யாத்திராகமம் 10:1-29
யாத்திராகமம் 10:1-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போ; நான் இந்த அற்புத அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்வதற்காகத்தான் அவன் இருதயத்தையும், அவன் அதிகாரிகளுடைய இருதயங்களையும் கடினப்படுத்தியிருக்கிறேன். மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார். எனவே, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் அவனிடம், “எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நீ எவ்வளவு காலத்திற்கு எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்த மறுப்பாய்? என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு. நீ அவர்களைப் போகவிட மறுத்தால், நாளைக்கு உன் நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டுவருவேன். அவை நிலமே தெரியாதபடி தரையின் மேற்பரப்பு முழுவதையும் மூடும். அவை வயல்வெளியில் பனிக்கட்டிக்குத் தப்பியிருக்கும் தாவரங்கள் உட்பட, முளைக்கும் எல்லா மரங்களையும் தின்றுவிடும். அவை உன் வீடுகளையும், உன் அதிகாரிகளின் வீடுகளையும், எகிப்தியருடைய எல்லா வீடுகளையும் நிரப்பும். உன் தந்தையரோ, முற்பிதாக்களோ அவர்கள் இங்கு குடியேறிய காலத்திலிருந்து இன்றுவரை அப்படிப்பட்டதை ஒருபோதும் கண்டதில்லை’ என்று சொல்லி” மோசே பார்வோனை விட்டுத் திரும்பிப்போனான். பார்வோனின் அதிகாரிகள் அவனிடம், “எதுவரை இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்ய அந்த மனிதரைப் போகவிடும். எகிப்து நாடு பாழாய் போனதை நீர் இன்னும் உணரவில்லையா?” என்றார்கள். எனவே மோசேயும் ஆரோனும் திரும்பவும் பார்வோனிடம் அழைத்துவரப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “நீங்கள் போய் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால் போகிறவர்கள் யார்?” என்று கேட்டான். அதற்கு மோசே, “எங்கள் வாலிபரோடும், முதியோரோடும், எங்கள் மகன்கள், மகள்கள் எங்கள் ஆட்டு மந்தைகளோடும், மாட்டு மந்தைகளோடும் நாங்கள் போவோம். எங்கள் யெகோவாவுக்கு நாங்கள் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான். அதற்குப் பார்வோன் அவனிடம், “என்ன! உங்கள் பெண்களோடும், பிள்ளைகளோடும் உங்களைப் போகவிட்டு, ‘யெகோவா உங்களோடுகூட இருப்பாராக’ என்று சொல்லச் சொல்கிறாயா? நிச்சயமாக நீ தீயநோக்கமே கொண்டுள்ளாய். இல்லை! ஆண்கள் மட்டும் போகட்டும்; போய் உங்கள் யெகோவாவை வழிபடட்டும். அதைத்தானே நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்” என்றான். பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோன் முன்னிலையிலிருந்து துரத்திவிடப்பட்டார்கள். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்தின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது நாட்டின்மேல் வெட்டுக்கிளிக் கூட்டம் வந்து ஆலங்கட்டி மழைக்குத் தப்பி, வயல்வெளிகளில் முளைக்கும் எல்லாவற்றையும் தின்றுவிடும்” என்றார். மோசே தன் கோலை எகிப்தின்மேல் நீட்டினான். அப்பொழுது யெகோவா, அன்று பகலும் இரவும் கொண்டல் காற்றை கிழக்கிலிருந்து நாட்டின்மேல் வீசச்செய்தார். காலையில் அக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. அவை எகிப்தின்மேல் படையாக வந்து, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெருந்தொகையாக இறங்கின. வெட்டுக்கிளிகளினால் உண்டான இப்படிப்பட்ட வாதை இதற்குமுன் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை. அவை நாட்டின் மேற்பரப்பு முழுவதையும் மூடியதனால் நிலம் கருமையாயிற்று. ஆலங்கட்டி மழைக்குப்பின், தப்பிய எல்லா பயிர்களையும், மரங்களிலுள்ள பழங்களையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடு முழுவதிலும் உள்ள மரங்களிலோ, செடிகளிலோ பச்சையானது ஒன்றும் மீந்திருக்கவில்லை. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாய் அழைப்பித்து, அவர்களிடம், “நான் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாய்ப் பாவம் செய்துவிட்டேன். ஆகையால் இன்னொருமுறை என் பாவத்தை மன்னித்து, இந்த மரண வாதையை என்னைவிட்டு எடுத்துப்போடும்படி உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடுங்கள்” என்றான். அப்பொழுது மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான். யெகோவா காற்றைப் பலத்த காற்றாக மேற்கு பக்கத்திற்குத் திருப்பி வீசச்செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிக் கொண்டுபோய் செங்கடலுக்குள் சேர்த்தது. எகிப்தின் எல்லைக்குள் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீந்திருக்கவில்லை. ஆனாலும் யெகோவா பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினார். அவன் இஸ்ரயேலரைப் போகவிடவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “உன் கையை வானத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது எல்லோரும் உணரக்கூடிய இருள் எகிப்தின்மேல் உண்டாகும்” என்றார். மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினான். அப்பொழுது மூன்று நாட்கள் முழுமையான இருள் எகிப்து முழுவதையும் மூடியது. மூன்று நாட்களுக்கு யாரும் வேறொருவரைப் பார்க்கவோ அல்லது தங்கள் இடத்திலிருந்து புறப்படவோ முடியாதிருந்தது. ஆனாலும் இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் அவர்களுக்கு வெளிச்சம் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து அவனிடம், “நீங்கள் போய் உங்கள் யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். உங்களுடன் உங்கள் பெண்களும், பிள்ளைகளும் போகலாம். ஆனால் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் இங்கே விட்டுவிட்டுப் போங்கள்” என்றான். அதற்கு மோசே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிகளையும், தகன காணிக்கைகளையும் நாம் எடுத்துச்செல்ல நீர் எங்களை அனுமதிக்கவேண்டும். எங்கள் மிருகங்களும் எங்களோடு வரவேண்டும். ஒரு மிருகத்தையாவது விட்டுச்செல்லக் கூடாது. எங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதற்கு அவைகளிலிருந்து சிலவற்றை எடுக்கவேண்டும். நாங்கள் அங்கேபோய்ச் சேருமட்டும், நாங்கள் எதைக்கொண்டு யெகோவாவை வழிபடுவோம் என்று எங்களுக்குத் தெரியாது” என்றான். யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை. பார்வோன் மோசேயிடம், “நீ என் கண்முன் நில்லாதே, போ! திரும்பவும் என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாயிரு! நீ என் முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான். அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே இனி ஒருபோதும் நான் உமது முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றான்.
யாத்திராகமம் 10:1-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி, நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன்” என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து: “நீ எதுவரைக்கும் உன்னைத் தாழ்த்த மனமில்லாமல் இருப்பாய்? என்னுடைய சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. நீ என்னுடைய மக்களைப் போகவிடமாட்டேன் என்று சொன்னால், நான் நாளைக்கு உன்னுடைய எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச்செய்வேன். தரையை காணமுடியாதபடி அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும். உன்னுடைய வீடுகளும் உன்னுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளும் எகிப்தியர்களின் வீடுகளும் அவைகளால் நிரம்பும்; உன்னுடைய தகப்பன்களும் உன்னுடைய தகப்பன்களின் தகப்பன்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்த நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்று சொல்லி, திரும்பி பார்வோனை விட்டுப் புறப்பட்டான். அப்பொழுது பார்வோனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: “எதுவரைக்கும் இந்த மனிதன் நமக்குத் தொல்லை கொடுக்கிறவனாக இருப்பான்? தங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதர்களைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா” என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: “நீங்கள் போய் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யார் யார் போகிறார்கள்” என்று கேட்டான். அதற்கு மோசே: “எங்களுடைய வாலிபர்களோடும், எங்களுடைய முதியோர்களோடும், எங்களுடைய மகன்களோடும், எங்களுடைய மகள்களோடும், எங்களுடைய ஆடுகளையும், எங்களுடைய மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான். அப்பொழுது அவன்: “நான் உங்களையும் உங்களுடைய குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே யெகோவா உங்களுடன் இருப்பாராக; எச்சரிக்கையாக இருங்கள், உங்களுக்கு தீங்குநேரிடும்; அப்படி வேண்டாம்; ஆண்களாகிய நீங்கள் போய், யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது” என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு” என்றார். அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலையில் கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாக இறங்கியது; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன்பு இருந்ததும் இல்லை, அதற்குப்பின்பு இருப்பதும் இல்லை. அவைகள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடியது; தேசம் அவைகளால் இருளடைந்தது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் எல்லாவற்றையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் சாப்பிட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையைக் கூட மீதியாக வைக்கவில்லை. அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் விரைவாக அழைத்து: “உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன். இந்த ஒருமுறைமட்டும் நீ என்னுடைய பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா இந்த மரணத்தைமட்டும் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்செய்யுங்கள்” என்றான். அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான். அப்பொழுது யெகோவா மகா பலத்த மேற்குக்காற்றை வீசும்படிச் செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளிகூட மீதியாக இருக்கவில்லை. யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் போகவிடவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது. மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; “நீங்கள் போய்க் யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம்” என்றான். அதற்கு மோசே: “நாங்கள் எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும். எங்களுடைய மிருகஜீவன்களும் எங்களுடன் வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு ஆராதனை செய்வதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு யெகோவாவுக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது” என்றான். யெகோவா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான். பார்வோன் அவனை நோக்கி: “என்னைவிட்டு அந்தப்பக்கம் போ; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்காதபடி எச்சரிக்கையாக இரு; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான். அப்பொழுது மோசே: “நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன்” என்றான்.
யாத்திராகமம் 10:1-29 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போ. அவனையும், அவனது அதிகாரிகளையும் பிடிவாதம் உடையவர்களாக்கினேன். எனது வல்லமைமிக்க அற்புதங்களை அவர்களுக்குக் காட்டும்படியாக நான் இதைச் செய்தேன். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார். ஆகையால் மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்றார்கள். அவர்கள் அவனை நோக்கி, “எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எத்தனை காலம் எனக்குக் கீழ்ப்படிய மறுப்பாய்? எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்வதற்குப் போக அனுமதி! நீ எனது ஜனங்களைப் போகவிடாவிட்டால், நாளை உனது நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன். வெட்டுக்கிளிகள் நாட்டை ஆக்கிரமிக்கும். பூமியைப் பார்க்க முடியாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் நிரம்பும். புயலின் அழிவிற்குத் தப்பியவை அனைத்தும் வெட்டுக்கிளிகளால் அழிக்கப்படும். வயலிலுள்ள மரங்களின் இலைகள் அனைத்தையும் வெட்டுக்களிகள் தின்றுவிடும். உனது வீட்டிலும், உனது அதிகாரிகளின் வீடுகளிலும், எகிப்திலுள்ள எல்லா வீடுகளிலும் வெட்டுக்கிளிகள் நிறைந்துவிடும். உங்கள் பிதாக்களோ, முற்பிதாக்களோ, பார்த்திராத அளவிற்கு வெட்டுக்கிளிகள் காணப்படும். எகிப்தில் ஜனங்கள் வாழ ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை பார்த்த வெட்டுக்கிளிகளைக் காட்டிலும் அதிகமான வெட்டுக்கிளிகள் காணப்படும் என்கிறார்’” என்று சொன்னார்கள். பிறகு மோசே திரும்பி, பார்வோனை விட்டுப் புறப்பட்டான். அப்போது அதிகாரிகள் பார்வோனிடம், “இந்த ஜனங்களால் எத்தனை நாட்கள் நாம் இக்கட்டில் அகப்பட்டிருப்போம்? அவர்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ள அந்த ஜனங்களைப் போகவிடும். நீர் அவர்களைப் போகவிடாவிட்டால், நீர் அறிந்துகொள்ளும் முன்பு எகிப்து அழிக்கப்படும்!” என்று கூறினார்கள். எனவே பார்வோன் மோசேயையும், ஆரோனையும் திரும்பவும் தன்னிடம் அழைக்கும்படிக்கு அதிகாரிகளை அனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “நீங்கள் போய், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், ஆனால் யார், யார் போகப்போகிறீர்கள் என்பதைச் சரியாக எனக்குக் கூறுங்கள்” என்றான். மோசே பதிலாக, “இளைஞரும், முதியோருமாகிய எல்லா ஜனங்களும் போவோம். எங்களோடு எங்கள் குமாரர்களையும், குமாரத்திகளையும், ஆடுகளையும், மாடுகளையும், அழைத்துச் செல்வோம். கர்த்தரின் பண்டிகை எங்கள் எல்லோருக்கும் உரியது என்பதால் நாங்கள் எல்லோரும் போவோம்” என்று கூறினான். பார்வோன் அவர்களிடம், “நான் உங்களையும் உங்கள் ஜனங்களையும் எகிப்தைவிட்டுப் போகும்படியாக அனுமதிக்கும் முன்னர் கர்த்தர் உங்களோடு கண்டிப்பாக இருக்கவேண்டும். பாருங்கள், நீங்கள் தீமையான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள். ஆண்கள் மாத்திரம் போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம். நீங்கள் முதலில் அதைத்தான் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் ஜனங்கள் எல்லாரும் போகமுடியாது” என்று கூறி, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அனுப்பிவிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி, “இப்போது உன் கைகளை எகிப்து தேசத்திற்கு மேலாக உயர்த்து, அப்போது எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வந்து பரவும். புயல் அழிக்காமல்விட்ட எல்லா தாவரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிடும்” என்றார். எனவே, மோசே தனது கைத்தடியை எகிப்து நாட்டிற்கு மேலாக உயர்த்தினான். கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசும்படியாக கர்த்தர் செய்தார். பகலும் இரவும் காற்று வீசிற்று. காலையில் காற்று எகிப்திற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்திருந்தது. வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டிற்குள் வந்து பூமியில் விழுந்தன. எகிப்தில் அதுவரை அந்த அளவில் வெட்டுக்கிளிகள் வந்ததுமில்லை, இனி மேலும் அத்தனை எண்ணிக்கை வெட்டுக்கிளிகள் எகிப்தில் வருவதும் இல்லை. வெட்டுக்கிளிகள் தேசம் முழுவதும் பூமி மேல் இருள் மூடும்வரை நிரப்பின. கல்மழை அழிக்காமல் விட்ட மரங்களின் கனிகளையும், பூமியிலுள்ள தாவரங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிட்டன. எகிப்தில் எங்கும் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலைகூட இருக்கவில்லை. பார்வோன் அவசரமாக மோசேயையும், ஆரோனையும் அழைத்துவரச் செய்து, “நான் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் எதிராகப் பாவம் செய்தேன். இம்முறை எனது பாவங்களுக்காக என்னை மன்னியுங்கள். இந்த ‘மரணத்தை’ (வெட்டுக்கிளிகளை) என்னிடமிருந்து அகற்றுவதற்கு கர்த்தரிடம் கேளுங்கள்” என்றான். மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான். எனவே, கர்த்தர் காற்றின் திசையை மாற்றி மேற்கிலிருந்து மிகப் பலமான காற்று ஒன்று வீசும்படியாகச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை எகிப்திலிருந்து அகற்றி, செங்கடலில் விழச்செய்தது. எகிப்தில் ஒரு வெட்டுக்கிளிகூட இருக்கவில்லை! ஆனால், பார்வோன் மீண்டும் பிடிவாதமாக இருக்குமாறு கர்த்தர் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்குப் பார்வோன் அனுமதிதரவில்லை. கர்த்தர் மோசேயை நோக்கி, “உனது கைகளை மேலே உயர்த்து. எகிப்தை இருள் மூடும். நீங்கள் உணர்ந்துகொள்ளுமளவிற்கு இருள் மிகுதியாக இருக்கும்!” என்றார். மோசே கைகளை மேலே உயர்த்தியபோது, இருண்ட மேகமானது எகிப்தை மறைத்தது. எகிப்தை மூன்று நாட்கள் இருள் மூடியது. ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. மூன்று நாட்களாக எந்த இடத்திற்கும் போவதற்காக ஜனங்கள் எழுந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஒளி இருந்தது. பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான். மோசே, “நாங்கள் போகும்போது எங்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, எங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குப் பயன்படுத்தும்பொருட்டுப் பலிகளையும், காணிக்கைகளையும் நீங்களே கூட எங்களுக்குக் கொடுப்பீர்கள்! ஆம், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு நாங்கள் எங்கள் மிருகங்களையும் கொண்டு செல்வோம். எந்த மிருகத்தின் குளம்பையும்கூட விட்டுச் செல்லமாட்டோம். கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குத் தேவைப்படுபவை எவை என்பதை இன்னமும் நாங்கள் சரியாக அறியவில்லை. நாங்கள் போகவிருக்கும் இடத்தை அடையும்போதுதான் அதை அறிந்துகொள்வோம், எனவே இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும்” என்றான். கர்த்தர் பார்வோனை இன்னும் பிடிவாதம் உடையவனாக்கினார். எனவே பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்தான். பிறகு பார்வோன் மோசேயிடம், “இங்கிருந்து போய்விடு! நீ இங்கு மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை! என்னைப் பார்க்க நீ மீண்டும் வந்தால் நீ சாவாய்” என்று கூறினான். அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.
யாத்திராகமம் 10:1-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ, அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும், நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன். தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும். உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப் பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான். அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யாரார் போகிறார்கள் என்று கேட்டான். அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான். அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும். அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்தி விடப்பட்டார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார். அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இராமுழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார்; விடியற்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததும் இல்லை, அதற்குப்பின் இருப்பதும் இல்லை. அவைகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப்போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன். இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவைமாத்திரம் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள் என்றான். அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுகிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை. கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று, மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான். அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும். எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான். கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான். பார்வோன் அவனை நோக்கி: என்னை விட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான். அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.