யாத்திராகமம் 10:21-29
யாத்திராகமம் 10:21-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று, மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான். அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும். எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான். கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான். பார்வோன் அவனை நோக்கி: என்னை விட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான். அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.
யாத்திராகமம் 10:21-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “உன் கையை வானத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது எல்லோரும் உணரக்கூடிய இருள் எகிப்தின்மேல் உண்டாகும்” என்றார். மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினான். அப்பொழுது மூன்று நாட்கள் முழுமையான இருள் எகிப்து முழுவதையும் மூடியது. மூன்று நாட்களுக்கு யாரும் வேறொருவரைப் பார்க்கவோ அல்லது தங்கள் இடத்திலிருந்து புறப்படவோ முடியாதிருந்தது. ஆனாலும் இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் அவர்களுக்கு வெளிச்சம் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து அவனிடம், “நீங்கள் போய் உங்கள் யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். உங்களுடன் உங்கள் பெண்களும், பிள்ளைகளும் போகலாம். ஆனால் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் இங்கே விட்டுவிட்டுப் போங்கள்” என்றான். அதற்கு மோசே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிகளையும், தகன காணிக்கைகளையும் நாம் எடுத்துச்செல்ல நீர் எங்களை அனுமதிக்கவேண்டும். எங்கள் மிருகங்களும் எங்களோடு வரவேண்டும். ஒரு மிருகத்தையாவது விட்டுச்செல்லக் கூடாது. எங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதற்கு அவைகளிலிருந்து சிலவற்றை எடுக்கவேண்டும். நாங்கள் அங்கேபோய்ச் சேருமட்டும், நாங்கள் எதைக்கொண்டு யெகோவாவை வழிபடுவோம் என்று எங்களுக்குத் தெரியாது” என்றான். யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை. பார்வோன் மோசேயிடம், “நீ என் கண்முன் நில்லாதே, போ! திரும்பவும் என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாயிரு! நீ என் முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான். அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே இனி ஒருபோதும் நான் உமது முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றான்.
யாத்திராகமம் 10:21-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது. மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; “நீங்கள் போய்க் யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம்” என்றான். அதற்கு மோசே: “நாங்கள் எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும். எங்களுடைய மிருகஜீவன்களும் எங்களுடன் வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு ஆராதனை செய்வதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு யெகோவாவுக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது” என்றான். யெகோவா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான். பார்வோன் அவனை நோக்கி: “என்னைவிட்டு அந்தப்பக்கம் போ; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்காதபடி எச்சரிக்கையாக இரு; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான். அப்பொழுது மோசே: “நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன்” என்றான்.
யாத்திராகமம் 10:21-29 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயை நோக்கி, “உனது கைகளை மேலே உயர்த்து. எகிப்தை இருள் மூடும். நீங்கள் உணர்ந்துகொள்ளுமளவிற்கு இருள் மிகுதியாக இருக்கும்!” என்றார். மோசே கைகளை மேலே உயர்த்தியபோது, இருண்ட மேகமானது எகிப்தை மறைத்தது. எகிப்தை மூன்று நாட்கள் இருள் மூடியது. ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. மூன்று நாட்களாக எந்த இடத்திற்கும் போவதற்காக ஜனங்கள் எழுந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஒளி இருந்தது. பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான். மோசே, “நாங்கள் போகும்போது எங்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, எங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குப் பயன்படுத்தும்பொருட்டுப் பலிகளையும், காணிக்கைகளையும் நீங்களே கூட எங்களுக்குக் கொடுப்பீர்கள்! ஆம், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு நாங்கள் எங்கள் மிருகங்களையும் கொண்டு செல்வோம். எந்த மிருகத்தின் குளம்பையும்கூட விட்டுச் செல்லமாட்டோம். கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குத் தேவைப்படுபவை எவை என்பதை இன்னமும் நாங்கள் சரியாக அறியவில்லை. நாங்கள் போகவிருக்கும் இடத்தை அடையும்போதுதான் அதை அறிந்துகொள்வோம், எனவே இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும்” என்றான். கர்த்தர் பார்வோனை இன்னும் பிடிவாதம் உடையவனாக்கினார். எனவே பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்தான். பிறகு பார்வோன் மோசேயிடம், “இங்கிருந்து போய்விடு! நீ இங்கு மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை! என்னைப் பார்க்க நீ மீண்டும் வந்தால் நீ சாவாய்” என்று கூறினான். அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.