திராகமம் 12:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா எகிப்திலே மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “இம்மாதம் உங்களுக்கு முதல் மாதம், உங்கள் வருடத்தின் முதலாம் மாதம். நீங்கள், இம்மாதத்தின் பத்தாம்நாள் ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன்தன் குடும்பத்திற்காக வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று முழு இஸ்ரயேல் சமுதாயத்திற்கும் நீங்கள் சொல்லுங்கள். எந்த குடும்பமாவது ஒரு முழு ஆட்டுக்குட்டியை சாப்பிட முடியாத அளவுக்குச் சிறியதாயிருந்தால், அவர்கள் தங்களுக்கு மிக அருகிலுள்ள அண்டை வீட்டாருடன் சேர்ந்து, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அக்குட்டியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஆட்டுக்குட்டியின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். நீ தெரிந்தெடுக்கும் மிருகங்களோ, ஒரு வயதுடைய பழுதற்ற கடாக்களாக இருக்கவேண்டும். இவற்றைச் செம்மறியாடுகளிலிருந்தோ, வெள்ளாடுகளிலிருந்தோ தெரிந்தெடுக்கலாம். அவற்றை மாதத்தின் பதினான்காம் தேதிவரை, வீட்டில் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பின்பு இஸ்ரயேல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் தங்கள் ஆட்டுக்குட்டியை சாயங்கால வேளையில் கொல்லவேண்டும். அதன்பின் அவர்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை சாப்பிடும் வீட்டுக்கதவின் நிலைக்கால் இரண்டிலும், மேற்சட்டத்திலும் பூசவேண்டும். அன்று இரவு இறைச்சியை நெருப்பில் சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிடவேண்டும். இறைச்சியைப் பச்சையாகவோ அல்லது நீரில் சமைத்தோ சாப்பிடக்கூடாது. அதன் தலை, கால்கள், உள் உறுப்புகள் ஆகிய எல்லாவற்றையும் நெருப்பில் சுட்டே சாப்பிடவேண்டும். அவற்றில் எதையும் விடியும்வரை மீதியாக வைக்கவேண்டாம்; காலையில் ஏதும் மிஞ்சியிருந்தால் அவற்றை நெருப்பில் எரிக்கவேண்டும். இவ்விதமாகவே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும்: உங்கள் அங்கிகளை இடுப்புப்பட்டியால் கட்டிக்கொண்டு, கால்களில் செருப்புகளைப் போட்டுக்கொண்டு, உங்கள் கோலை உங்கள் கையில் பிடித்தபடி, அதை அவசரமாக சாப்பிடவேண்டும். இதுவே யெகோவாவின் கடந்துசெல்லுதல், யெகோவாவின் பஸ்கா. “அதே இரவில் நான் எகிப்து வழியாகக் கடந்துசென்று, அங்குள்ள மனிதர் மற்றும் மிருகங்களின் தலையீற்றுகளையும் சாகடிப்பேன். எகிப்திய தெய்வங்கள் எல்லாவற்றின் மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே யெகோவா. இந்த இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளின்மேல் உங்களுக்கான ஒரு அடையாளமாயிருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்தியரைச் சாகடிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொடமாட்டாது. “இது நீங்கள் நினைவுகூரவேண்டிய ஒரு நாள்; தலைமுறைதோறும் யெகோவாவுக்குரிய பண்டிகையாக நீங்கள் இதைக் கொண்டாடவேண்டும்; இது ஒரு நிரந்தர நியமம். புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்கு நீங்கள் சாப்பிடவேண்டும். முதலாம் நாளில் புளிப்பாக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில், முதலாம் நாள் தொடங்கி, ஏழாம் நாள்வரை புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடுகிறவன் எவனோ, அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். முதலாம் நாள் ஒரு பரிசுத்த சபையையும், ஏழாம்நாளில் இன்னுமொரு பரிசுத்த சபையையும் கூட்டுங்கள். அந்நாட்களில் எந்தவித வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். இதை மட்டுமே நீங்கள் செய்யலாம். “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கொண்டாடவேண்டும். ஏனெனில், அந்நாளில்தான் உங்கள் கோத்திரப்பிரிவுகளை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நீங்களும், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமாக அந்நாளைக் கொண்டாடுங்கள். முதலாம் மாதம் பதினான்காம் நாள் மாலைமுதல், அம்மாதத்தின் இருபத்தோராம் நாள் மாலைவரை புளிப்பில்லாத அப்பத்தை நீங்கள் சாப்பிடவேண்டும். புளிப்பூட்டும் பொருட்கள் எதுவும் ஏழுநாட்களுக்கு உங்கள் வீடுகளில் காணப்படக்கூடாது. புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடும் எவனும், அவன் பிறநாட்டினனானாலும் சொந்த இஸ்ரயேலரானாலும் இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து அகற்றப்படவேண்டும். புளிப்பூட்டப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் புளிப்பில்லாத அப்பத்தையே சாப்பிடவேண்டும்” என்றார். அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உடனேபோய் உங்கள் குடும்பங்களுக்கான மிருகங்களைத் தெரிந்துகொண்டு பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். பின்பு ஒரு கட்டு ஈசோப்புக் குழையை எடுத்து, அதைக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்து, அதில் சிறிதளவு இரத்தத்தைக் கதவு நிலையின் மேற்சட்டத்திலும், அதன் இரண்டு நிலைக்கால்களிலும் பூசுங்கள். காலைவரை உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைக் கடந்து வெளியே போகக்கூடாது. யெகோவா எகிப்தியரை அழிப்பதற்காகத் தேசத்தின் வழியாகக் கடந்துசெல்வார்; அப்பொழுது உங்கள் கதவின், மேல்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தத்தைக் காணும்போது, அவர் அந்த வாசலைக் கடந்துபோவார், அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்க அவர் அனுமதிக்கமாட்டார். “உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்குமான இந்த அறிவுறுத்தல்களை நிரந்தரமாகக் கைக்கொள்ளுங்கள். யெகோவா உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, இந்த வழிபாட்டைக் கைக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த வழிபாடு எதைக் குறிக்கின்றது?’ என்று கேட்பார்கள், அப்பொழுது நீங்கள் அவர்களிடம், ‘யெகோவா எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்துசென்று எங்கள் வீடுகளைத் தப்பவிட்டார். எனவே இது யெகோவாவுக்குச் செலுத்தும் பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள். யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.
யாத்திராகமம் 12:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக. நீங்கள் இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளட்டும். ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம். அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள எல்லாவற்றையும் ஒன்றாக நெருப்பினால் சுட்டதாக அதைச் சாப்பிடுங்கள். அதிலே ஒன்றையும் காலைவரை மீதியாக வைக்காமல், காலைவரை அதிலே மீதியாக இருப்பதை அக்கினியால் சுட்டெரியுங்கள். அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா. அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே யெகோவா. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும். அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாக இருக்கட்டும்; அதைக் யெகோவாவுக்குப் பண்டிகையாக அனுசரியுங்கள்; அதை உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக அனுசரிக்கவேண்டும். புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடுவீர்களாக; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான். முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம். புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும். முதலாம் மாதம் பதினான்காம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுவீர்களாக. ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான். புளிப்பிடப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம்; நீங்கள் தங்குமிடங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுங்கள் என்று சொல்” என்றார். அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார். இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள். யெகோவா உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள். இஸ்ரவேலர்கள் போய் அப்படியே செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
யாத்திராகமம் 12:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)
மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது: இம்மாதத்தின் பத்தாவது நாள் ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டினருக்காக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும். ஒரு ஆட்டுக்குட்டியை உண்பதற்கு வேண்டிய ஆட்கள் அவனது வீட்டில் இல்லாதிருந்தால், அவன் அக்கம் பக்கத்தாரில் சிலரை உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு அழைக்க வேண்டும். ஆட்டுக் குட்டி ஒவ்வொருவரும் உண்ணப் போதுமானதாக இருக்கவேண்டும். அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம். மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும். நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும். “இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும். ஆட்டுக்குட்டியை நீங்கள் தண்ணீரில் வேக வைக்கக்கூடாது. அந்த ஆட்டுக்குட்டி முழுவதையும் நெருப்பினால் சுடவேண்டும். அதன் தலை, கால்கள் மற்றும் உள் உறுப்புக்கள் எல்லாம் இருக்க வேண்டும். அந்த இரவுக்குள் நீங்கள் மாமிசம் முழுவதையும் சாப்பிட்டு முடிக்கவேண்டும். காலையில் மாமிசம் மீதியாயிருந்தால் நெருப்பில் அந்த மாமிசத்தை சுட்டு எரிக்கவேண்டும். “நீங்கள் உணவைச் சாப்பிடும்போது பயணத்திற்குத் தயாரான உடை அணிந்தவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் மிதியடிகளை அணிந்து, கைத்தடிகளை ஏந்தியவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இது கர்த்தருடைய பஸ்கா பண்டிகை. கர்த்தர் தமது ஜனங்களைப் பாதுகாத்து, எகிப்திலிருந்து விரைவாக வெளியில் கொண்டுவரும் நேரம். “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது. “இந்த இரவை நீங்கள் எப்போதும் நினைவு கூருவீர்கள். இது உங்களுக்கு ஒரு விசேஷ விடுமுறை நாளாக இருக்கும். எப்போதும் இந்த விடுமுறை நாளில் உங்கள் சந்ததியார் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். இந்த விடுமுறையின் ஏழு நாட்களும் புளிக்காத மாவினால் செய்த ரொட்டியை உண்ணவேண்டும். இந்த விடுமுறையின் முதல் நாளில் புளிப்பான யாவற்றையும் உங்கள் வீடுகளிலிருந்து அகற்ற வேண்டும். இப்பண்டிகையின் ஏழு நாட்களிலும் யாரும் புளிப்பான எதையும் உண்ணக்கூடாது. யாரேனும் புளிப்பானதைச் சாப்பிட்டால், அவன் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து ஒதுக்கப்படவேண்டும். விடுமுறை காலத்தின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் பரிசுத்த சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்நாட்களில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. உங்கள் சாப்பாட்டிற்கான உணவைத் தயாரிப்பது மட்டுமே நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டும். நீங்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை நினைவுகூர வேண்டும். ஏனெனில் இந்நாளில் உங்கள் ஜனங்கள் எல்லோரையும் குழுக்களாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். எனவே உங்கள் எல்லா சந்ததியாரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும். எந்நாளும் நிலைபெற்றிருக்கும் சட்டமாக இது அமையும். எனவே (நிசான்) முதல் மாதத்தின் பதினான்காவது நாளில் நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியை உண்ணத் துவங்க வேண்டும். அதே மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரைக்கும் இந்த புளிப்பில்லாத ரொட்டியைத் தொடர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும். ஏழு நாட்கள் உங்கள் வீடுகளில் எந்தப் புளிப்பான பொருளும் காணப்படக் கூடாது. இஸ்ரவேலின் குடிமகனாகிலும், அந்நியனாகிலும், புளிப்பானதைச் சாப்பிட்டால் அவன் இஸ்ரவேல் ஜனத்தினின்று ஒதுக்கப்பட வேண்டும். இந்த ஓய்வு நாளில் நீங்கள் புளிப்புள்ள உணவை உண்ணவே கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் புளிப்பு இல்லாத மாவால் செய்த ரொட்டியையே உண்ணவேண்டும்” என்றார். மோசே எல்லா மூப்பர்களையும் (தலைவர்கள்) ஒன்றாகக் கூடிவரச் செய்தான். மோசே அவர்களிடம், “உங்கள் குடும்பங்களுக்குரிய ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்து, பஸ்கா பண்டிகைக்காக அவற்றைக் கொல்லுங்கள். ஈசோப் தழைகளை எடுத்து, அவற்றை இரத்தம் நிரம்பியிருக்கும் கிண்ணங்களில் தோய்த்து எடுத்து வாசல் நிலைக்கால்களின் பக்கங்களிலும், மேலேயும் இரத்தத்தைப் பூசுங்கள். காலை வரைக்கும் ஒருவனும் அவனது வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது. எகிப்தின் முதற்பேறானவற்றை அழிப்பதற்காக கர்த்தர் கடந்து செல்லும்போது அவர் வாசல் நிலைக்கால்களிலிருக்கும் இரத்தத்தைக் காண்பார். அப்போது கர்த்தர் அந்த வீட்டைப் பாதுகாப்பார். அழிக்கிறவன் உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களைச் சேதப்படுத்த கர்த்தர் அவனை விடமாட்டார். நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும். கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்திற்குப் போன பிறகும் இதை நினைவுகூர்ந்து செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால், நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார். ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள் கர்த்தர் இந்தக் கட்டளையை மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள்.