யாத்திராகமம் 10:1-11

யாத்திராகமம் 10:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ, அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும், நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன். தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும். உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப் பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான். அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யாரார் போகிறார்கள் என்று கேட்டான். அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான். அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும். அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்தி விடப்பட்டார்கள்.

யாத்திராகமம் 10:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போ; நான் இந்த அற்புத அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்வதற்காகத்தான் அவன் இருதயத்தையும், அவன் அதிகாரிகளுடைய இருதயங்களையும் கடினப்படுத்தியிருக்கிறேன். மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார். எனவே, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் அவனிடம், “எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நீ எவ்வளவு காலத்திற்கு எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்த மறுப்பாய்? என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு. நீ அவர்களைப் போகவிட மறுத்தால், நாளைக்கு உன் நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டுவருவேன். அவை நிலமே தெரியாதபடி தரையின் மேற்பரப்பு முழுவதையும் மூடும். அவை வயல்வெளியில் பனிக்கட்டிக்குத் தப்பியிருக்கும் தாவரங்கள் உட்பட, முளைக்கும் எல்லா மரங்களையும் தின்றுவிடும். அவை உன் வீடுகளையும், உன் அதிகாரிகளின் வீடுகளையும், எகிப்தியருடைய எல்லா வீடுகளையும் நிரப்பும். உன் தந்தையரோ, முற்பிதாக்களோ அவர்கள் இங்கு குடியேறிய காலத்திலிருந்து இன்றுவரை அப்படிப்பட்டதை ஒருபோதும் கண்டதில்லை’ என்று சொல்லி” மோசே பார்வோனை விட்டுத் திரும்பிப்போனான். பார்வோனின் அதிகாரிகள் அவனிடம், “எதுவரை இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்ய அந்த மனிதரைப் போகவிடும். எகிப்து நாடு பாழாய் போனதை நீர் இன்னும் உணரவில்லையா?” என்றார்கள். எனவே மோசேயும் ஆரோனும் திரும்பவும் பார்வோனிடம் அழைத்துவரப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “நீங்கள் போய் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால் போகிறவர்கள் யார்?” என்று கேட்டான். அதற்கு மோசே, “எங்கள் வாலிபரோடும், முதியோரோடும், எங்கள் மகன்கள், மகள்கள் எங்கள் ஆட்டு மந்தைகளோடும், மாட்டு மந்தைகளோடும் நாங்கள் போவோம். எங்கள் யெகோவாவுக்கு நாங்கள் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான். அதற்குப் பார்வோன் அவனிடம், “என்ன! உங்கள் பெண்களோடும், பிள்ளைகளோடும் உங்களைப் போகவிட்டு, ‘யெகோவா உங்களோடுகூட இருப்பாராக’ என்று சொல்லச் சொல்கிறாயா? நிச்சயமாக நீ தீயநோக்கமே கொண்டுள்ளாய். இல்லை! ஆண்கள் மட்டும் போகட்டும்; போய் உங்கள் யெகோவாவை வழிபடட்டும். அதைத்தானே நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்” என்றான். பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோன் முன்னிலையிலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.

யாத்திராகமம் 10:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி, நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன்” என்றார். அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து: “நீ எதுவரைக்கும் உன்னைத் தாழ்த்த மனமில்லாமல் இருப்பாய்? என்னுடைய சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. நீ என்னுடைய மக்களைப் போகவிடமாட்டேன் என்று சொன்னால், நான் நாளைக்கு உன்னுடைய எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச்செய்வேன். தரையை காணமுடியாதபடி அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும். உன்னுடைய வீடுகளும் உன்னுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளும் எகிப்தியர்களின் வீடுகளும் அவைகளால் நிரம்பும்; உன்னுடைய தகப்பன்களும் உன்னுடைய தகப்பன்களின் தகப்பன்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்த நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்று சொல்லி, திரும்பி பார்வோனை விட்டுப் புறப்பட்டான். அப்பொழுது பார்வோனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: “எதுவரைக்கும் இந்த மனிதன் நமக்குத் தொல்லை கொடுக்கிறவனாக இருப்பான்? தங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதர்களைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா” என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: “நீங்கள் போய் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யார் யார் போகிறார்கள்” என்று கேட்டான். அதற்கு மோசே: “எங்களுடைய வாலிபர்களோடும், எங்களுடைய முதியோர்களோடும், எங்களுடைய மகன்களோடும், எங்களுடைய மகள்களோடும், எங்களுடைய ஆடுகளையும், எங்களுடைய மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான். அப்பொழுது அவன்: “நான் உங்களையும் உங்களுடைய குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே யெகோவா உங்களுடன் இருப்பாராக; எச்சரிக்கையாக இருங்கள், உங்களுக்கு தீங்குநேரிடும்; அப்படி வேண்டாம்; ஆண்களாகிய நீங்கள் போய், யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது” என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.

யாத்திராகமம் 10:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போ. அவனையும், அவனது அதிகாரிகளையும் பிடிவாதம் உடையவர்களாக்கினேன். எனது வல்லமைமிக்க அற்புதங்களை அவர்களுக்குக் காட்டும்படியாக நான் இதைச் செய்தேன். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார். ஆகையால் மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்றார்கள். அவர்கள் அவனை நோக்கி, “எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எத்தனை காலம் எனக்குக் கீழ்ப்படிய மறுப்பாய்? எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்வதற்குப் போக அனுமதி! நீ எனது ஜனங்களைப் போகவிடாவிட்டால், நாளை உனது நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன். வெட்டுக்கிளிகள் நாட்டை ஆக்கிரமிக்கும். பூமியைப் பார்க்க முடியாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் நிரம்பும். புயலின் அழிவிற்குத் தப்பியவை அனைத்தும் வெட்டுக்கிளிகளால் அழிக்கப்படும். வயலிலுள்ள மரங்களின் இலைகள் அனைத்தையும் வெட்டுக்களிகள் தின்றுவிடும். உனது வீட்டிலும், உனது அதிகாரிகளின் வீடுகளிலும், எகிப்திலுள்ள எல்லா வீடுகளிலும் வெட்டுக்கிளிகள் நிறைந்துவிடும். உங்கள் பிதாக்களோ, முற்பிதாக்களோ, பார்த்திராத அளவிற்கு வெட்டுக்கிளிகள் காணப்படும். எகிப்தில் ஜனங்கள் வாழ ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை பார்த்த வெட்டுக்கிளிகளைக் காட்டிலும் அதிகமான வெட்டுக்கிளிகள் காணப்படும் என்கிறார்’” என்று சொன்னார்கள். பிறகு மோசே திரும்பி, பார்வோனை விட்டுப் புறப்பட்டான். அப்போது அதிகாரிகள் பார்வோனிடம், “இந்த ஜனங்களால் எத்தனை நாட்கள் நாம் இக்கட்டில் அகப்பட்டிருப்போம்? அவர்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ள அந்த ஜனங்களைப் போகவிடும். நீர் அவர்களைப் போகவிடாவிட்டால், நீர் அறிந்துகொள்ளும் முன்பு எகிப்து அழிக்கப்படும்!” என்று கூறினார்கள். எனவே பார்வோன் மோசேயையும், ஆரோனையும் திரும்பவும் தன்னிடம் அழைக்கும்படிக்கு அதிகாரிகளை அனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “நீங்கள் போய், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், ஆனால் யார், யார் போகப்போகிறீர்கள் என்பதைச் சரியாக எனக்குக் கூறுங்கள்” என்றான். மோசே பதிலாக, “இளைஞரும், முதியோருமாகிய எல்லா ஜனங்களும் போவோம். எங்களோடு எங்கள் குமாரர்களையும், குமாரத்திகளையும், ஆடுகளையும், மாடுகளையும், அழைத்துச் செல்வோம். கர்த்தரின் பண்டிகை எங்கள் எல்லோருக்கும் உரியது என்பதால் நாங்கள் எல்லோரும் போவோம்” என்று கூறினான். பார்வோன் அவர்களிடம், “நான் உங்களையும் உங்கள் ஜனங்களையும் எகிப்தைவிட்டுப் போகும்படியாக அனுமதிக்கும் முன்னர் கர்த்தர் உங்களோடு கண்டிப்பாக இருக்கவேண்டும். பாருங்கள், நீங்கள் தீமையான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள். ஆண்கள் மாத்திரம் போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம். நீங்கள் முதலில் அதைத்தான் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் ஜனங்கள் எல்லாரும் போகமுடியாது” என்று கூறி, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அனுப்பிவிட்டான்.