யாத்திராகமம் 11:1-10
யாத்திராகமம் 11:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான். இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார். அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான். அப்பொழுது மோசே: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன். அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி, அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை. அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனை விட்டுப் புறப்பட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார். மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.
யாத்திராகமம் 11:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மேலும், எகிப்தின்மேலும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான்; அதுவுமன்றி, உங்களை முழுவதும் துரத்தியும் விடுவான். ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி தங்களுடைய அயலவர்களிடத்தில் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார். அதுவுமன்றி, மோசே எகிப்திலே பார்வோனின் அதிகாரிகளாலும், எகிப்திய மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டான். அப்பொழுது மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘நான் நடு இராத்திரியளவில் எகிப்து எங்கும் கடந்துபோவேன். எகிப்தில் முதற்பேறான ஒவ்வொரு மகனும் சாவான். அரியணையில் இருக்கும் பார்வோனின் முதல் ஆண்பிள்ளைமுதல், திரிகை ஆட்டும் அடிமைப்பெண்ணின் முதல் ஆண்பிள்ளை வரையுள்ள முதல் பிறந்த எல்லா மகன்களும் சாவார்கள்; அத்துடன் மிருகங்களின் தலையீற்றுகள் அனைத்தும் சாகும். எகிப்து நாடெங்கும் முன்பும் பின்பும் இனி ஒருபோதும் இருக்காத பெரிய அழுகுரல் உண்டாகும். ஆனால் இஸ்ரயேலர் மத்தியில் மனிதரையோ, மிருகங்களையோ பார்த்து ஒரு நாயாவது குரைக்கமாட்டாது.’ இதனால் யெகோவா எகிப்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே வித்தியாசத்தைக் காட்டுகிறார் என்பதை நீ அறிந்துகொள்வாய். அப்பொழுது உம்முடைய அதிகாரிகள் எல்லோரும் என்முன் பணிந்து, ‘நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் எங்களைவிட்டுப் புறப்பட்டுப் போங்கள்!’ என்று சொல்வார்கள். அதன்பின் நான் புறப்படுவேன்” என்று சொல்லி மோசே கடுங்கோபத்துடன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மறுப்பான். இதினிமித்தம் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார். இப்படியாக மோசேயும் ஆரோனும் இந்த அதிசயங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள், ஆனாலும் பார்வோனின் இருதயத்தை யெகோவா கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை.
யாத்திராகமம் 11:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான். இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார். அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான். அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன். அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி, அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை. அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான். யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார். மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.
யாத்திராகமம் 11:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது கர்த்தர் மோசேயைப் பார்த்து, “பார்வோனுக்கும், எகிப்துக்கும் எதிராக நான் செய்யவிருக்கும் கேடு இன்னும் ஒன்று உண்டு. இதன் பிறகு, அவன் உங்களை எகிப்திலிருந்து அனுப்பிவிடுவான். உண்மையில், இந்நாட்டை விட்டு நீங்கள் வெளியேறும்படி துரத்துவான். நீ இஸ்ரவேலுக்கு இந்த செய்தியைத் தெரியப்படுத்து: இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் உங்கள் அக்கம் பக்கத்தாரிடம் வெள்ளியாலும் பொன்னாலுமாகிய பொருட்களை உங்களுக்குக் கொடுக்கும்படியாகக் கேட்கவேண்டும். எகிப்தியர்கள் உங்களிடம் இரக்கத்துடன் இருக்கும்படி செய்வேன். எகிப்திய ஜனங்களும், பார்வோனின் சொந்த அதிகாரிகளும்கூட மோசேயைப் பெரியவனாக ஏற்கெனவே கருதுகிறார்கள்” என்றார். மோசே ஜனங்களிடம், “கர்த்தர் ‘இன்று நள்ளிரவில், நான் எகிப்தின் வழியாகச் செல்வேன், எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகள் அனைவரும், எகிப்து மன்னனாகிய பார்வோனின் முதற்பேறான குமாரன் முதல், மாவரைக்கிற அடிமைப் பெண்ணின் முதற்பேறான குமாரன் வரைக்கும் எல்லோரும் மரிப்பார்கள். முதற்பேறான மிருகங்கள் கூட மடியும். கடந்த எந்தக் காலத்தைக் காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாயிருக்கும். வருங்காலத்தில் நடக்கக் கூடியதைக் காட்டிலும் அது கொடியதாக இருக்கும். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவரும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு நாய் கூட அவர்களைப் பார்த்துக் குரைக்காது. இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவனும், மிருகங்களில் ஒன்றும் காயமடைவதில்லை. இதன் மூலமாக, எகிப்தியரைக் காட்டிலும் இஸ்ரவேலரை நான் வித்தியாசமாக நடத்துவதை நீங்கள் அறிவீர்கள். அப்போது உங்கள் அடிமைகள் (எகிப்தியர்கள்) எல்லோரும் குனிந்து என்னைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள், “உங்கள் ஜனங்களை உங்களோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்லுங்கள்” என்பார்கள். அப்போது கோபத்தோடு நான் பார்வோனை விட்டுப் புறப்படுவேன்!’ என்றார்” என்று கூறினான். பின்பு கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் நீ சொன்னதைக் கேட்கவில்லை, ஏன்? நான் எகிப்தில் என் மகா வல்லமையைக் காட்ட அப்போதுதான் முடியும்” என்றார். எனவே தான், மோசேயும், ஆரோனும் இம்மகா அற்புதங்களை பார்வோனுக்கு முன்பாகச் செய்து காட்டினார்கள். இதனாலேயே இஸ்ரவேல் ஜனங்களைத் தனது தேசத்திலிருந்து அனுப்பாதபடி பார்வோனைப் பிடிவாதமுள்ளவனாக கர்த்தர் ஆக்கினார்.